> சுகா
மதுரை பாத்திமா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த தனது தோழியை ஹூஸைனி காதலிக்கிறார் என்கிற செய்தியை எனது உறவுக்காரப் பெண் சொன்னார். அப்படித்தான் உருவம் தெரியா ஹுஸைனி எனக்கு அறிமுகமானார்.
அதற்குப் பிறகு ஹூஸைனியின் அறிமுகம் ஒளிப்பதிவாளர் கோபாலின் மூலம் ஏற்பட்டது. கோபால் ‘வாத்தியார்’ பாலு மகேந்திராவின் மூத்த மாணவன். மை இந்தியா என்ற திரைப்படத்துக்கு கோபால் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தான். அந்தத் திரைப்படத்தின் நாயகன் ஹுஸைனி.
நான் கோபாலிடம் சொன்னேன். ‘ஹுஸைனிக்கு இந்த வருஷம் புத்தாண்டு வாழ்த்துகளை சிங்களத்துல சொல்லு. புன்னகை மன்னன் படத்துல அவர் சிங்களத்துக்காரரா நடிச்சிருப்பாரு. அப்பல்லாம் ஃபிரெண்ட்ஸ்க்குள்ள நாங்க இப்படித்தான் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லுவோம்’ என்றேன்.
புன்னகை மன்னன் மூலம் மனப்பாடமாகியிருந்த ‘அலுத் அவுரத்த சுபபட்டும’ என்னும் சிங்களப் புத்தாண்டு வாழ்த்துகளை கோபாலுக்கு சரியாகச் சொல்ல வராமல் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஃபோன் செய்து ‘டேய்! நீயே மாஸ்டர்கிட்ட சொல்லித் தொலைடா’ என்று ஃபோனை ஹுஸைனியிடம் கொடுத்து விட்டான். நான் எடுத்த எடுப்பிலேயே ‘அலுத் அவுரத்த சுபபட்டும’ என்றேன்.
எதிர்முனையில் ஹுஸைனி பலமாக சிரித்தார். ‘பிரதர்! கோபால் இந்த சவுண்டுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாம என்னெல்லாமோ சொன்னாரு’ என்றார்.
ஹுஸைனிக்கு என் தகப்பனாரைத் தெரியும் என்பதைச் சொன்னார். தல்லாகுளத்துல அப்பா ஸ்பீச்சைக் கேட்டிருக்கேன். மதுரை காலேஜ் ஹவுஸ்லதான் தங்குவாங்க. அங்கே போய்ப் பாத்திருக்கேன். நாமதான் மீட் பண்ணல. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாங்க. ஒரு நாள் வீட்டுக்கு வாங்க. நல்ல சாப்பாடு என் கையால நானே சமைச்சு போடறேன். நீங்களும் Pet loverஆமே! வாங்க. நெறைய பசங்க இருக்காங்க’ என்றார். எனக்கு அவரை சந்திக்க ஏனோ ஆர்வம் வரவில்லை. சந்தர்ப்பமும் அமையவில்லை.
ஒருநாள் படப்பிடிப்பிலிருந்து கோபால் ஃபோன் பண்ணினான்.
‘லஞ்சுக்கு உன் வீட்டுக்குத்தான் வரேன். செல்வராஜ்கிட்ட சொல்லி சாம்பார், உருளைக்கிழங்கு வைக்கச் சொல்லு. பப்படம் மஸ்ட்டு’ என்றான்.
மதிய உணவுநேரம் நெருங்கும் போது கோபால் காரிலிருந்து இறங்கினான். அவன் தோளில் ஒரு குரங்கு. நான் இரண்டடி பின் சென்றேன். கோபாலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘பயப்படாதடா. உனக்கு சர்பிரைஸ் குடுக்கறதுக்கு மாஸ்டர் வர்றதா இருந்தாரு. லாஸ்ட் மினிட்ல அவருக்கு வேற ஒரு வேலை வந்திடுச்சு. அதான் அவர் சார்பா இவனை அனுப்பினாரு’ என்றவன் தோளில் இருந்த குரங்கிடம் ‘இந்த மாமா ரொம்ப நல்ல டைப்பு. ஒரு ஹலோ சொல்லு’ என்றான். அடுத்த நொடியே அந்தக் குரங்கு என் தோளுக்குத் தாவி, என் தலை முடியைச் செல்லமாகக் கோதியது.
சமையல்காரர் செல்வராஜ் அண்ணன் ‘தம்பி. சாப்பாடெல்லாம் டைனிங் டேபிள்ல எடுத்து வச்சிருக்கேன்’ என்று சொல்லிவிட்டு பின் கதவைத் திறந்து வெளியே ஓடி விட்டார். அன்றைக்கு நானும், கோபாலும், ஹுஸைனியின் குரங்கும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு அருந்தினோம்.
கோபாலுக்கு ஃபோன் வந்தது. ஹுஸைனிதான் பேசினார். ‘பய அலறிட்டான்’ என்றான் கோபால். நான் ஃபோனை வாங்கிப் பேசினேன். ‘மாஸ்டர்! நான் Pet loverதான். ஆனா உங்க அளவுக்கில்ல’ என்றேன்.
‘Dogs மட்டுமே Pets இல்ல பிரதர். எல்லா அனிமல்ஸும் நாம பிரியமா இருந்தா அதுங்களும் பிரியமா இருக்கும்’ என்றார். ‘அது ஓகேதான் மாஸ்டர். எனக்கு இதெல்லாம் புதுசு . அதான் கொஞ்சம் பயமா இருக்கு. இப்பக் கூட இந்தப் பய என் மடிலதான் உக்காந்திருக்கான்’. ‘பாத்தீங்களா! அவன் சமத்துப் பையங்க. நீங்க வீட்டுக்கு வாங்க. அலெக்ஸ் இவனை விட சமத்து. உங்க தோள்லேருந்து இறங்கவே மாட்டான்.’
‘அலெக்ஸும் குரங்குதானா, மாஸ்டர்?’
‘இல்லீங்க. பாம்பு. கொளந்த. ஆறு மாசம்தான் ஆச்சு’ என்றார்.
நான் மாஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அலறினேன். ‘வேணும்னா இனி உங்களுக்கு தமிழ்லயே புத்தாண்டு வாழ்த்துகள் சொல்றேன். என்னை விட்டிருங்க’ என்றேன். எதிர்முனையில் சில நிமிடங்களுக்கு நிற்காமல் கேட்ட ஷிஹான் ஹுஸைனியின் வெடிச்சிரிப்பை இப்போது நினைவுகூர்கிறேன்.
போய் வாருங்கள் மாஸ்டர். வானுலகில் நீங்கள் நேசித்த எல்லா உயிரினங்களும் உங்களை வரவேற்கக் காத்திருப்பார்கள்.