No menu items!

மிஸ் ரகசியா: நயினார் நாகேந்திரனை வளைக்கும் திமுக

மிஸ் ரகசியா: நயினார் நாகேந்திரனை வளைக்கும் திமுக

காலையில் மார்னிங் வாக்கை முடித்துவிட்டு அந்த உடையிலேயே ஆபீசுக்கு வந்திருந்தாள் ரகசியா.

“பைக் மோடில் இருந்து வாக்கிங் மோடுக்கு எப்போது மாறினாய்?” என்றோம்.

“இந்திய அரசியலே இப்போது வாக்கிங் மோடில்தானே இருக்கிறது. ராகுல் காந்தியின் நடைப்பயணம்தான் இந்திய அரசியலில் இப்போதைய ஹாட் டாபிக். அதனால்தான் நானும் வாக்கிங் முடித்துவிட்டு அப்படியே ஆபீஸ் வந்துவிட்டேன்”

“ராகுல் காந்தியின் நடைப்பயணத்தைப் பற்றித்தான் முதலில் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். நீயே ஆரம்பித்துவிட்டாய்.

அவரது நடைப்பயணத்துக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?”

“மக்களிடையே வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ… பாஜகவை இது கொஞ்சம் டிஸ்டர்ப் செய்துள்ளது. அதனால்தான் அண்ணாமலை முதல் மத்திய அமைச்சர்கள் வரை ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியை ராகுல்காந்திக்கு வழங்கி ஒற்றுமை பயணத்தை தொடங்கி வைத்தார். ஆனால், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த ஒற்றுமைப் பயணம் காங்கிரஸை மீண்டும் ஒன்றிணைக்கும் பயணமாக இருக்கவேண்டும் என்பதால்தான் பொதுக்கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியினர் அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.”

“பாஜகவினரை டிஸ்டர்ப் செய்தால் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்களே?”

“ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தை தொடங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு முக்கிய தலைவரை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். ஆனால், ஆர்எஸ்எஸ் அதை விரும்பாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.”

“சோஷியல் மீடியா, பத்திரிகை பேட்டி என்று கார்த்தி சிதம்பரம் மீண்டும் பிஸியாகிவிட்டாரே?”

“ஆமாம். ஆனால், அவரது சமீபத்திய சர்ச்சை பேச்சை ப. சிதம்பரம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், வீட்டில் அவர்களுக்குள் காரசார விவாதம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.”

“திமுக பற்றி ஏதும் செய்திகள் இருக்கிறதா?”

“திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் சொல்லும் எந்த வேலையும் நடப்பதில்லை என்று அதிருப்தியில் இருப்பதாக உளவுத்துறை மூலம் முதல்வருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியின் டாப் 10 பிரச்சனைகளை வரிசைப்படுத்தி இதுபற்றிய அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தரலாம் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தந்திருந்தனர். இப்போது அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான டெண்டர்களின் கமிஷன் அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களையே சேரவேண்டும். இதில் மாவட்ட செயலாளர்களோ அந்தந்த மாவட்ட அமைச்சர்களோ தலையிடக்கூடாது என்று திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனால், திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.”

“மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தினால் நல்லது.”

“மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்லும்போது அங்கு கட்சிப் பிரச்சினைகளிலும் தீவிர கவனம் செலுத்துகிறார் முதல்வர். அந்தந்த மாவட்டத்தில் உள்ள உள்கட்சி பிரச்சினைகளை தன்னிடம் மனம்திறந்து கூறுமாறு கட்சித் தொண்டர்களிடம் சொல்கிறாராம். சில தினங்களுக்கு முன் திருநெல்வேலி சென்றபோது சபாநாயகர் என்ற முறையில் முதல்வரை சந்தித்துப் பேசினார் அப்பாவு. அப்போது நெல்லை குவாரிகளைப் பற்றி சற்று விஸ்தாரமாக பேசியிருக்கிறார். அவர் பேசிவிட்டு போனபிறகு முதல்வரை சந்தித்த கட்சி நிர்வாகிகள், ‘காங்கிரஸ் கட்சியை விட நெல்லையில் திமுகவில் கோஷ்டி சண்டைகள் அதிகமாக இருக்கிறது. நெல்லையில் உள்ள குவாரிகள் மற்றும் பேரவைத் தலைவர் அப்பாவு செய்யும் அரசியல்தான் இதற்கு காரணம் என்று அவர்கள் விலாவரியாக எடுத்துரைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து துரைமுருகன், டி.ஆர். பாலு இருவரையும் தொடர்புகொண்டுள்ளார் முதல்வர். ‘இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? என்ன நடக்கிறது? ஆட்சிக்கு கெட்ட பெயர் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பேரவைத் தலைவரிடமும் பேசுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.”

“திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?”

“அது உண்மையாக இருக்காது என்று அதிமுக எம்எல்ஏக்களே சொல்கிறார்கள். இருப்பினும் இதில் ஏதாவது உண்மை இருக்குமா என்று விசாரித்து வருகிறது திமுக. அதேநேரத்தில் எடப்பாடியின் கருத்துக்கு பதிலடியாக ‘அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜ்யசபா எம்பிக்கள் பலரும் எங்களிடம் விண்ணப்பங்களை தந்திருக்கிறார்கள் என்று அடித்து விட்டிருக்கிறார்.”

“மருமகன் சொல்வதைத்தான் முதல்வர் கேட்கிறார் என்ற பேச்சு திமுகவில் அதிகமாகி வருகிறதே?”

“ஆரம்பத்தில் ஆட்சியில் முதல்வருக்கு யோசனை சொல்லும் வேலையை மட்டும் மருமகன் சபரீசன் கவனித்து வந்தார். இப்போது மேலும் முன்னேறிவிட்டார். டெல்லியில் உள்ள முக்கிய கட்சித் தலைவர்களுடன் நேரடி தொடர்புகளை அவர் ஏற்படுத்தி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வியூகம் அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இப்போதுள்ள எம்பிக்களில் யாரெல்லாம் மக்களிடம் செல்வாக்காக உள்ளனர் என்றும் ஆய்வு செய்து வருகிறார். இது கட்சிக்காரர்களில் பலருக்கு பிடிக்கவில்லை. மாறாக மருமகனின் செயல்கள் முதல்வரை உச்சி குளிர வைத்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முரசொலி மாறன் எப்படி மனசாட்சியாய் இருந்தாரோ, அதேபோன்று தற்போது சபரீசன் தனக்கு இருப்பதாக குடும்பத்தினரிடம் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.”

“முதல்வருக்கு எதிரான வழக்கு ஒன்றை பாஜக தீவிரமாக கவனித்து வருவதாக சொல்கிறார்களே?”

“2011-ல் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பாக சைதை துரைசாமி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வெற்றி பெற்றதாக உயர் நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார். 6 ஆண்டுகள் விசாரணை நடந்த நிலையில், ஸ்டாலின் வெற்றி செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. இதனைத் தொடர்ந்து சைதை துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 28-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை அதிமுக அவ்வளவு கரிசனத்துடன் கவனிப்பதும் இல்லை, கண்டு கொள்வதும் இல்லை. மாறாக பாரதிய ஜனதா இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று மூத்த தலைவர்கள், வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்கிறார் மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்பியுமான வில்சன். இதில் அசட்டையாக இருக்கக்கூடாது என்று அவர்களை அவர் எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.”

“அதிமுக மோதல்கள் எந்த நிலையில் இருக்கிறது?”

“தலைமைக்கழகத்தில் வைத்து ஓபிஎஸ்ஸை எடப்பாடி விளாசித் தள்ளியுள்ளதால் கடுப்பில் இருக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். பதிலுக்கு நாமும் தலைமைக் கழகத்துக்கு செல்லவேண்டும் என்று ஓபிஎஸ்ஸை அவர்கள் உசுப்பி வருகிறார்கள். அதேசமயம் தலைமைகழக பாதுகாப்புக்கு எடப்பாடி தரப்பு பவுன்சர்களை நியமித்திருக்கிறது. விரைவில் ராயப்பேட்டை பகுதியில் இன்னொரு பரபரப்பு காணொளி காட்சிக்கு வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்”

“நெல்லையில் நடந்த அரசு விழாவில் முதல்வரைப் புகழ்ந்து நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறாரே?”

“அதிமுகவில் இருந்து பாஜகவில் சேர்ந்த தனக்கு அங்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று நயினார் நாகேந்திரன் எதிர்பார்த்துள்ளார். ஆனால், அப்படி நடக்காததில் அவருக்கு வருத்தம். இதைக் கேள்விப்பட்ட திமுக தலைமை அவரை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்படி அவர் வந்தால் முக்கிய துறையின் அமைச்சராக்குவதாகவும் அவருக்கு உறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் இந்த பேச்சு என்கிறார்கள் உடன்பிறப்புகள்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது ரகசியாவின் செல்போன் ஒலித்தது.

“முக்கிய அழைப்பு. அவசரமாக செல்லவேண்டி இருக்கிறது” என்று கூறி விடைபெற்றார் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...