No menu items!

மிஸ் ரகசியா – ரஜினி அரசியல் 2.0

மிஸ் ரகசியா – ரஜினி அரசியல் 2.0

“ஒவ்வொரு வீட்லயும் தேசியக் கொடியை ஏத்தணும்னு பிரதமர் சொல்லியிருக்காரு. எனக்கு ஆபீஸ்தான் வீடு. அதனால இங்க கொடியேத்தறேன்” என்றவாறு தான் கொண்டுவந்த கொடியை ஆபீஸ் கேட்டின் முன் கட்டினாள் ரகசியா.

“வாழ்க உன் தேசபக்தி” என்று ரகசியாவை வரவேற்றோம்.

“இந்த கொடியேற்றம் என்பதெல்லாம் திசைதிருப்பல், மக்களை பிரச்சினைகளிலிருந்து மறக்கடிக்க மோடி செய்யும் தந்திரம் என்ற விமர்சனங்கள் வந்திருக்கு. தேசியக் கொடி ஏற்றாதவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வட இந்திய பாஜக தலைவர்கள் பேசுவதும் சர்ச்சையாகியிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை மக்களை தேச பக்தி மனநிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டிருக்கிறதாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக புல்வாமா தாக்குதல் நடந்தது. அப்போது தேச பாதுகாப்பு என்ற பாஜகவின் முழக்கம் அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு உதவியது. அதே போல் அடுத்த தேர்தலையும் சந்திக்க பாஜக திட்டமிடுகிறது”

“பாஜக இப்படி திட்டமிட்டாலும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக கழன்றுக் கொண்டே வருகிறதே. கூட்டணிகள் உடைவது அதற்கு பலவீனம்தானே?”

“ஆமாம். அது குறித்தும் பாஜக மேலிடம் ஆலோசனை செய்து வருகிறது. பீகாரில் நிதிஷ் குமார் சட்டென்று பாஜக கூட்டணியிலிருந்து விலகுவார் என்று பாஜக தலைமை எதிர்பார்க்கவில்லையாம்”

“அவங்களுக்கு தெரியாமலயா இருந்திருக்கும். பிரதமர் கலந்துகொண்ட நிதி ஆயோக் கூட்டங்கள்ல நிதிஷ் குமார் கலந்துக்கல, சாதி கணக்கெடுப்புல பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் மோதல்… இப்படி இந்த ஜனவரிலருந்தே ரெண்டு கட்சிக்கும் உறவு சரியில்லாமதானே இருந்தது”

”உறவு சரியில்லாமதான் இருந்தது ஆனால் சரி பண்ணிரலாம்ங்கிற நம்பிக்கைல பாஜக இருந்துருக்கு. கூட்டணிகளைப் பொறுத்தவரை இது பாஜகவுக்கு கஷ்ட காலம்தான். அகாலி தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனானு வரிசையா கூட்டணிக் கட்சிகள் முறுக்கிட்டு வெளியேறுறாங்க. பீகாரில் ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு ரெண்டு நாள் முன்னாடி கூட நிதிஷ்குமாரிடம் அமித் ஷா பேசியிருக்கிறார் அப்போ கூட எந்த சந்தேகமும் வரலையாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு அதுக்குள்ள நிலைமையை சரி பண்ணிரலாம்னு கட்சிக்காரங்ககிட்ட அமித் ஷா சொல்லியிருக்கார்”

”இங்கேயுமே திமுகவுடன் கூட்டணிக் கட்சிகளுக்கு வருத்தம்னு செய்திகள் வந்துக்கிட்டு இருக்கே”

“ஆமாம். முதல்வரும் எல்லா கூட்டங்கள்லயும் கூட்டணிக் கட்சியினரை உற்சாகப்படுத்துற மாதிரி பேசுறார். ஆனால் அதை ஏத்துக்க மறுக்கிறாங்க. கள்ளக்குறிச்சி விவகாரத்துல விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக மீது வருத்தம். காங்கிரசுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும்கூட வருத்தம். முதல்வரை நேர்ல சந்திச்சா இதையெல்லாம் பேசிரலாம்னு இருக்காங்க”
“திமுக உள்கட்சித் தேர்தல்கள் எந்த அளவில் இருக்கு?”

“பல இடங்களில் உள்கட்சித் தேர்தல் சுமுகமா நடக்கவில்லையாம். உண்மையில் ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாளன்று புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட ஸ்டாலின் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கட்சித் தேர்தல் சுமூகமாக இல்லாமல் இழுபறியாக இருந்ததால் தேர்தலை கொஞ்சம் கொஞ்சமாய் நடத்த வேண்டிய கட்டாயமாயிடுச்சு”

“என்ன பிரச்சினை?”

“ஆளும் கட்சியாக இருக்கிறதுனால ஒவ்வொரு பதவிக்கும் ஏழெட்டு பேர் போட்டி போடுறாங்க. சென்னையில் 400 வட்டச் செயலாளர் பதவிக்கு 4000 பேர் விண்ணப்பம் செஞ்சிருக்காங்க. இது மிகப்பெரிய தலைவலியாகிடுச்சு. உடனே மாவட்டச் செயலாளர் ‘இப்போதைக்கு பழைய வட்டச் செயலாளர்கள் தொடர்வதை கட்சி விரும்புது. அதனால நீங்க வேட்புமனுவை வாபஸ் வாங்குக்க’ன்னு சொல்ல, உடன்பிறப்புகள் பலரும் டென்ஷனாகி இருக்கிறார்கள். அவர்களை சமாதானம் செய்ய மாவட்ட செயலாளர் கடுமையாக போராடி வருகிறாராம். கலைஞர் காலத்திலயும் இதுமாதிரியான பிரச்சினை வந்துருக்கு. முக்கிய தலைகளை கலைஞர் கூப்பிட்டு பேசி சமாதானம் பண்ணி அனுப்புவார். செப்டம்பர் 15 முப்பெரும் விழாக்குள்ள உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க முடியுமாங்கிற சந்தேகத்துல திமுக இருக்குது”

“ஜூலை மாசம் முதல்வர் ஃபாரின் போறதா சொன்னாங்க. ஆனா ஆகஸ்ட் ஆகிடுச்சு. முதல்வரோட ஃபாரின் ட்ரிப் என்னாச்சு?”

“ஆமாம். மத்திய அரசுகூட அதற்கு அனுமதி அளித்திருந்தது. ஆனால் இப்போது தனது பயணத்தை 2 மாதங்களுக்கு முதல்வர் தள்ளிவைத்துள்ளாராம்.”

“மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படும்னு சொல்லியிருக்காரே. இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக கடுமையாக எதிர்த்ததே?”

“திமுகவுக்கு இது சிக்கல்தான். முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர் ஏ.வ. வேலுவுடன் நிதின் கட்காரி தொடர்ந்து பேசி அவர் மூலம் சம்மதம் வாங்கியிருக்கிறார்னு சொல்றாங்க. இது திமுகவுக்கு வரும் காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.”

“முதல்வருக்கு இதெல்லாம் டென்ஷனா இருக்குமே”

“இல்லை. உற்சாகமாகதான் இருக்கார். செஸ் ஒலிம்பியாடை வெற்றிகரமா நடத்துனதுல அவருக்கு ரொம்ப ஹேப்பி. செஸ் ஒலிம்பியாட் மாதிரி சர்வதேச அளவிலான பாட்மிண்டன் போட்டியை சென்னையில நடத்தணும்னு நினைக்கிறார். இந்த யோசனையைக் கொடுத்தது கிருத்திகா உதயநிதி. அவங்க பேட்மிண்டன் ரசிகை. நல்லா விளையாடவும் செய்வாங்க. அதனால மாமனார்கிட்ட இத சொல்லியிருக்கிறாங்க. முதல்வரும் சரி முயற்சிப்போம்னு சொன்னாராம்”

“சரி, எடப்பாடி டூர் போகிறாரே. ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கு?”

“ நல்ல கூட்டத்தை திரட்டியிருக்காங்க. திண்டுக்கல், பழனி நகரங்களில் எடப்பாடிக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து அதிமுககாரங்களுக்கே அதிர்ச்சி. இங்கு எப்படி இவ்வளவு கூட்டம் அவங்களே முணுமுணுத்துருக்காங்க. ஆளும் கட்சியும் எடப்பாடி நடவடிக்கைகளை கூர்ந்து பார்க்குது. உளவுத்துறை மூலம் எப்படி இத்தனைக் கூட்டம் என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறது. எடப்பாடிக்கு நிர்வாகிகள் ஆதரவு மட்டுமின்றி தொண்டர்களின் ஆதரவும் இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்துருக்கு உளவுத்துறை.”

“ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்தது பற்றிய விவாதங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறதே?”

“தேசபக்தி – தெய்வபக்தி -ஊழலற்ற ஆட்சி -ஆகிய 3 குறிக்கோள்களுடன் ரஜினியுடன் சேர்ந்து தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்க பாஜக முயற்சி செய்கிறது.”

”அப்போ ரஜினி மீண்டும் அரசியலுக்கு வராரா?”

“நேரடியா அவர் அரசியல் பேச மாட்டார். ஆனா மறைமுகமா மக்களை பாஜகவை நோக்கி போக வழிகாட்டுவார். விஸ்கி பேரை போட்டு விளம்பரம் பண்ண முடியாதுங்கறதுனால சோடா விளம்பரம் போட்டு விஸ்கியை ஞாபகப்படுத்துவாங்கல, அது மாதிரி” என்று ரகசியா சிரித்தாள். சிரித்தோம்.

”இதுல ரஜினியோட ரோல் என்ன?”

“ரஜினி ஆன்மீகம் பேசுவார். தமிழ்நாடு ஆன்மீக பூமி, இப்போ ரொம்ப கெட்டுப் போச்சுனு சொல்வார். தமிழ்நாடு மீண்டும் ஆன்மீக பூமியாக மாறணும்னு பேசுவார். இது நேரடியான அரசியல் கிடையாது. ஆனா ஆன்மீகத்தை பேசி பாஜகவை நினைக்க வைக்கிறதுதான் நோக்கம். இந்தக் கூட்டணிக்கு பேர் கூட யோசிச்சுக்கிட்டு இருக்காங்க”

“தேர்தலுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு. பேர் யோசிக்கிறாங்களா?” ஆச்சர்யப்பட்டோம்.

“பாஜகனாலே வேகம். எதிர்க்கட்சிகள் ஈடு கொடுக்க முடியாத வேகம். பாரதியார் பாடல் அல்லது கட்டுரையில் இருந்து புதிய கூட்டணியின் பெயருக்கு வார்த்தைகளைத் தேடுறாங்க. ‘மோடிக்கு கைகொடுப்போம்’ என்பது இந்த கூட்டணியின் கோஷமா இருக்கும் என்கிறார்கள்”

“கூட்டணி கூட்டணினு சொல்றியே, யாரெல்லாம் கூட்டணி”

“இப்போதிருக்கும் அதே கூட்டணிதான். அதிமுக மட்டும் ஒண்ணா கூட்டணில இருக்குமா அல்லது எடப்பாடி அதிமுகவும் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அதிமுகவும் தனித்தனியே கூட்டணில இருக்குமான்றது தெரியல. ஒரே அதிமுகவா வந்தா நல்லது, இரண்டு அணியாக வந்தாலும் பரவாயில்லைனு அமித்ஷா நினைக்கிறாராம். ஆனா கூட்டணிக்கு தலைமை பாஜகதான். அதுல இந்த முறை உறுதியா இருக்கப் போறாங்க”

“ரஜினி என்ன நினைக்கிறார்? எந்திரன் 2.0 வந்தது மாதிரி ரஜினி அரசியல் 2.0வா?”
“பாபா படத்தின் முன்பு தியானம், ராகவேந்திரரின் பிருந்தாவனம் முன்பு தியானம், நாடி ஜோதிடம் எல்லாம் பார்த்த ரஜினிக்கு ஓகேதானாம். அவர் நம்பிக்கையோடு இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தலை நடத்தவும் ரஜினி யோசனை சொல்லியிருக்கிறார் என்றும் பாஜகவில் கூறுகிறார்கள்”

”என்னமோ போ… உதயநிதி ஸ்டாலின் படத்துல ரஜினி நடிக்காம இருந்தா சரி. ஆமா, சுசீந்திரம் கோயிலில் இருந்து ராகுல் காந்தி நடைப்பயணம் ஆரம்பிக்கப் போவதாக சொல்கிறார்களே?

“போரில் வெற்றி பெற ஆஞ்சநேயரின் தயவு தேவை என்பது நம்பிக்கை. அதனால்தான் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையை அமைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இப்போது ராகுல் காந்தி, சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து நடைப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.”

“அப்போ காங்கிரசும் ஆன்மீக அரசியல் பாதையில் போகுது. வேறென்ன செய்திகள் இருக்கு?”

”அப்பா வைகோவுக்கும், பிள்ளை துரை வையாபுரிக்கும் இடையே சமீபத்தில பெருசா வாக்குவாதம் நடந்திருக்கு. வலிமையா இருந்த மதிமுகவை பலவீனமாக்கி தன்கிட்ட கொடுத்ததாக வையாபுரி சொன்னாராம். அதுல வைகோ ரொம்பவே அப்செட் என்கிறார்கள். ஆனால் மதிமுகவினரிடம் விசாரித்தால் அப்பாவிடம் அப்படியெல்லாம் பேசுபவரல்ல துரை என்று மறுக்கிறார்கள்” என்று கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...