இன்றைய நிலவரப்படி தென்னிந்திய சினிமாவில் ’லேடி சூப்பர் ஸ்டார்’ என்று நயன்தாராவை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடலாம்.
ஆனால் கமர்ஷியல் சமாச்சாரங்கள் அடிப்படையில் இன்று அதிகம் விரும்பப்படும் நாயகியாக ‘கமர்ஷியல் லேடி ஸ்டார்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
தற்போது 4 ஹிந்திப்படங்கள், ஒரு தமிழ்ப்படம், தெலுங்கில் சில படங்களை கைவசம் வைத்திருக்கும் ராஷ்மிகாவின் கால்ஷீட் டைரி ஃபுல்லாகி விட்டது.
இந்நிலையில்தான் விக்ரமை வைத்து பா. ரஞ்சித் இயக்கும் படத்திற்கு ராஷ்மிகாவை பா. ரஞ்சித் அணுகியதாக பேசிக்கொள்கிறார்கள்.
விக்ரமிற்கு ஜோடியாக ராஷ்மிகாவை கமிட் செய்தால், படத்தை ஒடிடி-யில் நல்ல விலைக்கு வியாபாரம் செய்துவிடலாம். பல மொழிகளிலில் டப்பிங் செய்து வெளியிடலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் கடன் சுமையை வெகுவாக குறைக்கும் என்பதுதான் இந்த விக்ரம் – ராஷ்மிகா காம்பினேஷனுக்கு பின்னால் இருக்கும் கால்குலேஷனாம்.
கபாலி இயக்குநர் பா. ரஞ்சித், ராஷ்மிகா தரப்பில் நான் வந்துடேன்னு சொல்லு என்று தெரிவித்துவிட்டாராம், ஆனால் ராஷ்மிகா பக்கமிருந்து இதுவரை எந்த சிக்னலும் வரவில்லையாம்.
சாய் பல்லவிக்கு விருது கிடைக்குமா?
சாய்பல்லவி, சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘கார்கி’ படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு நடிகையை மையப்படுத்திய கதை என்பதாலும், அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதத்தாலும், அவருக்கு இந்தாண்டுக்கான அரசு விருது கிடைக்கும் என இப்பொழுதே கோலிவுட்டில் பேச்சு அடிப்படுகிறது.
ஆனால் சாய் பல்லவிக்கு அரசு விருது கிடைக்குமா… கிடைக்காதா.. என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வியாகி இருக்கிறது.
சாய் பல்லவி திறமைமிக்க நடிகைதான். மெச்சூர்டாக நடிப்பதிலும், கமர்ஷியலாக நடனமாடுவதிலும் கில்லாடிதான். ஆனால் அவரது ப்ளஸ் மற்றும் மைனஸ் இரண்டும் மனதில் பட்டதை அப்படியே பிரதிபலிக்கும் வெளிப்படையான பேச்சுதான் என்கிறார்கள்.
சமீபத்தில் அவர் நடித்த ‘விராட பர்வம்’ தெலுங்குப் படத்தின் விளம்பர நிகழ்வில், ஒரு மதத்தை சேர்ந்த பசு மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்றதை கண்டித்து மற்றொரு மதத்தினர் அவரை அடித்தது குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொண்டிருந்தார். இதனால் சட்டென்று அரசியல் ரீதியாகவும் சாய் பல்லவிக்கு நெருக்கடி உண்டானது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று சாய் பல்லவி விளக்கம் கொடுக்க, அப்பிரச்சினை அப்படியே அடங்கிப் போனது.
ஆனால் இந்த கமெண்ட் அவருக்கு எந்தவித பலனையும் கொடுக்கப்போவதில்லை. மாறாக அவருக்கு விருதுகள் பெற வாய்ப்பிருந்தாலும், அதை அவருக்கு வழங்குவார்களா இல்லை இந்த கமெண்ட் கலவரத்தை மனதில் கொண்டு அவரை விருதுக்கு தேர்ந்தெடுப்பார்களா என்பது கூட தெரியவில்லை ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே அரசியல் வேண்டாமென ஒதுங்கிவிட்டார். ஆனால் இந்த லேடி பவர் ஸ்டார் பாவம். விவரமறியாமல் பேசுவதை நிறுத்திக் கொண்டால் நல்லது என்று சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.
ஜெயிலர் இயக்குநருக்கு நடந்த பரேடு!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பீஸ்ட்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதில் அதிகம் பாதிக்கப்பட்டது இயக்குநர் நெல்சன்தான்.
இதனால் இவர் கமிட்டான ரஜினி படத்தை இயக்க விடுவார்களா மாட்டார்களா என்று கோலிவுட்டில் பிரசன்ன ஜோதிடம் பார்த்த இயக்குநர்கள் ஏராளம்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நெல்சனுக்கு வாய்ப்பை கொடுத்துவிட்டார் ரஜினி. தயாரிப்பு நிறுவனமும் பச்சைக் கொடி காட்டிவிட்டது. இதில் தயாரிப்பு நிறுவனம் ஓகே சொல்ல காரணம் படத்தின் வசூல். ரஜினி காம்பினேஷன் என்றால் எப்படியாவது பிஸினெஸ் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இரு தரப்பிலும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.
ரஜினி ஒரே காரியம் மட்டும் செய்தாராம். இயக்குநரை நேரில் அழைத்து டார்க் காமெடியெல்லாம் வேண்டாம். விறுவிறுப்பான திரைக்கதையை யோசியுங்கள். படம் தொடங்குவதே தெரியக்கூடாது. க்ளைமாக்ஸ் வரை பரபரவென இருக்கவேண்டுமென்று பரேடு நடத்தினாராம்.
இதனால் இயக்குநர் குழு ரூம் போட்டு யோசித்து, பல படங்களின் பரபரப்பான திரைக்கதைகளை ஆராய்ந்து, கடைசியில் ‘ஜெயிலர்’ திரைக்கதையை உருவாக்கியிருக்கிறதாம்.
படத்தில் கொஞ்சம் காமெடி இருக்கும். ஆனால் அது ரஜினியின் வழக்கமான காமெடியாகதான் இருக்கும், மற்றபடி அதிரடி அதிகமிருக்கும் என்கிறார்கள்.