தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. இதில் தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.
அவரது உரை மற்றும் அதற்கான தமிழக அரசியல்வாதிகள் சிலரின் எதிர் வினைகள்…
ஆளுநர் ஆர்.என்.ரவி:
நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும். அரசின் இந்த உரையில் பல பத்திகள் உள்ளன. உண்மையின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் இந்த உரையுடன் நான் உடன்படவில்லை. எனவே, இந்த அவையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விவாதங்கள் நடக்க வேண்டும் எனக் கூறி எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
சபாநாயகர் அப்பாவு:
ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பேரவை விதி 176(1)ன் படி சட்டமன்ற நிகழ்வுகள் தொடங்கும்போது, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அடுத்து ஆளுநர் உரை, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். ஆளுநரை அழைத்து சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. பல மாநிலங்களில் ஆளுநரை அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள். ஆனால் கொள்கை, சித்தாந்த ரீதியாக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மரபை கடைபிடித்து வருகிறோம். ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியும் இல்லை.
சட்ட அமைச்சர் ரகுபதி:
தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வட மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கு வலிமையை உருவாக்கும் வண்ணம் ஆளுநர்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி:
அரசுக்கும் ஆளுநருக்கும் உள்ள பிரச்சினை தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் எதிர்க்கட்சி. சபாநாயகர் அப்பாவு பலமுறை சட்டப்பேரவை மரபுகளை கடைபிடிப்பதில்லை. இனியாவது அவற்றை சபாநாயகர் கடைபிடிப்பார் என்று நம்புகிறேன். அவைக்கு என்று ஒரு மரபு இருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவரே ஒருதலைபட்சமாக நடக்கின்றபோது, என்ன செய்வதென்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நயினார் நாகேந்திரன்:
ஆளுநர் ரவி மரபுப்படி நடந்துகொண்டார். சபாநாயகர் மரபை மீறி நடந்துகொண்டதால் தான் தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் வெளியேறினார். நாங்களும் வெளிநடப்பு செய்திருக்க முடியும். ஆனால் முறைப்படி நடந்துகொள்ள வேண்டும் என நாங்கள் வெளிநடப்பு செய்யவில்லை. ஆளுநர் பேசிய வார்த்தைகள் அவைகுறிப்பில் இடம்பெற்றிருக்க வேண்டும். எனினும், சபாநாயகருக்கு உரிமையுள்ள அவையில் அவர் சொல்வதே தீர்ப்பு என்பதால் ஆளுநர் பேச்சு இடம்பெறவில்லை.
செல்வப் பெருந்தகை:
தெலங்கானாவில் எப்படி ஆளுநர் இல்லாமல் சட்டப்பேரவையை நடத்தினார்களோ அதேபோல இங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுபோன்ற அவலங்களுக்கு முதல்வர் இடம் கொடுக்கக் கூடாது. ஆளுநரை தமிழக அரசு மாண்போடு நடத்துகிறார்கள். ஆனால், அவர் தொடர்ந்து ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படுகிறார். அவரை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது
திருமாவளவன்:
ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு எதிராகப் பொது வெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன்மூலம் இங்கே சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் வகிக்கும் ஆளுநர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப் பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.