கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றார். 2 தொகுதிகளில் வென்ற அவர், ரேபரேலியை தக்கவைத்து, வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் வயநாட்டில் பிரியங்கா காந்தி பேரணியை மேற்கொண்டார். பிரியங்கா காந்தியுடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாட்டின் முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் பேரணியில் கலந்து கொண்டார்.
இந்த பேரணியின்போது நடந்த பிரச்சார கூட்ட்த்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது:
எனக்கு 17 வயதாக இருந்தபோது, முதல் முறையாக என் அப்பாவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். அதன் பிறகு அம்மா, சகோதாரர் ஆகியோருக்காக நான் பல முறை தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். முதல் முறையாக நான் எனக்காக பிரச்சாரம் செய்கிறேன். இங்கு போட்டியிட வாய்ப்பு தந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கேவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த உலகமே ராகுல் காந்திக்கு எதிராக இருந்தபோது வயநாடு தொகுதிதான் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை எம்பியாக தேர்ந்தெடுத்தது. இந்த தொகுதி தந்த நம்பிக்கையில்தான் ராகுல் காந்தி சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்தார். அதற்காக எங்கள் குடும்பமே வயநாடு தொகுதி மக்களுக்கு கடன்பட்டுள்ளது.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.
இதையடுத்து பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இருந்தனர்.