பாலிவுட்டில் ப்ரமோஷனுக்காக எந்தளவிற்கும் இறங்கி செய்வார்கள்.
பூஜா ஹெக்டே – சல்மான் கான் காதல் என்று ஒரு பேச்சு கிளம்பியதும் எல்லோரும் அப்படிதான் நினைத்தார்கள். இப்பொழுது இவர்கள் இருவரும் ‘கிஸி கா பாய் கிஸி கா ஜான்’ என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காகதான் இப்படியொரு பில்டப்பை கிளப்பியிருக்கிறார்கள். நம்முடைய வேலையப் பார்க்கலாம் என்று சினிமா ஜர்னலிஸ்ட்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
அப்புறம்தான் விஷயம் தெரிந்திருக்கிறது. தன்னைத்தானே சென்சார் போர்ட் உறுப்பினர், சினிமா விமர்சகர் என்று சொல்லிக்கொள்ளும், சோஷியல் மீடியாவை வைத்து தன்னை சினிமா எக்ஸ்பர்ட்டை போல் பில்டப் செய்யும் ஒரு ஆசாமிதான் இதைக் கிளப்பி விட்டிருக்கிறார் என்பது புரிந்திருக்கிறது.
உமைர் சந்து என்ற பெயரில் எல்லோரையும் பற்றி ட்ரோல் செய்வது, கமெண்ட் அடிப்பதுதான் இந்த ஆசாமியின் வேலை. விசாரித்துப் பார்த்தால் அரபு அமீரகத்தில் இப்படியொரு பெயரில் சென்சார் போர்ட்டில் யாரும் இல்லையாம். இந்த ஆசாமி நினைத்ததை எல்லாம் சோஷியல் மீடியாவில் ட்வீட் செய்கிறார் என்று புலம்பல்களும் கிளம்பியிருக்கின்றன.
சல்மான் கானுக்கு 50 ப்ளஸ் வயது ஆனாலும் இன்றைக்கும் அவர் பேச்சிலர்தான். அதனால் …. என்று கோலிவுட்டில் கண் சிமிட்டுகிறார்கள்.
கமலின் 5 மணிநேர மேக்கப்!
’இந்தியன் 2’ ஷூட் இப்போது முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை மழையால்கூட ஷூட்டிங்கை நிறுத்த முடியவில்லை.
படத்தில் காஜல் அகர்வால்தான் கதாநாயகி என்றாலும், ரகுல் ப்ரீத் சிங்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
கடந்த 2 ஷெட்யூல்களில் கமலுடன் இணைந்து நடிப்பதால் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டவராக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இப்பொழுது யாரைப் பார்த்தாலும் கமல் புகழ் பாடுகிறார்.
கமல் அதிகாலை 5 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட் வந்துவிடுவார். காரணம் ப்ரோதெடிக்ஸ் மேக்கப். ‘இந்தியன் 2’ -ல் கமல் 90 வயது தாத்தாவாக நடிப்பதால் அதற்கேற்ற மேக்கப்பை போடுவதற்கு நேரம் அதிகம் எடுக்கிறதாம். அதாவது சுமார் 5 மணிநேரம் பிடிக்கிறதாம். ஐந்து மணிக்கு வந்த உடனேயே கமலுக்கு ப்ரோதெடிக்ஸ் மேக்கப்பை தொடங்கினால் 10 மணிக்குதான் மேக்கப் முடியும்.
இந்த மேக்கப் போட 5 மணி நேரம் என்றால், அதை கலைப்பதற்கு 2 மணிநேரம் பிடிக்கிறது. இதனால் காலையில் மேக்கப் போட்டால் மாலை ஆகும் வரை அதே மேக்கப்போடுதான் கமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறார். சென்னையில் வெயில் அடித்து வியர்த்து கொட்டினாலும், அசால்ட்டாக மேக்கப்பை கலைக்காமல் பொறுமையுடன் இருக்கிறார் கமல்.
இதையெல்லாம் பார்த்துவிட்டுதான், ‘சினிமாவுக்கு 100 வயது என்றால், கமல் ஹாசன் 60 வருடமாக சினிமாவிலேயே ஊறிப்போய் இருக்கிறார். சினிமாவில் அவருக்கு தெரியாதது என்று எதுவுமில்லை’ என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
’வணங்கான்’ – பாலாவால் எவ்வளவு நஷ்டம்?
பாலாவும் சூர்யாவும் இணைகிறார்கள் என்றதுமே தமிழ் சினிமாவில் ஒரு பரபரப்பு உண்டானது. ஆனால் அந்த பரபரப்பை விட பாலாவுக்கும் சூர்யாவுக்கு இடையே நடந்த பனிப்போர் வெளியே தெரியவந்ததும் பரபரப்பு பல மடங்கு எகிறிவிட்டது.
‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யாவும், அவரது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் விலகிக் கொண்டாலும் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
முதல் ஷெட்யூல் கன்னியாகுமரி என்பதால் அங்கேயே தங்கியிருந்தபடி சில நாட்கள் ஷூட் செய்திருக்கிறார்கள்.
இதற்கான செலவு ஒரு பக்கம். சூர்யா இப்படத்திற்கு கொடுத்த கால்ஷீட் எல்லாமே வீண். அதைக்கணக்குப் பார்த்தால் குறைந்தப்பட்சம் 10 கோடி மதிப்பு இருக்கும். இந்த செலவை யார் கொடுப்பார்கள் என்ற கேள்வி இப்பொழுது புகைய ஆரம்பித்திருக்கிறது.
கதையில் நிகழ்ந்த மாற்றங்கள் சூர்யாவுக்கு உகந்ததாக இருக்காது என்று பாலாவே சொல்லியதால் அவர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பேச்சு கிளம்பியிருக்கிறது.
ஆனால் சூர்யா இந்த விஷயத்தில் மெளனமாக இருக்கிறாராம். தலைக்கு வந்தது சில கோடிகளோடு தப்பித்தது. அதுவே போதும். படமெடுத்து வெளியிட்டு இருந்தால் எவ்வளவோ போயிருக்கும் என சூர்யா சொல்லியதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.