“அப்பா வழிக்கே மகனும் வந்துட்டாராம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“தமிழக அரசியல்ல நிறைய அப்பா – மகன்கள் இருக்காங்க. நீ யாரைப் பத்தி சொல்றே?”
“அன்புமணி ராமதாஸைப் பத்திதான் சொல்றேன். அப்பா ராமதாஸோட ஆலோசனையை மீறி நாடாளுமன்ற தேர்தல்ல பாஜகவோட கூட்டணி சேர்ந்தார் அன்புமணி. அந்த கூட்டணி படுதோல்வி அடைஞ்சுடுச்சு. அதிமுகவோட சேர்ந்திருந்தா குறைஞ்சது தருமபுரியிலயாவது ஜெயிச்சிருக்கலாம்னு கட்சிக்காரங்க பேசறாங்க. அன்புமணியோட ராஜ்யசபா எம்பி பதவியும் இன்னும் ஒரு வருஷத்துல முடியப் போகுது. திரும்ப ராஜ்யசபா எம்பி ஆகணும்னா, அதுக்கு அதிமுக தயவு தேவைன்னு ராமதாஸ் சொல்லி இருக்கார். அன்புமணியும் அவர் சொன்னதை கேட்கத் தொடங்கி இருக்கார். அதுக்கான ஆரம்பமாத்தான் நீட் தேர்வுக்கு எதிரா அவர் பேசியிருக்கார்.”
“அவரைச் சரிகட்ட அண்ணாமலை ஏதும் செய்யலையா?”
“அண்ணாமலை போன் பண்ணினா அதை அன்புமணி அட்டன்ட் பண்றதே இல்லையாம். அப்புறம் எங்க இருந்து அவரை சமாதானப்படுத்தறது?”
“அண்ணாமலை படிப்புக்காக வெளிநாட்டுக்கு போனா, மாநிலத் தலைவரை மாத்துவாங்கன்னு ஒரு பேச்சு இருந்ததே. அது எந்த நிலையில இருக்கு?”
“தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்க வேண்டாம். நான் வெளிநாடு போனாலும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கட்சி நிர்வாகிகள்கிட்ட பேசுவேன். அதனால கட்சிப் பணிகள் பாதிக்காதுன்னு டெல்லி தலைமைக்கு அண்ணாமலை தகவல் அனுப்பி இருக்கார். ஆனா டெல்லி தரப்பிலிருந்து இதற்கு பெரிய அளவு ரெஸ்பான்ஸ் இன்னும் வரவில்லை.”
“இதுக்கு நடுவுல 2026 தேர்தலுக்காக தயாராகிட்டு வர்றதா அண்ணாமலை சொல்லி இருக்காரே?”
“தனக்கு எந்த சேதாரமும் இல்லைன்னு வெளிய காட்டறதுக்காக அண்ணாமலை இப்படி பேசி இருக்கறதா கமலாலயத்துல சொல்றாங்க.”
“அதிமுக பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?”
“அதிமுக செயற்குழு கூட்டத்தில் என்ன பேசலாம்னு வேலுமணி, கே.பி.முனுசாமி, தங்கமணி, சி.வி.சண்முகம் போன்ற மூத்த தலைவர்கள்கிட்ட எடப்பாடி ஆலோசனை நடத்தி இருக்கார். அப்ப, ‘ஓபிஎஸ் ஒரு பொதுவான நண்பர் மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன். அதிமுக உறுப்பினராக மட்டும் இருக்க விரும்புகிறேன்னு சொல்லி இருக்கார்’னு வேலுமணி எடப்பாடிகிட்ட சொல்லி இருக்கார். அதுக்கு எடப்பாடி, ‘ சரி முதலில் செயற்குழு முடியட்டும். அதன்பிறகு இதுபத்தி பேசலாம்னு இறங்கி வந்திருக்கறதா சொல்றாங்க.”
“முதல்வருக்கு திடீர்னு முரசொலி மேல பாசம் வர என்ன காரணம்?”
“83-ஆம் ஆண்டில் முரசொலி நாளிதழ் அடியெடுத்து வைக்குது. ஆனா இப்ப அந்த கட்சியோட மூத்த தலைவர்களே அதைப் படிக்கறாங்களான்னு தெரியல. கலைஞர் உயிரோட இருந்தப்ப தன்னை சந்திக்க வர்ற தலைவர்கள்கிட்ட இன்றைய முரசொலி படிச்சீங்களான்னு மறக்காமல் கேட்பார். அதேபோல் அறிவாலயத்திற்கு வரும் எல்லா கட்சித் தொண்டர்கள் கையிலும் முரசொலி கட்டாயம் இருக்கும். ஆனா இப்ப அப்படியெல்லாம் இல்லைன்னு ஒரு மூத்த பத்திரிகையாளர் முதல்வர்கிட்ட சொல்லி இருக்கார். அவர் உடனே உதயநிதி ஸ்டாலினை அழைச்சு, ‘எல்லாத்தையும் நான்தான் பார்த்துக்கணுமா? முரசொலி சர்குலேஷன் என்ன? நம் கட்சிக்காரர்கள் எத்தனை பேர் வாங்குகிறார்கள்? அறிவாலயத்துக்கு வரும் யாரிடமும் முரசொலி இருப்பதில்லையே… முதலில் நீ தினமும் முரசொலி படிக்கிறாயா?’ன்னு அடுக்கடுக்கா கேள்விகளை கேட்டிருக்கார். இப்ப முரசொலிய ப்ரமோட் பண்ணும் வேலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் இறங்கி இருக்கிறார்”
“ராதிகா ஏதோ வருத்தத்துல இருக்கறதா சொல்றாங்களே?”
“ராதிகாவுக்கு முன்ன அதிக வருமானம் கொடுத்தது சன் டிவிதான். ஆனா இப்ப சில மோதல்களால அங்க ராதிகாவோட தொடர்கள் ஏதும் ஒளிபரப்பாகல. சென்னை தூர்தர்ஷன் மற்றும் ஜீ தொலைக்காட்சியை நம்பித்தான் ராதிகா இருக்கார். ‘பாஜகவை நம்பி நாம வந்திருக்கோம். இந்த நேரத்தில் அவங்கதானே நம்மளை கைதூக்கி விடணும்னு ராதிகா புலம்பிட்டு இருக்காங்களாம். அவங்களை நம்பி வந்திருக்கோம். அதனால உதவி கேளுங்கன்னு சரத்குமாரையும் உசுப்பி விட்டுட்டு இருக்காராம்.”