No menu items!

தமிழ்நாட்டுக்கு புது கவர்னர்? – மிஸ் ரகசியா

தமிழ்நாட்டுக்கு புது கவர்னர்? – மிஸ் ரகசியா

”அரசியல்வாதிகளுக்குனு தனி கோர்ட் ஊருக்கு வெளில வைக்கணும்” என்று கூறிக் கொண்டே வேர்த்து விறுவிறுத்து அறைக்கும் வந்தாள் ரகசியா.

“என்னாச்சு, செந்தில் பாலாஜி ஆஸ்பிடல்லதானே இருக்கிறார். கோர்ட்டுக்கெல்லாம் வரலையே?”

“நான் அவரை சொல்லல. டி.ஆர்.பாலு வழக்குக்காக இன்னைக்கு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அண்ணாமலை வந்தார். அப்பா… ஏகப்பட்ட கூட்டம். ஒரு மணி நேரம் ட்ராஃபிக் நகரல. இந்த வெக்கைல டூ வீலர்ல வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு. ஆனா ஒரு விஷயத்தை ஒத்துக்கணும் செம்ம மாஸ் காட்டிட்டார்”

“ஆமாம் டிவில பார்த்தேன். பாஜகவின் வழக்கறிஞர் அணி ஆட்கள் அவ்வளவு பேரும் வந்துட்டாங்க போல. அண்ணாமலை என்ன சொல்றார்”

”டி.ஆர்.பாலு குடும்பத்தையே கூண்டிலேற்றுவோம்னு சொன்னார். திமுக மேல பயங்கர காட்டமா பேசுனார். தென்னாப்பிரிக்கா போறார். திரும்பி வந்ததும் டிஎம்கே ஃபைல்ஸ் தொடர்ந்து வரும்னார். இனி வரப் போறது பினாமிகள் பட்டியலாம்”

“இதுல திமுக தரப்புல என்ன சொல்றாங்க?”

“திமுக தரப்பைவிட அதிமுக தரப்புதான் அப்செட்ல இருக்கு”

“ஏன், எடப்பாடிதான் எல்லாம்னு தேர்தல் ஆணையமே சொல்லிருச்சே. அப்புறம் என்ன அப்செட்?”

“அதிமுகவை முந்திப் போக முயல்கிறார்னு அதிமுகவினர் நினைக்கிறாங்க. இன்னைக்கு சென்னைல அண்ணாமலை காட்டுன கூட்டம் திமுகவுக்கு இல்ல, அதிமுகவுக்குதானு அந்தத் தலைவர் சொன்னார்”

“அதிமுக – பாஜக கூட்டணி இருக்குமா இருக்காதா?”

“இருக்காதுனு சொல்றாங்க. இப்பவே பாஜக நம்மைக் கண்டுக் கொள்வதில்லை. கூட்டணி அமைத்து இன்னும் வளர்ந்தால் நம்மை காணாமல் போகச் செய்திடுவார்கள் என்ற பேச்சு அதிமுகவில் இருக்கு”

”ஓஹோ..திமுகவில என்ன செய்தி.. ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கிறதுனால திமுகவினர் உற்சாகமாய் இருப்பாங்களே?”

“ஆமாம். ஆனா, துரைமுருகன் ரொம்ப வருத்தத்துல இருக்காராம்”

“துரைமுருகனுக்கு என்ன வருத்தம்?”

“இந்த ஆட்சியில தன்னோட அதிகாரம் கொஞ்சம் கொஞ்சமா குறையறதா நினைக்கறாராம் துரைமுருகன். கனிமவளத் துறையில அவருக்குத் தெரியாமலேயே நிறைய விஷயம் நடக்குது. அவரோட துறைச் செயலாளர் மாற்றப்பட்டிருக்கிறார். அவரது துறை அலுவலகங்கள்ல லஞ்ச ஒழிப்புதுறை சோதனை நடந்திருக்கு. இதையெல்லாம் அவர் ரசிக்கல. முன்னலாம் நிகழ்ச்சிகளுக்கு போகும்போது முதல்வரோட கார்ல அவரோடயே துரைமுருகன் வருவார். இப்ப அது குறைஞ்சு போச்சு. அதனால பேசாம அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு கட்சியோட பொதுச் செயலாளரா மட்டும் இருந்துடலாமான்னு யோசிக்கறாராம்.”

“அதனாலதான் கலைஞர் நூற்றாண்டு விழால புலம்பறா மாதிரி பேசினாரா?”

“அப்படியும் சொல்றாங்க. ‘கலைஞர் நள்ளிரவில்கூட என்னை அழைத்து ஆலோசனை செய்வார். மாவட்ட செயலாளர்களின் மதிப்பு தெரிந்து அவர் நடந்துகொண்டார். அதிகாரிகளிடம் பேசும்போதுகூட அமைச்சர்களை விட்டுக் கொடுக்க மாட்டார். ஒரு முறை தன் எதிரில் அமைச்சர் முத்துராமலிங்கத்திடம் மரியாதை குறைவாக பேசினார் என்பதற்காக தலைமைச் செயலாளரையே மாற்றியவர் கலைஞர்’ என்றெல்லாம் பேசியது இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு உணர்த்ததான்னு திமுகவுல பேசிக்கிறாங்க”

“இந்தப் பேச்சுக்கு முதல்வரோட ரியாக்‌ஷன் என்ன?”

“வழக்கமான புன்சிரிப்புதான்”

“பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு மதிமுகவுக்கும் அழைப்பு போயிருக்கிறதே?”

“விடுதலைச் சிறுத்தைகளுக்கு காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அதேபோல் மதிமுகவையும் அழைக்கணும்னு திமுக தரப்புல சொன்னாங்களாம். அதனாலதான் அவங்க வைகோவுக்கு அழைப்பு விடுத்திருக்காங்க. எதிர்க்கட்சிகளோட அடுத்த கூட்டத்தை சென்னையில நடத்த முதல்வர் திட்டமிட்டு இருக்காராம். இதுபத்தின அறிவிப்பை அவர் பெங்களூருல வெளியிடுவார்னு சொல்றாங்க.”

“வீக் வார இதழுக்கு பேட்டி கொடுத்த முதல்வர், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவோம்னு அடிச்சு சொல்லி இருக்காரே?”

“சொல்றது மட்டுமில்லை… அதுக்கான நடவடிக்கைகளையும் எடுத்துட்டு இருக்கார். அதுக்காக இப்பவே 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தயார் செஞ்சு வச்சிருக்காம்.”

“என்ன இருந்தாலும் செந்தில்பாலாஜி விவகாரம், விலைவாசி உயர்வுன்னு மக்கள் மத்தியில இப்ப ஆளும்கட்சி மேல அதிருப்தி இருக்கே?”

“குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தால அந்த அதிருப்தி எல்லாம் காணாமல் போயிடும்னு முதல்வர் நினைக்கறாராம். அதனாலயே இந்த திட்டத்துல குழப்பம் ஏதும் வராம பார்த்துக்கணும்னு உத்தரவு போட்டிருக்காராம் முதல்வர். தகுதியான எல்லா குடும்பத் தலைவிகளுக்கும் பணம் போய் சேர்றதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதிப்படுத்தணும்னும் உத்தரவு போட்டிருக்காராம்.”

“தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்துல கலந்துக்க பாமகவுக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கே?”

“இதுபத்தி செய்தியாளர்கள்கிட்ட பேசுன அன்புமணி, ‘தேசிய அளவில் நாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை’ன்னு சொல்லி இருக்கார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு திமுகவோட கதவு கிட்டத்தட்ட மூடியாச்சு. அதிமுகவும் அவங்களை பெருசா மதிக்கறதா இல்லை. ‘நாம் பழையபடி தைலாபுரம் போய் பேசுகிறதெல்லாம் இனி வேண்டாம். அவங்களா வந்து கூட்டணி பத்தி பேசுனா பார்ப்போம். முன்ன செஞ்சு கொடுத்த வசதிகளையெல்லாம் இப்ப அவங்களுக்கு கொடுக்க முடியாது’ன்னு எடப்பாடி உறுதியா சொல்லி இருக்காராம். அதனால கூட்டணி விஷயத்துல இப்போதைக்கு அவங்க அந்தரத்துலதான் இருக்காங்க.”

“அதிமுக உள்கட்சி விவகாரம் ஏதாவது தெரியுமா?”

“தேர்தல் ஆணையம் எடப்பாடிக்கு அங்கீகாரம் கொடுத்தது, தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துல கலந்துக்க எடப்பாடி அணிக்கு பாஜக அழைப்பு விடுத்தது போன்ற செய்திகளால செம கடுப்புல இருக்காரு ஓபிஎஸ். அதனாலதான் கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி ஆகஸ்ட் முதல் தேதி மாவட்டம் தோறும் போராட்டம்னு அறிவிச்சார். கூடவே நான் துணை முதல்வரா இருந்தப்ப எனக்கு எந்த அங்கீகாரமும் இல்லைன்னு புகார் சொல்லி இருக்கார்.

இதைக் கேட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர், ‘ஆட்சி இருந்தாலும், இல்லாட்டியும் இவர் டம்மிதான் போல’ன்னு அணி மாறுறதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்காங்க. எடப்பாடியும் இதை பயன்படுத்திக்க தயாராகிட்டார்.”

“கட்சியை விட்டு விலகியவர்கள், கட்சியால் நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்னு எடப்பாடி அறிக்கை விட்டது இதனாலதானா?”

“ஆமாம். அவர் அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே ஓபிஎஸ்ஸோட மாவட்டமான தேனியில இருந்து கட்சி நிர்வாகிகள் மன்னிப்பு கடிதம் தந்து எடப்பாடி முன்பு அதிமுகவில் சேர்ந்திருக்காங்க. அதே சமயம் இந்த மன்னிப்பு கடித விஷயம் ஓபிஎஸ் சசிகலா தினகரன் மூவருக்கும் செல்லாதுன்னு எடப்பாடி தரப்பு சொல்லிட்டு இருக்கு.”

”டெல்லிக்கு போய்ட்டு வந்ததுலருந்து கவர்னர் அமைதியா இருக்கிறாரே? என்ன காரணம் ஏதாவது தெரிந்ததா?”

“கவர்னரை மாத்துறது தொடர்பா டெல்லில பேச்சுவார்த்தை நடந்ததுனு சொல்றாங்க”

“அப்படியா யாரு புது கவர்னர்? புது கவர்னராவது அரசியல் பேசாம இருப்பாரா”

“அதுக்கு வாய்ப்பில்லை. மத்தியில ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கிற ஒரு அம்மையார் தமிழ்நாட்டுக்கு வரப் போறாங்க. தமிழ்நாட்டு அரசியலை மிரட்டப் போறாங்க”

“எனக்குத் தெரிஞ்சிருச்சு…. தமிழ்நாட்டு அரசியல் இன்னும் கடுமையாகப் போகுதுனு சொல்ற”

“ஆமாம்…திமுக அரசு பாஜகவையும் சமாளிக்கணும் ராஜ்பவனையும் சமாளிக்கணும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...