வெளிநாடுகளுக்கு செல்லும்போது வழக்கமாக விமானங்களை பயன்படுத்தும் பிரதமர் மோடி, முதல் முறையாக உக்ரைன் நாட்டுக்கு ரயிலில் செல்கிறார். 45 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக அந்நாட்டுக்கு செல்லும் இந்திய பிரதமரான பிரதமர் மோடி, போலந்தில் இருந்து ரயில் ’ஃபோர்ஸ் ஒன்’ என்ற ரயிலில் பயணித்து உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குச் செல்கிறார்.
போலாந்தில் இருந்து இன்று சிறப்புவாய்ந்த இந்த ரயில் மூலம் புறப்படும் பிரதமர் மோடி நாளை (ஆக. 23) கிவ் நகருக்குச் சென்றடைவார். இந்த ரயில் பயணம் 20 மணிநேரம் இருக்கும் என கூறப்படுகிறது. போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளின் வழியாக செல்லும் இந்த ரயிலில், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு வசதிகள், வேலை மற்றும் ஓய்வெடுப்பதற்கான வசதிகள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்
பொதுவாக ஒவ்வொரு நாட்டு தலைவர்களும் மற்ற நாடுகளுக்கு செல்லும்போது விமானங்களைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா மீது போர் தொடுத்த பிறகு அந்நாட்டுக்குச் செல்லும் தலைவர்கள் பலரும் விமானங்களைவிட ரயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதிலும் ‘ரயில் ஃபோர்ஸ் ரயில் ஒன்’ ரயிலைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
உக்ரைனின் விமான நிலையங்கள் பலவும் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டதும், உக்ரைன் நாட்டின் வான் எல்லை அத்தனை பாதுகாப்பாக இல்லை என்பதும்தான் இதற்கு முக்கிய காரணம். பிரதமர் மோடிக்கு முன்னதாக அந்நாட்டுக்குச் சென்ற பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், முன்னாள் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி மற்றும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரும் இதே ரயில் ஃபோர்ஸ் ஒன் ரயிலில்தான் உக்ரைன் சென்றனர்.
போர் காரணமாக விமானப் பயணங்கள் பாதுகாப்பற்றவையாக இருக்கும் சூழலில், அந்த பாதுகாப்பை ரயில் பயணம் வழங்குகிறது.