சீனாவில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் உலகத்தையே புரட்டிப் போட்டது. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இந்த உலகம் மெல்ல மீண்டுவரும் நிலையில், புதிதாக ஒரு வைரஸ் சீனாவில் தோன்றியிருக்கிறது. அந்த வைரஸின் பெயர் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (Human Metapneumovirus). சுருக்கமாக இதை எச்எம்பிவி (HMBV) வைரஸ் என்று அழைக்கிறார்கள்.
அது என்ன ஹியூமன் மெடாநிமோ வைரஸ்?
சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்களில் இதுவும் ஒன்று. இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவ வாய்ப்புள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருட்கள், புழங்கிய இடங்களில் இருந்து இன்னொருவருக்குப் பரவும் வாய்ப்புள்ளது.
குளிர்காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் இந்த சுவாச நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறையினர் கணித்துள்ளனர். சீனாவில், எச்.எம்.பி.வி (HMPV), 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவைப் போலவே இதுவும் கைகுலுக்குவது, தும்மும்போதோ, இருமும்போதோ அருகில் இருப்பது போன்ற காரணங்களால் பரவ வாய்ப்புள்ளது. மேலும், இந்த வகை ஃப்ளூ வைரஸ்களின் மரபணு மிக வேகமாக தன்னை உருமாற்றிக் கொள்ளக் கூடியது. அதனால் வழக்கமான ஃப்ளூ வைரஸ் மனிதர்களிடம் சற்று கவனிக்கத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸாக உருமாறும் போது அதற்குப் பெயரும், கூடவே அதனைச் சுற்றிய பரபரப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கொரோனாவைப் போலவே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த புதிய வைரஸால் சிறுவர் சிறுமிகள் மற்றும் முதியோரை அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எச்எம்பிவி வைரஸ் வைரஸ் அறிகுறிகள்
எச்.எம்.பி.வி இன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். கடுமையாகும் போது மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கலாம்.
தொடர்ந்து மறுக்கும் சீனா
சீன மருத்துவமனைகளில் காய்ச்சல், தொண்டை வலி பாதிப்புகளுக்காக மக்கள் கூட்டங்கூட்டமாக காத்திருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், புதிய வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், கரோனா போன்ற புதிய வைரஸ் பரவுவதாக எழுந்த சந்தேகங்களை சீனா மறுத்துள்ளது.