”முதல்வர் ஸ்டாலின் ரொம்ப வருத்தத்துல இருக்காராம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“ஸ்டாலின் வருத்தப்படற மாதிரி நிறைய விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. இதுல நீ எந்த விஷயத்தைச் சொல்றே?”
“இந்தியா கூட்டணி விஷயத்தைத்தான் சொல்றேன். ஆரம்பிச்ச வேகத்துலயே இந்தியா கூட்டணி காணாம போயிடுமோன்னு ஸ்டாலின் வருத்தப்படாறார். மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், நிதீஷ் குமார்னு ஒவ்வொருத்தரா காங்கிரஸ் கட்சிக்கு எதிரான மனநிலையில போயிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் பாஜகவோட பேச்சுவார்த்தை நடத்தறதா தகவல்கள் வருது. இதெல்லாம் முதல்வர் ஸ்டாலினை அப்செட் பண்ணியிருக்கு. இப்படி ஒவ்வொருத்தரா கழண்டுபோற நேரத்துல, அவங்களை தக்க வச்சுக்க காங்கிரஸ் கட்சி எதையுமே செய்யலைன்னு அவர் நினைக்கிறார். இதுக்கு நடுவுல மம்தா பானர்ஜி ஸ்டாலினை தொடர்புகொண்டு, ‘காங்கிரஸ் கட்சி நம்பகமான கட்சி இல்லை. அவங்களை கொஞ்சம் தள்ளியே வைங்க’ன்னு சொல்லி இருக்காங்க. இதெல்லாம் சேர்த்து அவரை குழப்பத்துல தள்ளியிருக்கு”
“என்ன முடிவு எடுக்கப் போறாராம்?”
“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு கொஞ்சம் ஓட்டு சதவீதம் இருக்கு. அது மட்டுமில்லாம, கழட்டி விட்டா அவங்கள சேர்த்துக்கிறது அதிமுகவும் இருக்கு. அதனால காங்கிரஸ் கூட்டணி தொடரும்னுதான் அறிவாலயத்துல பேச்சு”
“எம்எல்ஏ கருணாநிதியோட மகன் தன் வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப் படுத்தினதா வெளியான செய்தியும், அதைத் தொடர்ந்து நடந்த விஷயங்களும் முதல்வரை அப்செட் ஆக்கி இருக்கறதா சொல்றாங்களே?”
“உண்மைதான். இந்த விஷயத்தை வச்சு சோஷியல் மீடியால திமுகவுக்கு எதிரா பெரிய அளவுல பிரச்சாரம் நடக்குது. இதனால கோபமான முதல்வர் ஸ்டாலின், இ.கருணாநிதிகிட்ட போன்ல பேசியிருக்கார். ‘தலைவரோட பேரை வச்சுக்கிட்டு இப்படி கட்சிக்கு கெட்ட பேரை வாங்கிக் கொடுக்கிறீங்களே.. நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. உங்க மகனும் மருமகளும் போலீஸ்ல சரண் அடையணும். இல்லைன்னா விளைவுகள் உங்களுக்கு எதிரா இருக்கும். கட்சியும் காவல்துறையும் உங்களுக்கு ஆதரவா இருக்காது’ன்னு கோபமா பேசிட்டு போனை வச்சிருக்கார். அதுக்கு பிறகுதான் தன்னோட மகனும் மருமகளும் ஆந்திரால இருக்கறதா போலீஸ்க்கு கருணாநிதி தகவல் கொடுத்து, அவங்க கைது செய்யப்பட்டு இருக்காங்க. இந்த விஷயத்துல திமுக மாவட்ட செயலாளர் தா.மோ அன்பரசன் தனக்கு எதிரா செயல்படுகிறார்னு இ. கருணாநிதி புலம்பிட்டு இருக்காராம்.”
“நாடாளுமன்ற தேர்தல்ல திமுக வேட்பாளரோ, கூட்டணிக் கட்சி வேட்பாளரோ தோல்வி அடைஞ்சா அந்த தொகுதிக்கு பொறுப்பான அமைச்சரோட பதவி பறிபோகும்னு முதல்வர் ஸ்டாலின் எச்சரிச்சிருக்காரே?”
“இதை திமுக அமைச்சர்கள் பலரும் ரசிக்கல. நம் கட்சி வேட்பாளர் தோத்தா அதுக்கு பொறுப்பு ஏத்துக்கலாம். ஆனா கூட்டணி கட்சியோட வேட்பாளர் தோத்தா அதுக்கு எப்படி பொறுப்பு ஏத்துக்க முடியும்? அவங்க தோத்தா அவங்க கட்சிக்கு செல்வாக்கு இல்லைன்னுதானே அர்த்தம். அதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்னு புலம்பறாங்களாம்.”
“கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிச்சிருக்காங்களே?”
“இந்த வருஷம் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள்ல பலதும் சில மாதங்கள்ல வரப்போற நாடாளுமன்ற தேர்தலை மனசுல வச்சுத்தான் அறிவிக்கப்பட்டிருக்கு. தமிழ்நாட்ல 8 பேர் உட்பட தென்னிந்தியால மட்டும் 35 பேருக்கு பத்ம விருதுகளை அறிவிச்சிருக்காங்க. குறிப்பா ஆந்திரால சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருதையும், தமிழ்நாட்ல கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருதையும் கொடுத்திருக்காங்க. இதுல விஜயகாந்த்தோட பேரை கடைசி நேரத்துல சேர்த்தாங்களாம். இந்த விருதை அறிவிக்கறதுக்கு முன்னால பிரேமலதாகிட்ட பேசி நாடாளுமன்ற தேர்தல்ல பாஜக கூட்டணியில தேமுதிக இருக்கும்கிறதை உறுதிப்படுத்திக்கிட்டாங்களாம்.”
“சசிகலா வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போனியா?”
“அவங்க தினகரனையும், திவாகரனையுமே கூப்பிடலை. அப்புறம் என்னை எங்க இருந்து கூப்பிடறது?”
“ஏன் அவங்களை கூப்பிடலையாம்?”
“சமீப காலமா அவங்களோட செயல்பாடுகள் சசிகலாவுக்கு பிடிக்கலை. எடப்பாடிகிட்ட திரும்பவும் சேர்ந்தா என்னங்கிறது சசிகலாவோட நிலைப்பாடு. ஆனா தினகரன் அதுக்கு எதிரா இருக்காரு. அதே நேரத்துல தினகரனை விட்டுட்டு திவாகரனை மட்டும் கூப்பிட்டா, அவருக்கு வருத்தமாகியும். அதனால ரெண்டு பேரையுமே சசிகலா தவிர்த்திருக்கார்.”
“கோடநாடு விஜயம், புதுமனை புகுவிழான்னு சசிகலா திரும்ப பழைய ஃபார்முக்கு வந்துட்டாரே?”
“பாஜகவோட பேச்சுவார்த்தை நடத்தின பிறகுதான் இதெல்லாம் நடக்குதாம். அமலாக்கத் துறை 1,520 கோடி மதிப்புள்ள சசிகலாவோட சொத்துகளை முடக்கி வச்சிருந்தது. அதில இப்ப அவர் குடியேறின போயஸ் கார்டன் பங்களாவும் அடக்கம். 480 கோடி ரூபாய் அபராத தொகை கட்டி தன்னோட சொத்துகளை சசிகலா மீட்டிருக்காங்க. அதுக்கு பிகுதான் புதுமனை புகுவிழா நடத்தி இருக்காங்க.”
“பிப்ரவரி 26-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப் போறதா ஜாக்டோ ஜியோ அறிவிச்சிருக்கே?”
“பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் கொண்டுவரணுங்கிறது அவங்களோட கோரிக்கை. கர்நாடகால காங்கிரஸ் அரசு ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் சொன்னபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தறதா சொல்லி இருக்கு. திமுகவோட தேர்தல் அறிக்கைலயும் பழைய ஓய்வூதிய திட்டம் திரும்பவும் கொண்டுவரப்படும்னு சொல்லி இருந்தாங்க. ஆனா அதை இப்ப நடைமுறைப்படுத்த நிதித்துறை அதிகாரிங்க விரும்பல. இந்த நிலையிலதான் ஜாக்டோ ஜியோ போராட்டத்தை அறிவிச்சிருக்கு. நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களின் போராட்டம் தனக்கு பாதிப்பு ஏற்படுத்துமோன்னு முதல்வர் கவலைப்படறார்.”
“ஒரு பக்கம் நிதி பற்றாக்குறை மறுபக்கம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள்னு முதல்வர் ரொம்பத்தான் திண்டாடறார்.”
“பிரச்சினைகளே இல்லாம இருக்கணும்னா… எதிர்க்கட்சித் தலைவராத்தான் இருக்கணும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.