பிரதமர் மோடியின் திருச்சி விசிட்டை கவர் செய்வதற்காக சென்றிருந்த ரகசியா, அங்கிருந்து சரியாக மதியம் 2 மணிக்கெல்லாம் போன் செய்துவிட்டாள்.
“மோடியின் திருச்சி விசிட் எப்படி இருந்தது?”
“ஒரு காலத்தில் தமிழ்நாட்டுக்கு மோடி வந்தப்ப, ‘கோ பேக் மோடி’ங்கிற வாசகம் ட்விட்டர்ல அதிகமா ட்ரெண்டிங் ஆச்சு. பிரதமரால சென்னை சாலையிலகூட போக முடியல. ஐஐடி சாலை வழியாத்தான் ட்ராவல் பண்ணாரு. ஆனா இப்ப திருச்சியில சாலையில் 2 பக்கமும் மக்கள் வாழ்த்த கம்பீரமா கார்ல போயிருக்கார் பிரதமர்.”
“பிரதமரோட இந்த பயணத்தின் நோக்கம் திருச்சியில திட்டங்களை தொடங்கி வைக்கறது மட்டும்தானா?”
“சமீப காலமா தென் இந்தியாவுல காங்கிரஸ் கட்சி திரும்பவும் பவர்ஃபுல்லா மாறிட்டு வர்றதா பாஜக தலைமை நினைக்குது. கர்நாடகா, தெலங்கானா மாநிலங்கள்ல அந்தக் கட்சி ஆட்சியை பிடிச்சிருக்கு. கேரளால அடுத்த நாடாளுமன்ற தேர்தல்ல காங்கிரஸ் கட்சி 17 இடங்கள் வரை ஜெயிக்கும்னு கருத்துக் கணிப்புகள் சொல்லுது. இது போதாதுன்னு ஆந்திர மாநிலத்துலயும் காங்கிரஸ் கட்சி வலுவாக ஆரம்பிச்சிருக்கு. அங்க ராஜசேகர ரெட்டியோட மகள் வர்ற 4-ம் தேதி காங்கிரஸ் கட்சில சேரப் போறதா ஒரு நியூஸ் வந்திருக்கு. இந்த சூழல்ல பாஜகவும் தென் இந்தியா மேல, குறிப்பா தமிழகம் மேல கவனம் செலுத்தணும்னு அந்த கட்சியோட முன்னணி தலைவர்கள் கருதறாங்க. அதுக்கான ஒரு களமா பிரதமரோட இந்த பயணத்தைப் பார்க்கிறாங்க.”
“திருச்சி பயணத்தின்போது பிரதமரைச் சந்திச்சு ஓபிஎஸ் பேசப் போறதாவும், பாஜகவுக்கும், ஓபிஎஸ்ஸுக்கும் இடையிலான கூட்டணி இந்த சந்திப்புல உறுதியாயிடும்னும் அவரோட ஆதரவாளர்கள் சொல்லிட்டு இருக்காங்களே?”
“ஓபிஎஸ்ஸும், அவரோட ஆதரவாளர்களும்தான் அப்படி சொல்லிட்டு இருக்காங்க. ஆனா அவங்க சொன்ன மாதிரி சந்திப்பெல்லாம் நடக்கல. விமான நிலையத்துல பிரதமருக்கு சால்வை போட ஓபிஎஸ் அனுமதி கேட்டார். அதுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. அவ்வளவுதான்… மத்தபடி ரெண்டு பேரும் அரசியல் எல்லாம் பேசலைன்னு பாஜக தலைவர்கள் சொல்றாங்க.”
“ஓபிஎஸ்தான் பிரதமருக்கு ரொம்ப பிடிச்ச ஆளாச்சே அப்புறம் ஏன் அவரோட கூட்டணி இல்லைங்கிறாங்க?”
“ஓபிஎஸ் தானா முன்வந்து பாரதிய ஜனதாவுக்கு ஆதரவா பேசினாலும், அண்ணாமலையைப் பொறுத்தவரை எடப்பாடியும் வேண்டாம்… ஓபிஎஸ்சும் வேண்டாம்கிறதுதான் நிலைப்பாடு. தேர்தலுக்குள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தி தண்டனை வாங்கித் தரணும். திமுக மாதிரி அதிமுகவையும் கடுமையா விமர்சிக்க அனுமதி வேணும். ஒரே நேரத்துல 2 கட்சிகளையும் கடுமையா விமர்சிச்சாதான் தமிழ்நாட்ல கட்சியை வளர்க்க முடியும்னு அண்ணாமலை பிரதமர்கிட்ட சொல்லி இருக்காராம். அதனால இப்போதைக்கு பிரதமர் மோடியும் ரெண்டு தரப்பையும் கண்டுக்கறதா இல்லை.”
”டாக்டர் ராமதாஸ் முதல்வரை சந்திச்சிருக்காரே?”
“டாக்டர் ராமதாஸ் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டப்ப, முதல்வர் முதல்ல யோசிச்சிருக்கார். அப்ப மூத்த அமைச்சர் ஒருத்தர்தான், ‘அவரை நீங்க சந்திக்கறது நல்லது. அப்படி சந்திச்சா அவரோட கூட்டணி வைக்கறதைப் பத்தி பாஜகவும், அதிமுகவும் யோசிக்கும். ராமதாஸை அரசியல் ரீதியா தனிமைப்படுத்த இது நல்ல வாய்ப்பு’ன்னு சொல்லி இருக்கார். அதுக்கு பிறகுதான் ராமதாஸை சந்திக்க முதல்வர் சம்மதிச்சிருக்கார். ராமதாஸ் தன்னை சந்திக்கும்போது, பாமக கடுமையா கடுமையா விமர்சனம் செஞ்சுட்டு வர்ற அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தையும் கூட இருக்கச் சொல்லி இருக்கார். இது ராமதாஸை தர்மசங்கட்த்துல ஆழ்த்தி இருக்கு.”
“இந்த சந்திப்புக்கு அன்புமணி ராமதாஸ் போகலையே?”
“முதல்வரை சந்திக்க போகும்போது அன்புமணியையும் தன்னோட வரச்சொல்லி ராமதாஸ் கேட்டிருக்கார். அதுக்கு அன்புமணி, ‘அவரை பலமுறை சந்திச்சாச்சு. அவர் நமக்கு ஆதரவாக எதையும் செய்யலை. அதனால என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த சந்திப்பே வேஸ்ட்’னு சொல்லி வர மறுத்திருக்கார்.”
‘வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பத்தி இந்த சந்திப்புல ஏதும் பேசினாங்களா?”
“வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீtடைப் பொறுத்தவரைக்கும் நாம அதை அங்கீகரிச்சு சட்டம் போட்டாலும், இதுக்கு தான்தான் காரணம்னு எடப்பாடி சொல்வாரு. அதோட அப்படி செஞ்சா மத்த ஜாதி மக்களோட எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி இருக்கும்னு திமுக நினைக்குது. அதனால இப்போதைக்கு அதுபற்றி பரிசீலிப்போம்னு மட்டும் மருத்துவர் அய்யாகிட்ட ஸ்டாலின் சொல்லி இருக்கார்.
“டெல்லியில பிரபல வழக்கறிஞர்களை வச்சு தன்னோட வழக்கை அமைச்சர் பொன்முடி நடத்தப் போறதா கேள்விப்பட்டேனே?… உண்மையா”
“ஆமாம். சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் தன்னோட கேஸை நடத்தின விதத்துல பொன்முடிக்கு திருப்தி இல்லை. ‘திமுக வழக்கறிஞர்கள் பார்த்துக்குவாங்கன்னு நான் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டேன். இப்ப சுதாரிச்சுக்கிட்டேன்’னு சொல்லி டெல்லியில சில பிரபல வழக்கறிஞர்கள்கிட்ட பொன்முடி பேசி இருக்கார். இந்த வழக்கிலிருந்து விடுபட்டு குற்றவாளி இல்லைன்னு வெளியே வந்தால்தான் தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்குன்னு அவர் நினைக்கறார். இப்பவே சில மூத்த தலைவர்கள் தன்னோட பேசறதில்லைங்கிற கவலை அவருக்கு இருக்கு. இது ஒரு பக்கம்னா… திமுக தலைவர்கள் பலருக்கு கட்சி வழக்கறிஞர்கள் மேல நம்பிக்கை போயிடுச்சாம்.”
“எதை வச்சு அப்படி சொல்ற?”
“திமுக சட்டக்குழு, மூத்த அமைச்சர்கள், வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களைக் கூப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் சமீபத்துல ஆலோசனை நடத்தி இருக்கார். அப்ப அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘என்னுடைய வழக்கில் வேறு ஒரு நல்ல வழக்கறிஞரை வைத்து வாதாட வைக்கலாமான்னு பார்க்கிறேன்’ன்னு சொல்லி இருக்கார். அப்ப முதல்வர் குறுக்கிட்டு, ‘நல்ல வழக்கறிஞர்னா நம்ம வழக்கறிஞர்கள் எல்லாம் நல்ல வழக்கறிஞர்கள் இல்லையா’ன்னு கேட்டிருக்கார். அப்ப தங்கம் தென்னரசு அவர்கிட்ட, ‘அண்ணன் பொன்முடி உங்ககிட்ட என்ன சொன்னார்ங்கிறதை நீங்க இங்க சொல்லணும்’ன்னு சொல்லி இருக்கார். முதல்வர்கிட்ட வழக்கறிஞர்கள் பத்தி பொன்முடி புகார் செஞ்சதைத்தான் அவர் குறிப்பிட்டிருக்கார்.”
“என்ன நடந்தாலும் இந்த தேர்தல்ல சொந்த சின்னத்துலதான் போட்டிங்கறதில விடுதலைச் சிறுத்தைகள் உறுதியா இருக்காமே.?”
“வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமா வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றால்தான் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக மூன்றும் தங்கள் கட்சி சின்னத்தை தக்க வச்சுக்க முடியும். அதனாலதான் இந்த தேர்தல்ல என்ன நடந்தாலும் சொந்த சின்னத்துலதான் நிக்கணும்கிறதுல திருமாவளவன் உறுதியா இருக்கார்.”
“அதுக்கு திமுக ஒத்துக்கலைன்னா?”
“அவருக்குதான் இப்ப அதிமுக கூடுதல் ஆப்ஷனா இருக்கே” என்றபடி செல்போன் இணைப்பை துண்டித்தாள் ரகசியா.