மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகட் அறிவித்துள்ளார். அவர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று வருவார் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவரும் அதற்கு ஏற்ப சிறப்பாக ஆடினார். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி கண்ட அவர், இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதனால் புதன்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் தோற்றாலும், அவர் வெள்ளிப் பதக்கத்தையாவது வென்று வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் பதக்கச் செய்தியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, நேற்று காலை மற்றொரு அதிர்ச்சியான செய்திதான் கிடைத்தது. 50 கிலோ எடைப்பிரிவு போட்டியில் பங்கேற்கும் வினேஷ் போகட்டின் எடை, நேற்று காலை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 120 கிராம் அதிகமாக இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதே அந்த செய்தி. இது ரசிகர்களை கலங்கச் செய்தது.
பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறினர். வினேஷ் போகட்டின் எடை ஒரே நாளில் அதிகரித்ததற்கு பின்னால் ஏதாவது சதி நடந்திருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் எழுப்பினர். முந்தைய நாள் இரவு முழுக்க, உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்த காரணத்தால் நீரிழப்பு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட வினேஷ் போகட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
போராட சக்தியில்லை
இந்த சூழலில் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் பொகட் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வினேஷ் பொகட், “அம்மா மல்யுத்தத்திடம் நான் தோற்றுவிட்டேன்.. மல்யுத்தம் ஜெயித்துவிட்ட்து. என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கனவு, என் தைரியம், அனைத்தும் உடைந்துவிட்டன. இனி என்னிடம் போராட சக்தி இல்லை.. குட்பை மல்யுத்தம் 2001-2024 … உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன், மன்னிக்கவும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
வினேஷ் போகட்டின் இந்த முடிவு விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர் தனது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். வினேஷ் போகட்டின் சிறுவயது பயிற்சியாளரான மஹாவீர் போகட், “இவ்வளவு நெருங்கிவந்து பதக்கத்தை இழந்ததால் மல்யுத்தத்தில் இருந்து விலகும் முடிவை வினேஷ் போகட் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். யாராக இருந்தாலும், பதக்கம் வெல்வதற்கு இவ்வளவு நெருக்கமாக வந்தபிறகு இப்படியோரு நிலை வந்தால், கோபத்தால் இப்படிப்பட்ட முடிவைத்தான் எடுப்பார்கள். வினேஷ் போகட் ஓய்வு பெறக்கூடாது. தனது ஓய்வு முடிவை திரும்ப பெறவேண்டும். அவரை நேரில் சந்தித்த பிறகு, வினேஷை உட்காரவைத்து இந்த முடிவை மாற்றிக் கொண்டு கடுமையாக உழைக்கச் சொல்லி வலியுறுத்துவேன்” என்று கூறியுள்ளார்.