அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பைத் தவறவிட்டதால், தனது காதல் கணவர் மீது நயன்தாராவுக்கு ஏக வருத்தமாம்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனிடம் நேரடியாக பேசி வாங்கிக் கொடுத்த வாய்ப்பு அது.
நயன்தாராவுக்காக அஜித்தும் கூட ஓகே சொல்ல எல்லாம் சுமூகமாக முடிவானது.
ஆனால் ‘துணிவு’ படத்தின் வெற்றி, விக்னேஷ் சிவன் ப்ராஜெக்ட்டில் இப்படியொரு திருப்பத்தைக் கொடுக்கும் என்று விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
அஜித் 62 கைநழுவிப் போனதும், கடும் கோபத்தில் இருந்த நயன்தாரா, இப்பொழுது அடுத்து என்ன செய்யலாம் என்பதில் விக்னேஷ் சிவனை கவனம் செலுத்துமாறு சொல்லியிருக்கிறாராம்.
இதனால் ‘நயன்தாரா என்றாலே உருகும் விஜய் சேதுபதியை’ மீண்டும் கமிட் செய்து ஒரு படத்தை இயக்குவது என்று ப்ளான் ஏ திட்டமிடப்பட்டுள்ளதாம்.
ப்ளான் ஏ சரிப்பட்டு வரவில்லை என்றால், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இருக்கும் நெருக்கமான உறவை வைத்து வெப் சிரீஸ் எடுப்பது என ப்ளான் பி யோசிக்கப்பட்டு வருகிறதாம்.
இதில் ப்ளான் பி மட்டுமே சாத்தியம் என்கிறார்கள். காரணம் விஜய் சேதுபதி இதரப் படங்களுக்கு எக்கச்சக்கமாக கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால் நயன்தாரா சொன்னால் ‘தங்கமே உன்னை நான் தேடி வந்தேனே’ என விஜய் சேதுபதி ஓடி வந்தது விக்னேஷ் சிவனின் வெப் சிரீஸிலோ அல்லது சினிமாவிலோ நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
சம்பளத்தை இரு மடங்கு உயர்த்திய விக்ரம்!
’டேவிட்’, ’10 எண்றதுக்குள்ள’, ‘ஸ்கெட்ச்’, ‘சாமி ஸ்கொயர்’, ‘மகான்’, ‘கோப்ரா’ என அடுத்தடுத்து ஃப்ளாப் படங்களைக் கொடுத்தாலும், விக்ரமுக்கு பட வாய்ப்புகள் வந்தது கொண்டுதான் இருக்கின்றன.
ஃப்ளாப் படங்களுக்கு பிறகும் கூட வாய்ப்புகள் வருவது அவரது நடிப்புத்திறமை மீது இருக்கும் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையால் கூட இருக்கலாம்.
ஆனால் விக்ரம் நடித்தப் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் போன பிறகும் கூட, விக்ரம் கேட்கும் சம்பளத்தை எப்படி கொடுக்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.
பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தற்போது ‘தங்கலான்’ படத்தைத் தயாரித்து வருகின்றன.
பா.ரஞ்சித் இயக்க, அதில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாள நடிகை பார்வதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
’கோப்ரா’ தோல்விக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படம் இது. இருந்தாலும் கூட இப்படத்திற்கு விக்ரம் 28 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருப்பதாக தங்கலான் படக்குழுவில் ஒரு பேச்சு அடிப்படுகிறது. அதற்கு தயாரிப்பு தரப்பிலிருந்தும் ஓகே சொல்லப்பட்டு இருக்கிறதாம்.
விக்ரம் இதுவரை வாங்கிய சம்பளத்தில் இதுவே உச்சப்பட்ச சம்பளம் என்கிறார்கள்.
சிங்கிள் பேமெண்ட் கேட்கும் சந்தானம்!
முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏறக்குறைய இரண்டாவது ஹீரோவை போல நடித்து வந்த சந்தானம், ரஜினி கமல் விஜய் அஜித் படங்களில் நடிக்க கூப்பிட்டாலும் கூட கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார்.
நடித்தால் இனி ஹீரோவாகதான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தப் பின்பு சந்தானத்தின் கால்ஷீட் இப்போது யாருக்கு வேண்டுமானாலும் தாராளமாக கிடைக்கிறது.
காரணம் சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்தப் படங்கள், மக்களிடமும் பாக்ஸ் ஆபீஸிலும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இப்படியொரு சூழல் இருந்தாலும், சந்தானத்தை வைத்து மினிமம் பட்ஜெட்டில் படமெடுக்கலாம் என்று அவரை அணுகும் தயாரிப்பாளர்களுக்கு கரண்ட் இல்லாமலே ஷாக் அடிக்குமளவிற்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறாராம்.
’உங்களுக்கு இல்லாமலா. நான் கால்ஷீட் தர்றேன். 5 கோடி ரூபாய் சம்பளம். சிங்கிள் பேமெண்ட்டுல கொடுத்துடுங்க’ என்று சந்தானம் கண்டிஷன் போடுகிறாராம்.