“முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் துரைமுருகனும் பரஸ்பரம் ஒருத்தர் மேல ஒருத்தர் வருத்தத்துல இருக்காங்களாம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“முதல்வர் மேல துரைமுருகனுக்கு என்ன வருத்தம்?”
“திமுகவை சீரமைக்க ஒரு குழுவை முதல்வர் அமைச்சிருக்கார். இந்த குழுவை அமைக்கறதுக்கு முன்னாடி, பொதுச் செயலாளர்ங்கிற முறையில இதுபத்தி துரைமுருகன்கிட்ட முதல்வர் பேசலையாம். அதுனால முதல்வர் மேல துரைமுருகனுக்கு வருத்தம். ‘கட்சியில் அமைப்பு ரீதியா ஒரு மாற்றம் செய்யும்போது, அதுபத்தி என்கிட்ட கேட்கக்கூட இல்லை. அதோட அந்த குழுவுல என்னையும் சேர்க்கல. என்னை விட்டுட்டு இப்ப புதுசா கட்சியில சேர்ந்தவர்களை சேர்த்திருக்காங்க’ன்னு தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட வருத்தப்பட்டிருக்கார்.”
“இந்த தகவல் முதல்வருக்கு போயிருக்குமே?”
“ஆமாம் தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட துரைமுருகன் பேசினது முதல்வர் காதுக்கும் போயிருக்கு. ஆனா முதல்வர் இதுபத்தி எல்லாம் அலட்டிக்கலை. கட்சி சீரமைப்பு குழு கூட்டத்தில பேசின முதல்வர், ‘விளைவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. கட்சி சீரமைப்பு பணியில தீவிரமா இருங்க. என்ன எதிர்ப்பு வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ன்னு சொல்லி இருக்கார்.”
“முதல்வருக்கு துரைமுருகன் மீது என்ன வருத்தம்?”
“இந்த வருத்தம்தான். என்கிட்ட நேரடியாவே சொல்லியிருக்கலாமே எதுக்கு வெளில பேசுறார்னு வருத்தப்பட்டிருக்கிறார்”
“முதல்வர் வெளிநாடு பயணம் எந்த அளவுல இருக்கு?”
“அனேகமா ஆகஸ்ட் 15-க்கு பிறகுதான் அவரோட வெளிநாட்டு பயணம் இருக்கும்னு சொல்றாங்க. நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக்க டெல்லி செல்லும் முதல்வர், அங்க பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கார். பிரதமரிடம் சில விஷயங்களை பேசி முடிவு செஞ்சுட்டுதான் அவர் வெளிநாட்டுக்கு போவாராம்.”
“அதிமுக நியூஸ் ஏதாவது இருக்கா?”
“2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும் ஒரு குழுவை அமைக்கப் போகுதாம். தேர்தல் தோல்வி பற்றிய அதிமுகவில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எடப்பாடி கடைப்பிடிச்ச மென்மையான போக்கு எல்லோருக்கும் ஆச்சரியமா இருந்திருக்கு. இந்த கூட்டத்துல பேசின எடப்பாடி, ‘தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்ங்கிறது உங்களுக்கும் தெரியும்… எனக்கும் தெரியும். இதனால் நமக்குத்தான் இழப்பு என்பதை நீங்கள் புரிஞ்சுக்கிட்டால் சரி. நான் கட்சிக்கு உண்மையாக இருக்கிறேன் தேர்தல் வேலை செய்தவர்கள் உண்மையாக இருந்தீர்களா என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். மற்றபடி எனக்கு எதுவும் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம்’ன்னு சொல்லி இருக்கார்.”
“எஸ்.பி.வேலுமணி அதிமுகவை கைப்பற்ற முயற்சிக்கிறார்னு ஒரு நியூஸ் போய்கிட்டு இருக்கே”
“ஆமாம். அது பத்தி சவுக்கு சங்கர் பேசுனதா ஒரு ஆடியோ வைரலாகியிருக்கு. இது பத்தி எடப்பாடி விசாரிச்சிருக்கார். அது இப்போ பேசுனது இல்லை முன்னாடி எப்பவோ பேசுனதுனு அவருக்கு ரிப்போர்ட் போயிருக்கு. ஆனால் வேலுமணியை எடப்பாடி முழுசா நம்ப தயாரில்லை”
“தமிழக பாஜகவுக்கு நயினார் நாகேந்திரன் தலைவர் ஆவார்ன்னு ஒரு செய்தி பரவிச்சே?”
“இந்த செய்தியால தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் அப்செட்ல இருக்கார். தனக்கு வேண்டாதவங்கதான் இந்த வதந்தியை பரப்பறாங்கன்னு அவர் சந்தேகப்படறார். தனக்கு எதிரா சதி நடக்கறதாவும் அவர் நினைக்கறார். அதனாலதான் கோவை கூட்டத்தில மூன்றாண்டுகள் கஷ்டப்பட்டுதான் தலைவர் பதவியில் அமர்ந்துள்ளேன். எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அரசியலில் இருக்கணுமா என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது’னெல்லாம் அவர் பேசி இருக்கார்.”
“அண்ணாமலையை மாத்திடுவாங்களா?”
“மாத்தப் போறாங்கனுதான் கமலாலயத்துல பேசுறாங்க. ஆனா அண்ணாமலை ஆதரவாளர்கள் இந்த செய்தியை மறுக்கிறாங்க. அண்ணாமலை உழைப்பு கட்சித் தலைமைக்கு தெரியும். அதனால அவரை மாத்த மாட்டாங்கனு நம்பிக்கையா இருக்காங்க”
“சரி, உன் நியூஸ் என்ன சொல்லுது?”
“இப்போதைக்கு அண்ணாமலைக்கு எதிர் கோஷ்டிதான் முன்னால நிக்குது. அதனாலதான் அண்ணாமலை அப்படி பேசினார். அடுத்த வாரம் இந்த நிலைமை மாறலாம்.”
‘ஆம்ஸ்ட்ராங் தொடர்பான நினைவேந்தல் பேரணியில இயக்குநர் பா.ரஞ்சித் தீவிரமா பேசி இருக்காரே?”
“அவர் அப்படி பேசினது எல்லாம் பகுஜன் சசமாஜ் கட்சியோட தலைவர் பதவியை பிடிக்கத்தான்னு சொல்றாங்க. ஆனா அவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் அவரோட ஆதரவாளர்களும் அதை ஏத்துக்கலை. ஆம்ஸ்ட்ராங் மனைவி கட்சித் தலைவியாகணும்னு அவங்க விரும்பினாங்க. ஆனா அவர் அந்த பதவி வேண்டாம்னு சொல்லி ஆம்ஸ்ட்ராங்கோட நெருங்கிய நண்பரான ஆனந்த் பெயரை பரிந்துரை செய்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் பதவி கிடைக்காத்தால இப்ப பா.ரஞ்சித் தனிக்கட்சி ஆரம்பிக்கறது பத்தி யோசிக்கறாராம்.”
“சசிகலாவோட சுற்றுப்பயணமெல்லாம் எப்படி நடக்குது?”
“சசிகலா சுற்றுப்பயணம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவு வெற்றியெல்லாம் இல்லையாம். பணம் கொடுத்துதா பல இடங்கள்ல கூட்டத்துக்கு ஆள் சேர்த்தார்களாம் பொதுமக்கள்கிட்ட இந்த பயணத்துக்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் எல்லாம் இல்லைன்னு சொல்றாங்க. இதைக் கேள்விப்பட்ட டிடிவி தினகரன், ‘சின்னம்மா காலம் எல்லாம் அந்த காலம் இப்போது அவர் செல்லாக்காசு’ன்னு சொல்லி சிரிச்சிருக்கார்.”
“அப்ப அதிமுகவை அவரால இணைக்க முடியாதா?”
“தினகரனே அவரை மதிக்கலை. அப்புறம் எடப்பாடி எங்கயிருந்து மதிக்கறது?” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.