இந்திய மகளிர் அணி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டில் பலம்வாய்ந்த அணிகளான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றைக் கடந்து இந்த கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது இந்தியா. இதன்மூலம் இந்திய மகளிர் அணியாலும் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய மகளிர் அணிக்கு 5 கோடி ரூபாய் பரிசளித்துள்ளது பிசிசிஐ.
இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு காரணமான முக்கிய வீராங்கனைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்…
ஷஃபாலி வர்மா
இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையே முறியடித்தவர் ஷபாலி வர்மா. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அரைசதம் எடுத்தபோது ஷபாலியின் வயது 15-தான். இப்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள இந்திய அணியின் கேப்ட்் ஷஃபாலி வர்மாதான்.
இந்திய அணியின் கேப்டனாக மட்டுமின்றி 7 இன்னிங்ஸ்களில் 172 ரன்களைக் குவித்தும் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் ஷஃபாலி வர்மா. ஹரியாணாவில் உள்ள ரோடக் எனும் ஊரில் 2004-ம் ஆண்டில் பிறந்தவர் ஷஃபாலி வர்மா. சிறுவயதில் சச்சின் டெண்டுல்கர் ஆடுவதை மைதானத்துக்கு சென்று பார்த்த ஷஃபாலி வர்மா, அவரது பேட்டிங்கால் கவரப்பட்டு தானும் கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பினார். இதற்காக அவர் பெற்ற பயிற்சிகள்தான் இன்று உலகக் கோப்பை வரை அவரை அழைத்துச் சென்றுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷஃபாலி வர்மா, “இது வெறும் தொடக்கம்தான். இந்திய பெண்கள் அணி, கிரிக்கெட்டில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும்” என்று கூறியிருக்கிறார்.
ஷ்வேதா ஷெராவத்
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளில் 297 ரன்களைக் குவித்த ஷ்வேதா ஷெராவத்தான் இந்தியாவின் டாப் ஸ்கோரர். இந்த தொடரில் 3 அரைசதங்களை விளாசிய ஷ்வேதாவின் அதிகபட்ச ஸ்கோர் 92.
தெற்கு டெல்லியில் பிறந்த ஷ்வேதாவுக்கு சிறுவயதில் வாலிபாலில்தான் விருப்பம் இருந்துள்ளது. ஒருநாள் அவரது அக்கா பயிற்சி பெறும் கிரிக்கெட் அகாடமியில் வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். ஷ்வேதாவின் உடல்வாகு கிரிக்கெட்டுக்கு ஏற்றதாக இருப்பதாக பயிற்சியாளர் சொல்ல, முதலில் வேண்டா வெறுப்பாகத்தான் அவர் கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கி இருக்கிறார்.
கிரிக்கெட் மையத்தில் ஆண் குழந்தைகளுடன் பயிற்சிபெற்று வந்த ஷ்வேதாவுக்கு, 2016-ம் ஆண்டில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த டி20 உலகக் கோப்பை போட்டி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போட்டியைப் பார்த்த ஷ்வேதா, இந்திய அணிக்காக தானும் ஒரு காலத்தில் ஆடவேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த ஆசைதான் இன்று அவரை உலகக் கோப்பை தொடருக்கு அழைத்துச் சென்று, இந்திய அணி சாம்பியனாக உதவி இருக்கிறது.
பர்ஷவி சோப்ரா
பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் சூப்பர்வுமன் பர்ஷவி சோப்ரா. இந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் பங்கேற்ற பர்ஷவி எடுத்த மொத்த விக்கெட்கள் 11.
லெக் ஸ்பின்னரான பர்ஷவி சோப்ரா நொய்டாவைச் சேர்ந்தவர். முதலில் இவர் ஒரு ஸ்கேட்டிங் வீராங்கனையாகத்தான் இருந்திருக்கிறார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார். பின்னர் சகிரிக்கெட்டுக்கு தடம் மாறிய பர்ஷவி, யுவராஜ் சிங் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றார்.