No menu items!

இனி எக்ஸ்ரே, ஸ்கேன் வேண்டாம் – உடல் உள்ளே இருப்பதை கண்ணாலே பார்க்கலாம்

இனி எக்ஸ்ரே, ஸ்கேன் வேண்டாம் – உடல் உள்ளே இருப்பதை கண்ணாலே பார்க்கலாம்

உடல்நலப் பிரச்சினைகள் பற்றி தெரிந்துகொள்ள உடல் உள்ளே உள்ள உறுப்புகளை பார்க்க எக்ஸ்ரே, ஸ்கேன் செய்து பார்ப்பது தற்போது நடைமுறையில் உள்ளது. இனி இது தேவையில்லை. FD &C Yellow 5 கண்டுபிடிப்பால் கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளை கண்ணாலே நன்குப் பார்க்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு மனித குல வரலாற்றில் ஒரு திருப்புமுனை என விஞ்ஞானிகளால் கொண்டாடப்படுகிறது. FD &C Yellow 5 கண்டுபிடிப்பு என்றால் என்ன? விரிவாக பார்ப்போம்…

X-ray, CT ஸ்கேன் மூலம் நம் உடலின் உள் உறுப்பு கட்டமைப்புகளை படம் பிடிக்க முடியும். இதன் மூலம் பல்வேறு நோய்களை விரைவாகவும் திறமையாகவும் கண்டறிய முடிகிறது. இதனால், மருத்துவருக்கு நோயாளியின் நிலையைப் பற்றிய துல்லியமான தகவலை தெரிவதோடு, அவர்களின் முன்னேற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், தகுந்த சிகிச்சையை எளிதாக்கவும் X-ray, CT ஸ்கேன் சேவைகள் உதவுகின்றது.

இனி நம் உடலின் உள் உறுப்பு கட்டமைப்புகளை நம் கண்களால் காணமுடியும், அதற்கு X-ray, CT ஸ்கேன் சேவைகள் இனி தேவையில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். ஆய்வகத்தில் எலிகளைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் தொழில் நுட்பம் மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி குறித்து விளக்கமளித்துள்ள, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் தரும் விளக்கம் இனி…

“முதலில் நம் உடல் உள் உறுப்புக்களை ஏன் நம்மால் பார்க்க முடியவில்லை என்று பார்ப்போம். நம் உடல் 70% தண்ணீரால் ஆனது. இருந்தாலும், நம் உள் உறுப்புக்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. தண்ணீர், கொழுப்பில் ஒளியைப் பிரதிபலிக்கும் பண்பு ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

நம் உடலில் இரண்டு நிறமிகள் உள்ளன. இவற்றில் முதன்மையானது நம் இரத்தச் சிவப்பணுவில் உள்ள சிவப்பு நிறமியான ஹிமோகுளோபின். இரண்டாவது, நம் தோலில் செல்களில் உள்ள மெலனின் என்ற நிறமியாகும். இவை இரண்டும் நம் உடலில் இல்லையென்றால், நம் உடல் ஒளி ஊடுருவிச் செல்லும் கண்ணாடி போலத்தான் இருக்கும். ஒளி நம் உடலைத் துளைத்துச் சென்று கொண்டிருக்கும். எனவே, நாம் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது. ஹிமோகுளோன், மெலனின் உதவியால்தான் நாம் ஒருவரை ஒருவர் தெளிவாக பார்க்க முடிகிறது.

நாம் அனைவரின் விழித்திரையும் கருமை நிறத்தில்தான் இருக்கின்றன. இதற்குக் காரணம் விழித்திரையில் கருமை நிற மெலனின் அதிக அளவில் உள்ளது. இங்குக் கருமை நிறம் பறிபோனால் கண் தெரியாமல் போகும்! கருமையே நம் விழித்திறன்.

இரத்தத்தில் ஹிமோகுளோபின் இல்லை என்றால் நம்மால் உயிர்வாழ முடியாது. காரணம் இந்த நிறமிதான் உடலெங்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்கிறது.

சிறுவயதில் இரவு நேரங்களில் கையில் டார்ச் லைட்டுடன் நடந்து செல்லும்போது, ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும் டார்ச்சை உள்ளங்கையால் மூடி விளையாடுவோம். ஒளி ஊடுரும்போது உள்ளங்கை சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இவ்வாறு உள்ளங்கை சிவப்பு நிறத்தில் தெரிய அங்கு இருக்கும் தண்ணீரும் கொழுப்பு படலமும்தான் காரணம். இந்த ஒளிச் சிதறுவதைக் கட்டுப்படுத்தினால் உள் உறுப்புக்களை எளிதாகக் காண முடியும்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஒளிச்சிதறலை கட்டுப்படுத்தும் வழிமுறையை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்குப் பணியாற்றும் குவோசங் காங் (Guosong Hong) என்ற ஆராய்ச்சிளாரின் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. இவர் தன்னுடன் 21 ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைத்து எலியின் உடலைக் கண்ணாடி போல் மாற்றியுள்ளனர்.

சிவப்பு டார்டசின் (red tartrazine) என்ற ஒரு உணவு வண்ணப் பொடி உள்ளது. இதனைச் சுருக்கமாக மஞ்சள் 5 (FD&C Yellow 5) என அழைக்கின்றனர்.‌ வண்ண வண்ண கேக் செய்ய இந்தப் பொடியையும் பயன்படுத்துகின்றனர். நீங்கள் கேக் சாப்பிடுபவராக இருந்தால் இந்த வண்ணப் பொடியையும் சேர்த்து கட்டாயம் சாப்பிட்டிருப்பீர்கள்.

இந்தப் பொடியைத் தண்ணீரில் கலக்கி எலியின் வயிற்றுப் பகுதியில் தடவுகின்றனர். அதனால் அந்தப் பகுதியில் உள்ள தோல் சிவப்பு நிறமாக மாறுகிறது.‌ இதற்குக் காரணம் ஒளியில் உள்ள நீல நிறத்தைச் சிவப்பு டார்டசின் உறிஞ்சிக் கொள்கின்றது. இதனால் உடலில் உள்ள தண்ணீரும் கொழுப்பும் ஒரே ஒளி பிரதிபலிக்கும் பண்பைப் பெருகின்றன.

அதாவது 589 நானோ மீட்டர் கொண்ட ஒளியைத் தண்ணீர் 1.33 அளவில் வளைக்கின்றது. அதே ஒளியைக் கொழுப்பு 1.45ல் இருந்து 1.48 வரை வளைக்கின்றது. ஆனால், இந்த உணவு வண்ணப் பொடி தடவப்பட்டவுடன் தண்ணீரும் கொழுப்பும் ஒரே மாதிரியாக ஒளியைப் பிரதிபலிக்கத் தொடங்குகிறது. இதனால், உடலில் பாயும் ஒளியின் சிதறல் குறைகிறது. எனவே, தோல் உள்ளிட்ட உடலில் உள்ள தசைகள் கண்ணாடிபோல் காட்சியளிக்கின்றன. இதனால் ஒளி தசைக்குள் ஆழமாக ஊடுருவத் தொடங்குகின்றது. இதன் காரணமாக இந்த வண்ணப் பொடி தடவப்பட்ட இடத்தில் ஒளியைப் பாய்ச்சினால் உள் உறுப்புக்கள் கண்ணுக்குக் காட்சியளிக்கத் தொடங்குகின்றன.

இதன் மூலம் கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீர்ப்பை போன்ற உறுப்புகளை நன்குப் பார்க்க முடியும். கூடுதலாக மூளையில் ஆங்காங்கே பயணிக்கும் இரத்தக் குழாய்களையும் நன்கு பார்க்கலாம். கைக்கால்களில் உள்ள‌ தசைநார்களின் அமைப்பைத் தெளிவாக பார்க்கலாம். மேலும் இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் மட்டும் அல்ல சுருங்கி விரியும் நுரையீரலையும் தெளிவாகப் பார்க்கலாம். இனிமேல் ஸ்கேன் செய்து பார்க்கத் தேவையில்லையென இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு எதற்கெல்லாம் பயன்படும்?

தோல் புற்றுநோய் கட்டிகளைக் கண்டறிய, அதன் பரிமாணத்தை முழுமையாகச் சோதனை செய்ய இந்த முறை பெரிதும் உதவியாக இருக்கும்.

மருத்துவமனையில் நோயாளியின் இரத்தக் குழாய்க்குள் ஊசியை சொருகுவது வழக்கமான ஒன்று. இப்படி இரத்தக் குழாய்க்குள் சொருகப்பட்ட ஊசிமூலம் மருந்து, குளுக்கோஸை ஏற்றுவது மருத்துவர்களின் அன்றாட வேலைதான். ஒரே முயற்சியில் இதனைச் செய்து முடிப்பது கடினம்தான். குறிப்பாகக் குழந்தைகளின் கால், கைகளில் இரத்தக் குழாய்களைக் கண்டறிவது மிகவும் கடினம். இனி இந்தக் கவலை இல்லை. இந்தப் பொடியைத் தோலில் தடவி அதன்மேல் ஒளியைப் பாய்ச்சினால், அந்த இடத்தில் பயணிக்கும் இரத்தக் குழாய்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். இதனால் ஒரே முயற்சியில் ஊசியைக் குத்தி இரத்தக் குழாய்க்குள் ஏற்ற முடியும்.‌

குத்திக் கொண்ட பச்சையை அகற்ற லேசர் வந்துவிட்டாலும் இதனை முற்றிலும் அகற்றுவது அவ்வளவு எளிதல்ல. லேசர் தோலின் மேற்பகுதியில் உள்ள பச்சையை எளிதில் அகற்றிவிடும். ஆனால், தோலின் உள்புறத்தில் இருக்கும் இந்தப் பச்சையைத் தெளிவாகப் பார்க்க முடியாது. அதனால் இதனை அவ்வளவு எளிதில் அகற்றவும் முடியாது. இந்த உணவு வண்ணப் பொடியைத் தோலின் உட்புறத் திசுவில் இருக்கும் பச்சை தெளிவாகக் கண்டறிய உதவும். இதனால் பச்சை குத்திய சுவடேத் தெரியாமல் இதனை அழிக்கவும் இந்தத் தொழில் நுட்பம் பயன்படும்.

மேலும் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அழகு சாதன, ஒப்பனை வழிமுறைகளும் அதிக அளவில் உதயமாக வாய்ப்புகள் உள்ளன.

முக்கியமாக இந்தக் கண்டுபிடிப்பால் எக்ஸ்ரே போன்ற அபாயகரமான ஒளிக் கதிர்களை மருத்துவ காரணங்களுக்காக உடலில் பாய்ச்சுவது பெருமளவில் குறையும். எக்ஸ்ரே கதிர்கள் உடலில் பாயும்போது தண்ணீர் மூலக்கூறு உடைகிறது. அதனால் H+, OH- அயினிகள் உருவாகின்றன. இவை செல்களைக் கொன்று குவிக்கும் திறன் படைத்தவை. மேலும் மரபணுவை அப்பளமாக நொறுக்கும் சக்தி படைத்தவை. பெரும்பாலானவர்களின் உடல் இப்படி உடைந்த மரபணுவைச் சரி செய்யும் ஆற்றல் பெற்றது. ஆனால், உடைந்த மரபணு சரி செய்யப்படவில்லை என்றால் விழைவு படுமோசமாகும். இது புற்றுநோய்க்குக்கூட வழிவகுக்கும். எனவே சக்தி வாய்ந்த எக்ஸ்ரேவை உடலில் பாய்ச்சிக் கொள்ளுவதை தவிர்ப்பது நல்லது. இதற்கு இந்த உணவு வண்ணப் பொடி தொழில்நுட்பம் (FD&C Yellow 5) பெருமளவு உதவும்.

இந்த வண்ணப் பொடி தடவப்பட்ட இடத்தைத் தண்ணீரால் கழுவினால் உடல் தன் பழைய இயல்பு நிலைக்கு மாறிவிடும். அந்த இடத்தில் ஒளி ஊடுருவாது. மேலும் இந்த வண்ணப் பொடியைத் தடவுவதால் எந்தப் பாதிப்பும் வராது. காரணம் இதனை உணவில் கலந்து சாப்பிட்டு வருகிறோம் என்பதை மறக்க வேண்டாம். இந்த மஞ்சள் 5 மாதிரி மேலும் பல வண்ணப் பொடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்கிறார் பேராசிரியர் சுதாகர் சுப்பிரமணியம்.

மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் ஆய்வகத்தில் எலிகளைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது. விரைவில் இந்தத் தொழில் நுட்பம் மனிதர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...