“தேமுதிக நிர்வாகிகள் சிலர் பிரேமலதா மேல அதிருப்தியில இருக்காங்களாம்” என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“விஜயகாந்த் காலமாகி இன்னும் ஒரு மாசம்கூட ஆகலியே. அதுக்குள்ள பிரேமலதா மேல கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தியா? அப்படி என்ன நடந்துச்சுன்னு அவங்க அதிருப்தியில இருக்காங்க?”
“விஜயகாந்த் காலமான செய்தி வெளியானதும் முதல் ஆளா அவருக்கு அஞ்சலி செலுத்தப் போனவர் முதல்வர் ஸ்டாலின். அரசு மரியாதையோட விஜயகாந்த் உடலை அடக்கம் செய்யவும் அவர் உத்தரவிட்டார். பிரேமலதா விருப்பப்படி தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலை அடக்கம் செய்யவும் ஏற்பாடு செஞ்சார். இறுதிச் சடங்கு நடக்கும்போதும் மகன் உதயநிதி மற்றும் அமைச்சர்களுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். இப்படி விஜயகாந்துக்காக பல விஷயங்களை செஞ்ச முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரா பிரேமலதா அறிக்கை விட்டது அவங்களுக்கு பிடிக்கல.”
“ரிஷிவந்தியம் விஷயத்தைத்தானே சொல்றே?”
“ஆமாம். ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரா விஜயகாந்த் இருந்தப்ப அமைச்ச பேருந்து நிலைய நிழற்குடைகளை திமுக அரசு அகற்றிட்டு வர்றதாவும், இதன்மூலமா கேப்டனோட மக்கள் பணிகளை மறைக்க இந்த அரசு முயற்சி செய்யுதுன்னும் பிரேமலதா குற்றம் சாட்டி இருக்கார். இதைக் கண்டிச்சு 20-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்னும் பிரேமலதா அறிவிச்சிருக்கார். இது அவங்க கட்சிப் பிரமுகர்களுக்கே பிடிக்கலை. விஜயகாந்த் இறந்தப்ப துணையா இருந்த திமுகவுக்கு எதிரா அண்ணியார் இவ்வளவு சீக்கிரம் கத்தி வீசி இருக்க வேணாம். இதுபத்தி முதல்வர்கிட்ட அவர் போன்ல பேசினாலே முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பார்னு அவங்க நினைக்கறாங்க”
“காரணம் இல்லாம பிரேமலதா அறிக்கை விட்டிருக்க மாட்டாங்களே?”
“காரணம் இருக்கு. தேமுதிக வாக்கு வங்கியை வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல பயன்படுத்திக்க பாஜக நினைக்குது. நாடாளுமன்ற தேர்தல்ல தேமுதிகவோட கூட்டணி அமைக்கறது பத்தி பிரேமலதாகிட்ட பாஜக மேலிட தலைவர்கள் சிலர் பேசி இருக்காங்க. அதுக்கு பிரேமலதா சம்மதம் தெரிவிச்ச பிறகுதான் பிரதமர் கேப்டனைப்பத்தி கட்டுரை எழுதினார்னும், மத்திய அமைச்சர்கள் சிலர் சென்னைக்கு வந்து கேப்டன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்னும் கமலாலயத்துல பேசிக்கறாங்க. இந்த சூழல்ல தமிழக அரசுக்கு எதிரான தன்னோட பிரச்சாரத்தை இந்த அறிக்கை மூலமா பிரேமலதா தொடங்கி இருக்கார்.”
“வேற எந்த கட்சிகளையெல்லாம் பாஜக வளைக்கப் பாக்குது?”
“பாரதிய ஜனதாவோட கூட்டணி இல்லைன்னு எடப்பாடி பழனிசாமி உறுதியா அறிவிச்ச நிலையில 3-வது அமைக்கறதுல பாஜக தீவிரமா இருக்கு. ஒரு பக்கம் அண்ணாமலை ஜாதி அமைப்புகள்கிட்ட பேசறார். இன்னொரு பக்கம் பாமக, ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், கிருஷ்ணசுவாமிகிட்டயும் பாஜக தலைவர்கள் மறைமுகமா பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்க. இதுல மத்த கட்சிங்க எல்லாம் ஓகே சொன்னாலும் பாமகதான் கொஞ்சம் யோசிக்குதாம்.”
“உதயநிதிக்கு துணை முதலவர் பதவி கொடுக்கப் போறதா திடீர்னு ஒரு பேச்சு வந்ததே?”
“அதைத்தான் உதயநிதியே மறைமுகமா மறுத்திருக்காரே… நாடாளுமன்ற தேர்தல் முடியற வரைக்கும் அவருக்கு பதவி உயர்வு எதையும் கொடுக்க வேணாம்னு முதல்வர் குடும்பத்துல நினைக்கறாங்களாம். தேர்தலுக்கு முன்ன அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தா, எதிர்கட்சிகள் உடனே வாரிசு அரசியல்ங்கிற ஆயுதத்தை எடுக்கும். ஏற்கெனவே பல பிரச்சினைகள் இருக்கும்போது நாமளா எதிர்க்கட்சிகளுக்கு ஒரு புது ஆயுதத்தைக் கொடுக்க வேணாம்னு முதல்வர்கிட்ட சபரீசன் சொல்லி இருக்கார். முதல்வருக்கும் அவரோட மனைவிக்கும் அது சரின்னு பட்டதால இப்போதைக்கு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கறதை தள்ளி வச்சிருக்காங்க.”
“தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் திடீர்னு ராஜினாமா செஞ்சதுக்கு என்ன காரணம்?”
“ஏற்கனவே திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை திமுக வழக்கறிஞர் அணி சரியா கையாளலைன்னு முதல்வருக்கு வருத்தம். அது மட்டுமில்லாம தமிழக அரசு தொடர்பான வழக்குகள்ல அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் சரியா வாதாடலைன்னும் அவருக்கு வருத்தம் இருந்திருக்கு. சண்முகசுந்தரம் கிரிமினல் வழக்குகளை கையாளுவதில் கில்லாடி. ஆனால் சிவில் வழக்குகளில் அவருக்குப் போதிய அனுபவம் இல்லைன்னு அவர் நியமிக்கப்பட்டப்பவே ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிச்சிருந்தாங்க. இருந்தாலும் கலைஞருக்கு வேண்டியவர்ங்கிறதாலயும், திமுக அனுதாபிங்கிறதாலயும் அவரை முதல்வர் ஸ்டாலின் அட்வகேட் ஜெனரலாக நியமிச்சிருந்தார். இப்போ எதுவும் சரியில்லைங்கிறதால முதல்வரே சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்டு ராஜினாமா செய்ய சொல்லி இருக்கார். அவரும் ராஜினாமா செஞ்சிருக்கார்.”
“அதிமுக நியூஸ் ஏதும் இல்லையா?”
“திமுக கூட்டணியில இன்னும் தொகுதிப் பங்கீடே முடியலை. ஆனா எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் தேர்வு வரைக்கும் போயிட்டார். அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடந்த அன்னைக்கு மாலை பசுமைவழிச் சாலையில் இருக்கிற எடப்பாடி வீட்டில் மாவட்டச் செயலாளர்களை தனித்தனியாக கூப்பிட்டு ஆலோசனை நட்த்தியிருக்கார் எடப்பாடி. அப்ப, ‘நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தொகுதியில் செல்வாக்குள்ள மூன்று பேர் பட்டியலை என்னிடம் தாருங்கள். அவர்கள் செல்வாக்கு எந்த அளவு இருக்கிறது என்று நான் தனியாக ஒரு நிறுவனம் மூலம் விசாரிக்க சொல்கிறேன். அதன் அடிப்படையில் நாம் வேட்பாளரை தேர்வு செய்யலாம். வேட்பாளரை முடிவு செய்வதற்கு முன் உங்களிடமும் நான் கேட்பேன்’ன்னு அப்ப எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கார்.”
”அவருக்கென்ன ஆளும் கட்சியா? தேர்தல்ல போட்டி போட எல்லோரும் ஓடி வருவதற்கு. சரி, திமுக நிலைமை எப்படியிருக்கு”
“திமுகவுல இப்போதைக்கு போன தேர்தல் ஃபார்மூலாவையே ஃபாலோ பண்ணிரலாம்கிற முடிவுல திமுக தலைவர் இருக்கிறாராம். ஆனா, காங்கிரசுக்கு கொஞ்சம் குறைச்சிடலாம்னு மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறியிருக்காங்க. இந்த விஷயத்துல முதல்வர் இன்னும் முடிவெடுக்கலனு சொல்றாங்க. முதல்வருக்கு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ரொம்ப பிடிக்கும். அவங்க மனசு கஷ்டப்பட்டுடக் கூடாதுனு உடனிருந்தவர்களுக்கு சொல்லியிருக்கிறார். சோனியா பேசுனா, தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியோட நிலைமையை சொல்லுங்கனு மூத்த தலைவர்கள் அவருக்கு ஆலோசனை சொல்லியிருக்காங்க”
“நெல்லை திமுகவுக்கு பெரிய தொல்லையா போயிருச்சே”
“ஆமாம், திமுக தலைமையே அதிர்ச்சிலதான் இருக்கு. இது அவங்க எதிர்பாராதது”
“என்னதான் நடந்தது?”
”திமுகவின் திருநெல்வேலி மாவட்ட செயலாளராக அப்துல் வஹாப் இருந்தார். அவரை போன வருஷம் மாத்திட்டு மைதீன் கானை மாவட்ட பொறுப்பாளராக போட்டார்கள். அதிலிருந்தே பிரச்சினைதான். அப்துல் வஹாப் ஆளாகதான் மேயர் சரவணன் இருந்தார். ஆனால் இருவருக்கும் பிரச்சினை வந்தபோது வஹாப்பை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து திமுக தலைமை நீக்கியது. இதனால் கடுப்பான வஹாப், சரவணனுக்கு எதிரான வேலைகளை தொடங்கினார். நெல்லை மாநகராட்சியில் 44 கவுன்சிலர்கள் திமுகவினர். அதிமுகவுக்கு நாலு, காங்கிரசுக்கு மூணுனு இருக்காங்க. திமுக கவுன்சிலர்கள் எல்லோரும் வஹாப் ஆதரவாளர்கள். அதனால சரவணனுக்கு எதிரா நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துட்டாங்க. தங்கம் தென்னரசு அங்க போய் கட்சிக்காரங்ககிட்ட பேசி நம்பிக்கையில்லா தீர்மானம் வராதபடி பாத்துக்கிட்டார். ஆனா அதுக்குள்ள திமுக தவிச்சுப் போச்சு. திமுக வரலாற்றுல இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்ல. சொந்தக் கட்சிக்காரங்களே சொந்தக் கட்சி மேயருக்கு எதிரா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது”
“இனி என்ன நடக்கும்?”
“இந்த கோஷ்டி மோதல் நாடாளுமன்றத் தேர்தல்லயும் எதிரொலிக்கும். அதுக்கு முன்னாடி பெரிய நடவடிக்கை இருக்காதுனு கட்சிக்காரங்க சொல்றாங்க. நெல்லைல திமுகவுக்கு இப்போதைக்கு பின்னடைவுதான். கோஷ்டிகளை கூப்பிட்டு உதயநிதி பேசப் போறதா ஒரு தகவல் இருக்கு. அனேகமா அடுத்த வாரம் இந்த பேச்சுக்கள் சென்னையில் நடக்கலாம்”
”திமுக தலைவர் ஸ்டாலின் இதுல தலையிடப் போவதில்லையா?”
“அவர் மக்கள் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.