No menu items!

சினிமா ஸ்டைலில் நாமக்கல் என்கவுண்டர் – நீதிமன்றம் சரமாரி கேள்வி

சினிமா ஸ்டைலில் நாமக்கல் என்கவுண்டர் – நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரளாவில் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளையர்களில் ஒருவர் தமிழகத்தில் நாமக்கலில் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் தொடரும் என்கவுண்டர் சம்பவங்கள் தொடர்பாக உயர் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

சினிமா பாணியில் என்கவுண்டர்

கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையில் வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அப்போது லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அச்சமயத்தில் கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளை கும்பல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ராஜஸ்தானை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளட்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே குமாரபாளையத்தில் என்கவுண்டர் நடத்தப்பட்ட இடத்தில் நீல நிறத்தில் கொள்ளையர்கள் தூக்கிக்கொண்டு ஓடிய பேக்கில் இருந்து சிதறிய 500 ரூபாய் நோட்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. நோட்டுகள் அந்த இடத்திலேயே அப்படியே கிடக்கிறது. அவை காற்றில் பறக்காமல் இருப்பதற்காக காவல்துறையினர் ரூபாய் நோட்டின் மீது கற்களை வைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் சோதனையில் இறங்கி தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட கண்டெய்னரில் இருந்து மொத்தமாக 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹைகோர்ட் சரமாரி கேள்வி

நாமக்கல் என்கவுண்டர் பரபரப்புக்கு இடையே, தமிழ்நாட்டில் போலீசிடமிருந்து தப்ப முயற்சிப்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைவது விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது என உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் மதுரையில் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற என்கவுண்ட்டர் தொடர்பாக கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரை மற்றும் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது காவல்துறை வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2010 ஆம் ஆண்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், எனது மகன் முருகனை கடந்த 2010ஆம் ஆண்டு, மதுரை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த வெள்ளத்துரை மற்றும் உதவி ஆய்வாளர் தென்னவன், ஏட்டு கணேசன் ஆகியோர் சேர்ந்து சுட்டுக்கொலை செய்தனர். இது தொடர்பாக நான் அளித்த புகாரின் பேரில் வெள்ளைத்துரை (கூடுதல் டிஎஸ்பியாக இருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டார்) மற்றும் சம்பந்தட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் விசாரணையை சிபிசிஐடியிலிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு முன்பு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் சில வாதங்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில், ‘மனுதாரர் மகன் உள்பட தேடப்பட்டு வந்த 2 பேர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது, போலீசாரை அரிவாளால் தாக்கினர். இதனால் அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மனுதாரர் மகன் முருகன் மீது 25 வழக்குகளும், அவரது கூட்டாளி கவியரசன் மீது 75 வழக்குகளும் நிலுவையில் இருந்தன” என்று கூறப்பட்டது.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை மீது வழக்கு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தவரவில், ‘மனுதாரர் மகன் இறந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைய குழு விசாரணையில், உதவி கமிஷனர் வெள்ளத்துரை மட்டும் 10 என்கவுண்ட்டர்களில் ஈடுபட்டுள்ளார் என்று இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த அதிகாரி, தற்காப்புக்காக மீண்டும், மீண்டும் என்கவுன்ட்டர்களில் ஈடுபட்டாரா அல்லது யாருடைய தூண்டுதலின்பேரில் இதுபோல நடந்து கொண்டாரா? என்பதை விசாரணை செய்ய வேண்டும். இத்தகைய விவகாரங்களில் முழுமையான விசாரணை நடத்துவது அவசியம்.

தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கை சிறப்பாக பாதுகாக்கும் ஒரு அமைப்பாக உள்ளது. இருந்த போதிலும், போலீசாரை தாக்க முயலும் ஆபத்தான குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, பின்னர் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது அல்லது காயம் அடைவது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசிடம் தப்பிக்க முயற்சிப்பதும், பிறகு கீழே விழுந்து கை, கால்களை உடைத்துக்கொள்வதும் விசித்திரமான முறையில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் பிற்போக்கான சிந்தனை ஆகும். ஆனால், இதனை உணராமல் பாராட்டுகிறார்கள்.

உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை ஒரு மாயை. அது உண்மையானது இல்லை. என்கவுன்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறது. இந்த வழக்கில் மனுதாரர் மகன் இறந்த வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். உயர் அதிகாரி ஒருவரை தமிழக காவல் டிஜிபியாக நியமித்து, மனுதாரர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 6 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...