‘தமிழ் கடல்’ என போற்றப்பட்ட தமிழறிஞரும் மேடைப் பேச்சாளரும் திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒருவருமான நெல்லை கண்ணன் (வயது 77) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். தாமிரபரணி எழுத்தாளரும் நெல்லைக் கண்ணன் நண்பர்களில் ஒருவருமான வண்ணநிலவன் அவரைப் பற்றிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“தமிழ் இலக்கியத்தில் புலமையும் பேச்சாற்றாலும் கொண்டவர்கள் மிக குறைவு. அவர்களில் ஒருவர் நெல்லை கண்ணன். குறிப்பாக பாரதியார் படைப்புகள், கம்ப ராமாயணம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமை கொண்டவர். தனது பேச்சாற்றலால் அவர் தலைமை தாங்கிய பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றினார்.
திருநெல்வேலி வட்டார மொழியில் நெல்லை கண்ணன் பேசுவதைக் கேட்க மிக இனிமையாக இருக்கும். ஆனால், நெல்லைக்காரர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஊர்க்காரர்களும் அவரது பேச்சை ரசித்தார்கள். கம்ப ராமாயணம் பற்றிய அவரது பேச்சில் சொக்கிப் போனவர்கள் நிறைய. 1970களில் தொடங்கி தமிழ் மேடைகளில் நெல்லை கண்ணனின் குரல் ஒலித்து வந்தது. ‘பாற்கடல்’ போல் தமிழ் மொழியில் புலமைப் பெற்றிருந்ததால், அவரை பலர் தமிழ் கடல் என்று அழைத்தனர்.
காமராஜரின் தீவிர விசுவாசி. காமராஜருடன் நெருங்கி பழகியுள்ளார். காமராஜர் பற்றி அவர் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு தகவல்கள் இருக்கும். அந்த தகவல்களுடன் நெல்லைக் கண்ணனின் பேச்சாற்றலும் சேர்ந்து வசீகரிக்கும்.
காமராஜர் மீதான பற்று காரணமாக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு செயல்பட்டார். அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கண்ணதாசன், மூப்பனார் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார்.
மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசும் கொள்கை துணிவு கொண்ட பேச்சாளராவார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே அக்கட்சியையும் விமர்சித்து பேசியுள்ளார். அரசியல் ரீதியாக பல்வேறு தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதனால் கைது உட்பட பல சிக்கல்களையும் சந்தித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அந்த தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டார். தோற்றுவிட்டார். பின்னாட்களில் அந்த தேர்தல் பற்றி பேசும்போது, என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்று சொன்னார்.
பலருக்கும் தெரியாத ஒரு தகவல், நெல்லை கண்ணன் எண் கணிதம் பார்ப்பதில் ஈடுபாடு கொண்டவர். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிறந்த நாள் கேட்டு, கணித்து சொன்னார்.
சிறந்த வாசகரும்கூட. பழைய இலக்கியங்கள் மட்டுமல்லாமல் சமகால இலக்கிய போக்குகளையும் கவனித்து படித்து வந்தார். ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் உட்பட இன்றைய எழுத்தாளர்கள் எல்லோரையும் படித்து பேசுவார். ‘தீக்கனைத்தும் சடைவீசி’, ‘பழம்பாடல் புதுக்கவிதை நூல்’, ‘வடிவுடைக் காந்திமதியே’, ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’, ‘காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்’ உட்பட பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.