2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்புகள் ஆரம்பமாகிவிட்டன. எதிர்க் கட்சிகள் INDIA என்ற கூட்டணியை உருவாக்கி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. பாஜக தலைமையில் இருக்கும் NDA கூட்டணியும் தேர்தல் ஆலோசனைகளை ஆரம்பித்துவிட்டன.
இந்தச் சூழலில் இன்று தேர்தல் நடந்தால் யார் ஆட்சியைப் பிடிப்பார்? யார் பிரதமராவார் என்று India TV-CNX கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
இதன்படி இன்று தேர்தல் நடந்தால் பாஜக தலைமையில் இருக்கும் தேசிய முற்போக்கு கூட்டணி 318 இடங்களில் வெல்லும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 353 இடங்களை இந்தக் கூட்டணி பிடித்திருந்தது. பாஜக தனியாக 290 இடங்களில் வெல்லும் என்று இப்போது வந்துள்ள கருத்துக் கணிப்பு சொல்லுகிறது. இது 2019ல் பெற்ற இடங்களைவிட 13 இடங்கள் குறைவு. எதிர்க் கட்சிகளின் INDIA கூட்டணி 175 இடங்களில் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தனியாக 66 இடங்களில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 2019 தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில்தான் வென்றிருந்தது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேசத்தில் பாஜக இன்றும் வலுவாக இருக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களில் பாஜக வெல்லுமாம். உத்ரகாண்டில் இருக்கும் 5 தொகுதிகளிலுமே பாஜகவுக்குதான் வெற்றி என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு. அதே போல் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையுமே பாஜகவே கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 போல் 39ல் 38 இடங்களை திமுக அணி பிடித்தது போல் இந்த முறை பிடிக்க முடியாது என்கிறது கருத்துக் கணிப்பு. கடந்த முறை திமுக 24 இடங்களில் வென்றது. ஆனால் இன்று தேர்தல் நடந்தால் 19 இடங்களில்தான் வெல்ல முடியும் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு. எடப்பாடி பழனிசாமியின் அதிமுக 8 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் வெல்லும் என்று இந்தக் கருத்துக் கணிப்பு சொல்கிறது. மொத்தமாய் திமுக கூட்டணி 31 இடங்களில் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டு ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து வெல்ல சிரமம் என்பது இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளிலிருந்து தெரிகிறது.
மேற்கு வங்கத்தில் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் காங்கிரஸ், மகாரஷ்டிரத்தில் உதவ் தாக்கரேவின் சிவ சேனை ஆகிய மாநிலக் கட்சிகள் 2024 தேர்தலில் பலமாகும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.