சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், சனிக்கிழமை இரவு தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதில் பயணித்த 3 பயணிகளிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட ரூ. 3. 99 கோடி கைப்பற்றப்பட்டது.
பணத்தை எடுத்துச் சென்றவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினர் உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள், புரசைவாக்கம் தனியார் விடுதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக முதற்கட்ட விசாரணை முடிவில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சில இடங்களில் சோதனைகள் நடைபெற்றன.
இந்த விவகாரத்தைப் பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று தெரிவித்த கருத்துகள்…
நயினார் நாகேந்திரன்:
தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. எனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர். எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்க்கெட் செய்கின்றனர். நான் பிரபலமாக இருப்பதால் இப்படி சிலர் செய்கிறார்கள்.
ஆர்.எஸ்.பாரதி:
திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்காக, அவரின் உதவியாளர் சதீஷ் மற்றும் 2 பேர் 4.5 கோடி பணத்தைக் கொண்டு சென்றிருக்கின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள டைமண்ட் ஹோட்டலில் சோதனை செய்துள்ளனர். இந்தப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பல கோடி பணத்தை
ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
எனவே, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும். தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும், அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வேண்டும்.
அண்ணாமலை:
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், தனக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.வினர்தான் உண்மையான திருடர்கள். பணத்தை பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை ஒரு கட்சிக்கு இல்லையென்றால் அது திராவிட முன்னேற்ற கழகம்தான். தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
இரா.முத்தரசன்:
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரெயிலில் உரிய ஆவணங்களின்றி நான்கு கோடிக்கும் கூடுதலான தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பணம் பா.ஜ.க. வேட்பாளரும், தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள நயினார் நாகேந்திரன் அவர்களது தேவைக்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கைதானவர்கள் விசாரணையில் கொடுத்துள்ள வாக்குமூலம் அதனை உறுதிப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது இந்திய தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த நடத்தை விதிமீறல் மீது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உறுதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.