’மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று ஆணித்தரமாக கொஞ்சமும் கவலைப்படாமல் கூறியிருக்கிறார் பாஜகவின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை.
கடந்த சில தினங்களுக்கு முன் கடலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி ஏன் சுற்றி சுற்றி வர்றீங்க. ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கறவன் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது, நகருங்க” என்று கோபமாக சொல்லிச் சென்றார். அவரது இந்த பேச்சுக்கு பத்திரிகையாளர்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. செய்தியாளர்கள் சங்கங்கள் அண்ணாமலையைக் கண்டித்தன.
குரங்கு என்று சொன்னதாக சொல்கிறார்கள். இது புதுவிதமாக இருக்கிறது. நான் கற்றுக் கொண்ட தமிழிலே அப்படி இல்லை. ஏன் புலியைப் போல பாய்கிறீர்கள், விலங்கை போல தாவித் தாவி வருகிறீர்கள் என்ற அர்த்தத்திலே சொன்னேன்’ என்று பிறகு அதற்கு விளக்கமும் அளித்தார்.
இன்று அது குறித்து கோவையில் செய்தியாளர் சந்திப்பில் கேட்ட போது, ‘”நான் தவறிழைக்காதபோது, மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அண்ணாமலை தவறு செய்துவிட்டதாக பத்திரிகையாளர்கள் கருதினால், என்னைப் புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது” என்று குறிப்பிட்டிருக்கிறார். செய்தியாளர்களை குரங்கு என்று சொன்னது அவருக்குத் தவறாக தெரியவில்லை.
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபமாய் பதற்றமாய் இருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய வியாபாரி என்று அழைக்கிறார். காவல் துறை உயர் அதிகாரிகளை மதம் சார்ந்து விமர்சிக்கிறார். செய்தியாளர்களை குரங்கு என்கிறார்.
மற்றக் கட்சியினர் செய்தியாளர்களை விமர்சித்ததில்லையா? திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ஊடகத்தினரை கடுமையாக பேசியிருக்கிறாரே? என்ற கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன.
உண்மைதான். ஆனால் ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். தனது தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கச் சொன்னார் என்று அந்த மன்னிப்பு கேட்பின்போது தெரிவித்தார்.
இப்போது பாஜகவின் தலைவரே அப்படி பேசியிருக்கிறார். அவரை யார் மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்வது?
இதுபோன்ற அரசியல் தமிழ்நாடு பார்த்திராதது. கடந்த 50 ஆண்டு கால அரசியலில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என பெரிய ஆளுமைகளுடன் தமிழ்நாடு பயணப்பட்டிருக்கிறது. பயன்பட்டிருக்கிறது.
செய்தியாளர்களை பெரிய தலைவர்கள் யாரும் கடுமையாக விமர்சித்ததில்லை. அமைச்சர்களை சாராய வியாபாரி என்று குறிப்பிட்டதில்லை. மிக முக்கியமாய் தமிழ்நாட்டுக்கு பலமாயிருக்கிற காவல்துறையை மதம் சார்ந்து விமர்சித்ததில்லை.
கடந்த 23ஆம் தேதி காலையில் கோவையில் காரில் வைத்திருந்த சிலிண்டர் வெடித்தது. முதல் செய்தி இப்படிதான் வந்தது. உடனே சம்பவத்தின் தீவிரத்தைப் புரிந்துக் கொண்டதால் காவல் துறையின் தலைவரான சைலேந்திரபாபுவே நேரில் செல்கிறார். விசாரணைகள் முடுக்கிவிடப்படுகின்றன. அடுத்த சில மணி நேரங்களில் ஐவர் கைது செய்யப்படுகிறார்கள். விசாரணைகள் தொடர்கின்றன. பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன.
இரண்டே நாட்களில் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உத்தரவிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கோவை காஸ் சிலிண்டர் வெடிப்பு ஒரு தீவிரவாத செயலின் துவக்கப் புள்ளி என்பதை தமிழக அரசும் காவல் துறையும் புரிந்திருக்கிறது என்பதையே இந்த தொடர் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
தமிழக பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் அரசியல் செய்ய தமிழ்நாட்டில் ஏதாவது தேவைப்படுகிறது. பாஜக அரசியல் செய்வதற்கு வசதியாக – பாஜகவின் அழுத்தத்தினாலோ அல்லது சொந்தக் கட்சியின் சிக்கல்களினாலோ – அதிமுக இப்போது அதிகம் அரசியல் பேசுவதில்லை. அதிமுகவின் அமைதி அண்ணாமலைக்கு வாய்ப்பாக மாறியுள்ளது.
இந்த வாய்ப்பை இது போன்ற பேச்சுகள் மூலம் வீணாக்கிக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. வேண்டுமென்றால் என்னை புறக்கணியுங்கள் என்று பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார். அவருக்குத் தெரியும் எளிய பத்திரிகையாளர்களால் அவரைப் புறக்கணிக்க முடியாது என்று.
மத்தியில் ஆளும் அதிகாரமிக்க கட்சியின் மாநிலத் தலைவர். எளிய பத்திரிகையாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளிகள் அதிகாரமிக்க கட்சிக்கு அடங்கி இருக்கும்போது பத்திரிகையாளர்களால் என்ன செய்ய முடியும்? இதை அண்ணாமலை புரிந்து வைத்திருக்கிறார்.
ஆனால் இந்த சம்பவங்கள் அனைத்தையும் மக்களும் புரிந்து வைத்திருப்பார்கள். இதையும் அண்ணாமலை உணர வேண்டும்.