“அக்னி நட்சத்திரம் அடுத்த மாசம்தான். ஆனா இந்த மாசமே வெயில் மண்டையைப் பிளக்குது” என்று புலம்பியவாறு ஆபிசுக்குள் நுழைந்தார் ரகசியா. அவருக்கென்று விசேஷமாய் தயார் செய்து வைத்திருந்த ஐஸ் மோரை கொடுத்தோம்.
“பரவாயில்லையே கேட்காமலேயே கொடுத்து மனசைக் கவர்கிறீர்களே. இப்படி இப்படி கூலா நடந்துக்காம எல்லோரும் ஹாட்டா நடந்துக்குறாங்க.”
“ஏதோ உள்ளர்த்தத்தோடு சொல்ற மாதிரி இருக்கு?”
“ஆளுநர் – தமிழ் நாடு அரசு மோதலைதான் சொல்ல வரேன். சிக்கல் அதிகமாகிட்டு இருக்குனு தலைமைச் செயலக வட்டாரங்கள்ல சொல்றாங்க. மாளிகையில் தேங்கிக் கிடக்கும் மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பும் வரை அவரை புறக்கணிப்பது என்று முடிவெடுத்துள்ளதாம் ஆளுங்கட்சி தரப்பு. சமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின், சில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்பதாக இருந்தது. இந்நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில சுற்றுலாத் துறை செய்திருந்தது.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பது தெரிந்ததும், ஆளும்தரப்பைச் சேர்ந்த அனைவரும் ஒட்டுமொத்தமாய் புறக்கணித்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்க பூக்களுடன் தயாராய் இருந்த துர்கா ஸ்டாலினும் பங்கேற்கவில்லை. ஆனால், அன்றைய தினமே திருப்பதிக்கே சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார். அமைச்சர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததால் ஆளுநர் ஷாக்காகி இருக்கிறாராம்.”
“ஆளுநர் செய்தி அவ்வளவுதானா… இல்லை இன்னும் இருக்கிறதா?”
“இன்னும் இருக்கிறது. ஆளுநரை திரும்பப் பெறுமாறு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளும்கட்சித் தரப்பு திட்டமிட்டுள்ளதாம். அதுபோல் ஆளுநர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்களாம்.”
“ஊரே இளையராஜா பிரச்சினையை பேசும்போது நீ இன்னும் ஆளுநரையே சுற்றி வருகிறாயே?..”
“அந்த விஷயத்துக்கும் வருகிறேன். அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு தான் கூறிய கருத்துக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்ததாலும், தனக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனதாலும் படு அப்செட்டில் இருக்கிறார் இளையராஜா. எப்போதும் வேகமாக எதிர்வினையாற்றும் பழக்கம் கொண்ட இளையராஜா, இந்த சர்ச்சைக்கும் பதிலளிக்க தயாராக இருந்தாராம். இதற்காக தனது கருத்தை எதிர்த்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் காரசாரமாக ஒரு கடிதத்தை தயார் செய்து பத்திரிகையாளர்களிடம் கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். ஆனால், கடைசி நேரத்தில் அவரைச் சுற்றி இருந்தவர்கள் அதை தடுத்துள்ளனர். இதுபற்றி மேலும் பேசி பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று கூறி இளையராஜாவை சமாதானப்படுத்தி உள்ளனர்.”
“பாஜக தரப்பு இளையராஜா மீது கூடுதல் பாசம் காட்டுகிறதே?”
“ஆமாம். இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படலாம் என்று பேச்சு இருக்கிறது. அதேநேரத்தில் அவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாககூட ஒரு வதந்தி பரவுகிறது. இளையராஜா மட்டுமின்றி தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகின்றது”
“ஓஹோ?”
“ராஜ்யசபா எம்பி பதவிக்கு இளையராஜாவைத் தவிர கல்வியில் சிறந்த சேவையாற்றியதற்காக லதா ரஜினிகாந்துக்கும், விளையாட்டுத் துறையில் பங்களித்ததற்காக அஜித்துக்கும்…..”
“அஜித்தா? விளையாட்டுக்கா? எந்த அஜித்?”
”வலிமை அஜித்தேதான். இவர்களுக்கெல்லாம் தமிழ் நாட்டிலிருந்து ராஜ்யசபா எம்பி பதவி வழங்கலாமா என்று யோசிக்கிறார்களாம். லதா ரஜினிகாந்துக்கு எம்பி பதவி வழங்குவதன் மூலம் ரஜினிகாந்தின் ஆதரவை பலப்படுத்திக் கொள்ளலாம், அதேநேரம் அஜித்துக்கு எம்பி பதவி வழங்குவதன் மூலம் அவரது ரசிகர்களின் ஆதரவைப் பெறலாம் என்று பாஜக தலைவர்கள் கணக்கு போடுகிறார்கள்.”
“அஜித் இதற்கெல்லாம் சரி படுவாரா? அவர் ஒதுங்கி இருக்கிறாரே? ரசிகர் மன்றமே வேண்டாம்னு இருப்பவர் ராஜ்ய சபை பதவியை ஏத்துப்பாரா?”
“ஏத்துப்பாரா இல்லையானு தெரியாது. இவையெல்லாம் பாஜக போடும் கணக்குகள். என் காதுக்கு வந்த செய்திகள், நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.”
“சரி, சரி, கோபப்படாதே… நம்புறோம். சசிகலா எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார்னு நியூஸ் வருதே” என்று பேச்சை மாற்றினோம்.
“ஆமாம். தினகரன் சொன்ன தனிக்கட்சி ஐடியா பயன் தராது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சசிகலா. இப்போதைக்கு அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை வைத்து கட்சியை உடைக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்காக தனக்கு ஆதரவான எம்எல்ஏக்களுடன் பேசி வருகிறாராம்.”
“இதெல்லாம் நடக்குற கதையா? எம்எல்ஏக்கள் வருவார்களா?”
“டவுட்தான். ஆனால், சசிகலா பக்கம் சாய இப்போதைக்கு 9 பேர் தயாராக இருக்கிறார்கள் என்கிறது சசிகலா வட்டாரம்.”
“அதிமுக வட்டாரம் எப்படி இருக்கிறது?”
“உள்கட்சித் தேர்தலில் தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவி பெற்றுத் தருவதில் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் தீவிரமாக இருக்கிறார்கள். இதனால் அவர்களின் பனிப்போர் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறதாம். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு 40 சதவீதம் இடங்களையாவது கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ஓபிஎஸ்.”
“அதிமுக தலைவர்கள் அடக்கி வாசிப்பது போல் தெரிகிறதே? எதிர்க்கட்சித் தலைவர்கள் போல் ஆவேச அறிக்கைகள், பேட்டிகள்லாம் வருவதில்லையே?”
“டாக்டர். விஜயபாஸ்கர், ஓ.எஸ். மணியன், செல்லூர் ராஜு ஆகியோர் பெரிய அளவில் பிரச்சினை கிளப்பாமல் அமைதியாக இருக்கிறார்கள். செங்கோட்டையனை பொறுத்தவரை, அரசை எதிர்த்து ஏதாவது பேசினால் தன் வீட்டில் ரெய்டு வந்துவிடுமோ என்ற அச்சத்தால் ஆளுங்கட்சியை எதிர்த்து ஏதும் பேசவேண்டாம் என்ற மூடில் இருக்கிறார்.”
“அன்புமணி ராமதாஸ் முதல்வரை சந்தித்திருக்கிறாரே? கூட்டணிகள் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?”
“இந்த சந்திப்புக்கு இணைப்பு பாலமாய் இருந்தவர் துரைமுருகன் என்கிறார்கள். ஆரம்பம் முதலே அவருக்கு பாமக மீது ஒரு சாஃப்ட் கார்னர் உள்ளது. இந்நிலையில், ‘வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டுமானால் பாமகவோடு கூட்டணி வைப்பது அவசியம்’ என்று முதல்வரிடம் அவர் எடுத்துச் சொல்லியுள்ளார். ஆனால், இந்த இணைப்பை பொன்முடி, ஆ. ராசா போன்றவர்கள் விரும்பவில்லையாம்.”
“திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் அங்கு இருப்பார்களா?”
“அவர்களும் இருக்கட்டும் என்றுதான் திமுக தரப்பு நினைக்கிறது. ஆனால், பாமக இருக்கும் அணியில் தாங்கள் இருக்க மாட்டோம் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் பிடிவாதமாய் இருக்கிறார்களாம். அதனால் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொடருமா என்பது கேள்விக்குறிதான்.”
“தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம் விரைவில் இருக்கும் என்று கூறப்படுகிறதே?”
“மாற்றம் வேண்டும் என்ற குரல் அதிகரித்து வருகிறது. தென்மண்டல எம்பி ஒருவர் (விஜய் வசந்த்) உட்பல பல இளம் தலைவர்கள் இது தொடர்பாக சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளனர். இளைஞர் ஒருவரை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர். இதை ரசிக்காத சோனியா காந்தி, ‘முதலில் கட்சி வேலைகளைப் பாருங்கள். தலைவர் மாற்றத்தைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டாராம்.”
“அதுசரி.”
“தமிழகத்தில் 2 சூரியன்கள் ஆட்சி என்று தருமபுரம் ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். இது அர்த்தம் பொதிந்ததாகப் பார்க்கிறது பாஜக”
“சினிமா செய்திகள் ஏதும் இருக்கிறதா?”
“சமத்துவமான குடும்பத்தில் சில நாட்களாக பிரச்சினை என்கிறார்கள். கட்சிகாக செலவழிக்க பணம் இல்லாத நிலையில் மனைவி கையை கணவர் எதிர்பார்க்க, கட்சியை கலைத்துவிட்டு திரும்பவும் நடிக்கும் வேலையைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டாரம் மனைவி. கணவர் குமுறிக்கொண்டு இருக்கிறார். கூடவே சினிமா வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்” என்று சிரித்துக்கொண்டே கிளம்பினார் ரகசியா.