நாட்டிலேயே முதல்முறையாக கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு நபார்டு வங்கி வழங்கியுள்ளதாக வங்கியின் பொது மேலாளர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளார். விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) 44-வது நிறுவன நாள் விழா சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை வகித்து, நபார்டு வங்கியின் 2025-26-ம் நிதியாண்டுக்கான அலகு செலவு கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து ‘நேப்சுவடு’ எனப்படும் விவசாயப் பொருட்களை கண்டறியும் செயலியையும் அறிமுகம் செய்துவைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, “மீன்வளம், கால்நடை, நீர்வளம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கான பட்ஜெட்டை திட்டமிடும்போது, அதில் ஒரு முக்கிய நிதி ஆதாரமாக நபார்டு வங்கி இருக்கிறது. நபார்டு வங்கியின் மூலம் கடந்த நிதியாண்டில் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் நிதியுதவி வழங்கப்பட்டிருக் கிறது. கிராமப்புற கடனுதவிக்கான இலக்காக நபார்டு வங்கியில் கடந்த ஆண்டு ரூ.8.34 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு ரூ.9 லட்சமாக அது அதிகரிக்கப்பட் டுள்ளது.
மின்னணு பொருட்களின் உற்பத்தியை நாம் அதிகரித்து வருவதால், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விவசாயிகளுக்கு மார்க்கெட்டிங், பிராண்டிங், விளம்பரம், ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் பல்வேறு உதவிகளை செய்துவரும் நபார்டின் பணி சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது” என்றார்.
தொடர்ந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் பேசுகையில், “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள திட்டங்களை கொண்டு வருவது விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் முக்கியம். அந்த வகையில் நபார்டு வங்கியுடன் இணைந்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘காலநிலை ஸ்மார்ட் கிராமங்கள்’ என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் ஆர்.ஆனந்த் பேசும்போது, “நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் ரூ.56 ஆயிரம் கோடியை நபார்டு வங்கி பட்டுவாடா செய்திருக்கிறது. அதேபோல் இதுவரை ஊரக கட்டமைப்புகளுக்கு ரூ.38 ஆயிரம் கோடியை தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது.