எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான், என்று விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் நடந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப்போராளிகளை போற்றும் வகையில், விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும், ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை இன்று (ஜன.28) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு அமைந்துள்ளது. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ.கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார்.21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை உருவாக்கி 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது.
வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்துக்கான தேவைகளை கண்டறியப்பட்டது.