கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியதற்கு எதிராக லிபரல் கட்சி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரம் அதற்கு கை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. வரி, இணைப்பு அச்சுற்றுத்தல்களுக்கு இடையே கிடைக்கப் பெற்ற இந்த வெற்றியை பிரதமர் மார்க் கார்னி உற்சாகம் பொங்க வரவேற்றுள்ளார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு வெற்றிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “தேர்தல் முடிவுகள், கனடாவை ஆதரிக்கவும் அதனை வலுவாகக் கட்டியெழுப்பவும் மக்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். வரவிருக்கும் நாட்களும் மாதங்களும் சவாலானதாக இருக்கும். அவை சில தியாகங்களை கோரும். ஆனால் எங்கள் தொழிலாளர்களையும் எங்கள் வணிகங்களையும் ஆதரிப்பதன் மூலம் அந்த தியாகங்களைப் பகிர்ந்து கொள்வோம். அமெரிக்க துரோகத்தின் பாடங்களை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம்.” என்று வலியுறுத்தினார்.
4-வது முறையாக வெற்றி.. 343 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்துக்கு (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 43.4% வாக்குகளுடன் 167 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பியர் பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 41.5% வாக்குகளுடன் 145 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதர 3 கட்சிகள் மொத்தம் 31 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.
ஏற்கனவே தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் லிபரல் கட்சி 4வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு போதிய இடங்கள் கிடைக்காவிட்டாலும், சிறிய கட்சிகளின் உதவியுடன் லிபரல் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதால் அதன் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ட்ரம்ப் அச்சுறுத்தல்கள்.. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபரான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், கனடா அமெரிக்காவின் மற்றொரு மாகாணமாக இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவை கவர்னர் என ட்ரம்ப் அழைத்தார். கனடாவில் லிபரல் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியில் இருந்து விலகி மார்க் கார்னியை பிரதமராக்கினார்.
கை கொடுத்த பிரச்சாரம்: தொழிலதிபரும் வங்கியாளருமான மார்க் கார்னி, இந்த தேர்தலில் ட்ரம்ப் விடுத்த இணைப்பு கோரிக்கைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ட்ரம்ப் கூறியது நிஜமாகும் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார்.