No menu items!

மாரி செல்வராஜ் வியந்த ‘மலை நாட்டுக்காரி’ – யார் இந்த வைரல் பெண்?

மாரி செல்வராஜ் வியந்த ‘மலை நாட்டுக்காரி’ – யார் இந்த வைரல் பெண்?

‘வாழை’ இயக்குநர் மாரி செல்வராஜ் – நெல்லை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சந்திப்பை, சினிமா விகடன் யூடியூப் சேனல் நடத்தியிருந்தார்கள். இந்த சந்திப்பில் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்த கவிஞர் நிவிதா, நெல்லை வட்டார வழக்கில் மாரி செல்வராஜுடன் பேசும் விடியோ வைரலானது. நிவிதா கேள்விகளால் ஷாக்கான மாரி, “டேய் இந்த பொண்ண எங்க இருந்துடா புடிச்சிங்க” என்று நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்தவரிடம் கேட்டார். மேலும், “அடுத்த படத்துல இந்த பொண்ண நடிக்க வைக்கணும். டேய் நம்பர் வாங்கி வச்சிக்கங்கடா” என்றார்.

இதனையடுத்து நெல்லை வட்டார வழக்கில் நிவிதா பேசும் விடியோகள்  இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் என சமூக வலைதளங்களில் செம வைரலானது. இந்த நிலையில், நிவிதாவையே மறுபடியும் சினிமா விகடனில் இருந்து பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த பேட்டியில் நிவிதா தன்னைப் பற்றி கூறியுள்ளார்.

அதில், “திருநெல்வேலி சேவியர்ஸ் காலேஜ்ல நான் எம்.ஏ தமிழ் லிட்ரேச்சர் படிச்சிட்டு வர்றேன். மாரி செல்வராஜ் அண்ணன பேட்டி எடுக்கனும்னு சொன்னதால திருநெல்வேலியில இருந்து அன்ரிசர்வேஷன் டிரெய்ன்ல வந்தேன். டிரெய்ன்ல வரும்போதே அவரு எழுதன புத்தகத்தை மொபைல்ல படிச்சிட்டு வந்தேன். அதுதான் நான் சென்னைக்கு வர்ற முதல் பயணம்.

நிறைய கேள்வி பிரிபேர் பண்ணியிருந்தேன். அவரு எங்க ஊரு அண்ணன். அதனால ரொம்ப சகஜமா கேள்வி கேட்டேன். இந்த பேட்டி இவ்வளவு வைரல் ஆகும்னு நான் எதிர்பார்க்கல. காலேஜ்ல ஜூனியர் பயலுவ சொல்லி தான் எனக்கு தெரிஞ்சுது.

அதுக்கப்புறம், ஃபுரொபசர்ஸ், ரிலேட்டிவ்ஸ் நிறைய பேர் கால் பண்ணி, அவரே பெரிய டிரைக்டரு, அவரையே ஓடவிட்ருக்கிறேன்னு கலாய்ச்சாங்க.

காலேஜ்ல நான் எப்பவும் துருதுருன்னு இருப்பேன். எனக்கு இலக்கியம் ரொம்ப பிடிக்கும். நிறைய கவிதை எழுதுவேன். ஒரு புக் போடனும்ங்கிறது தான் என்னோட விருப்பம். ஆனா, அதுக்குள்ள இந்த வீடியோ மூலமா நான் வைரல் ஆகிட்டேன். நிறைய பேரு கால் பண்ணி படத்துக்கு நடிக்க வாங்கன்னு சொல்றாங்க. எனக்கு நடிப்பு மேல இண்ட்ரஸ்ட் இல்லை. இலக்கியம் தான் பிடிக்கும்.

இன்னைக்கு இந்த வீடியோல நான் வைரல் ஆனதால என்னை பத்தி எல்லோரும் பேசுறாங்க. நாளைக்கே இன்னொருத்தங்க வைரல் ஆனா அதை பத்தி பேசுவாங்க. அதனால எப்பவும் நம்ம நினைவுல இருக்குற மாறி இலக்கிய துறையில நான் சாதனை படைக்கனும்கிறது தான் என்னோட விருப்பம்” என்றார்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குறித்து நிவிதா பேசும்போது, “நான் பொறந்து வளர்ந்த இடம் மாஞ்சோலை. இப்போம் குத்தகை காலம் முடிஞ்சதால எஸ்டேட்காரங்க எங்கள வெளிய போக சொல்லிட்டாங்க.

எங்க தாத்தா, அப்பா, அம்மா சொந்தக்காரங்கனு அஞ்சு தலைமுறை மாஞ்சோலையில வேலை பார்த்துருக்காங்க. அந்த காட்டை உருவாக்குனதே நாங்க தான். இந்த கம்பெனிக்காக கடுமையா உழைச்சிருக்காங்க. அதனால தமிழ்நாடு கவருமெண்ட் கம்பெனிக்கிட்ட இருந்து எங்களுக்கு நஷ்டஈடு வாங்கி தரணும், எங்களோட வாழ்வாதாரத்த உயர்த்த உதவி செய்யனும்” என்று பேசியுள்ளார் நிவிதா.

நிவிதா தாய் சகோதரரும் அவரது தாயமாமாவுமான மகேஷ் பொன் நிவிதா பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், “நிவிதாவை கல்லூரியில் சேர்த்து விடும்போது “இந்த கல்லூரியில் சுமார் 4000 பேர் படிக்கிறார்கள். நீ பட்டம் பெற்று திரும்பும் போது அந்த 4000 பேருக்கும் உன்னை தெரிய வேண்டும் அதனால் கல்லூரியின் எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தேன். சென்றமுறை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு சென்ற போது அவளது அத்தனை பேராசிரியர்களுமே அவளது படிப்பு மற்றும் பங்களிப்பு குறித்து மெச்சும்படியாக சொன்னார்கள். கொஞ்சம் பெருமையாக இருந்தது. இன்று 4000 பேரை தாண்டி பல லட்சம் பேருக்கு தெரிந்தவளாய் ஆகியிருக்கிறாள்.  இன்னும் கொஞ்சம் பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.

எனக்கு வாய்த்த மூன்று மருமகள்களுக்கும் அவர்களின் பால்யம் முதல் நல்ல வழிகாட்டியாய் இருந்திருக்கிறேன். நான் தொடாத உயரங்களை அவர்கள் தொட வேண்டுமென நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். என் கை காசை என் நேரத்தை நிறைய செலவு செய்திருக்கிறேன். சொந்த காலில் நின்ற பிறகு காதல், கல்யாணம் பற்றி சிந்தியுங்கள். இப்போது நிறைய படியுங்கள் என பாரபட்சம் பார்க்காமல் மூன்று பேரையும் நடத்தியிருக்கிறேன். அவர்கள் வெற்றியில் என் பங்களிப்பு உண்டு என்பதை அவர்கள் சொல்லக் கேட்டால் போதுமென்று இருந்தேன்.

மற்ற இருவரையும் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஒருவள் அரசாங்க மாப்பிள்ளையை மணம் முடித்து போய்விட்டாள். ஒருவள் ஆசிரியர் ஆவதற்காக டெட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள். மற்ற இருவரும் வாய் நிறைய மாமா என அழைப்பார்கள். அந்த மரியாதையும் பயமும் அவர்களிடம் உண்டு. ஆனால், நிவிதா “என்ன தம்பி என்ன செய்த எப்படி இருக்க” என பேசக்கூடியவள். ஆனால், வெளியில் எங்க மாமா என்று பெருசா சொல்லிக்கொள்வாள். அவளது இரண்டு நேர்கணலிலுமே மாமா மாமா என கூறி என்னை அடையாளப்படுத்தியிருக்கிறாள். அவள் கனவுகள் மெய்ப்பட வேண்டும். அவள் கவிதைகளை திருத்தம் செய்ய இப்போதெல்லாம் என்னை தேடுவதில்லை. முகநூலில் பார்த்துவிட்டு எதாவது குறை சொல்வேன் அவ்வளவுதான். கல்வியின் மேன்மையை உணர்ந்திருக்கிறாள். படித்து உயரங்களை அடைய வாழ்த்துகள். கவிதையோடு நிறுத்திக்கொள்ளாமல் மாஞ்சோலை மலைவாழ் மக்களின் வாழ்வியலை சிறுகதையாக நாவலாக எழுத சொல்லியிருக்கிறேன். அதையும் செய்வாள் என நம்புகிறேன்.

நாங்கள் விவாதத்தின் மூலம் நிறைய கவிதைகளை எழுதியிருக்கிறோம். அதை அவளது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறாள். திவ்யா ஈசன் என்ற பெயரில் அந்த கவிதைகளை இருவரும் சேர்ந்து புத்தகமாக வெளியிடலாம் என்றிருக்கிறாள். அது எந்தளவு சாத்தியம் என தெரியவில்லை.  அவளை தொடர்ந்து வாசித்தவர்களுக்கு நான் எங்கே கவிதையில் புகுந்திருக்கிறேன் என புரிந்தது கொள்ள முடியும். அவள் சிந்தனை கொஞ்சம் விசித்திரமானது. எளிய விசயங்களை எல்லோருக்கும் விளங்கும்படி கவிதையாக்கிவிடுகிறாள். உங்கள் வாழ்த்துகளால் இன்னும் மேம்படுவாள்.

“யார் என்ன விமர்சனம் வைத்தாலும் சரி தூற்றினாலும் சரி எதையும் கண்டுகொள்ளாமல் உன் வேலையை செய். உலகம் உன்னை ஒரு நாள் திரும்பிப் பார்க்கும். புகழ் மொழிக்குள் முழ்கிவிடாதே. உயரங்கள் போக போக பணிவையும் சமநிலையில் வைத்துக்கொள்” அவளுக்கான எனது இப்போதைய அறிவுறுத்தல் இதுதான்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...