No menu items!

மாரி செல்வராஜ் Vs சோ.தர்மன் – ‘வாழை’ கதை உண்மையில் யாருடையது?

மாரி செல்வராஜ் Vs சோ.தர்மன் – ‘வாழை’ கதை உண்மையில் யாருடையது?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘வாழை’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தான் எழுதிய ‘வாழையடி’ என்ற சிறுகதையை தழுவிதான் எடுக்கப்பட்டுள்ளது; இதற்காக மாரி செல்வராஜ் தன்னிடம் அனுமதி பெறவில்லை என்று எழுத்தாளர் சோ. தர்மன் குற்றம்சாட்டியுள்ளார். உண்மை என்ன?

மாரி செல்வராஜ் இயக்கத்தில், மாஸ்டர் பொன்வேல், மாஸ்டர் சேகர், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வாழை’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த எழுத்தாளர் சோ. தர்மன், “நான் எழுதிய சிறுகதை ‘வாழை’ படத்தில் அப்படியே இருப்பதாக நண்பர்கள் நிறைய பேர் சொன்னார்கள். நானும் ’வாழை’ படம் பார்த்தேன். படத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘வாழையடி’ என்ற சிறுகதையில் நான் எழுதியுள்ளேன். அதில் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே இருக்கிறது. அதில் வரும் சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி – கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவைதான். வாழைத்தார் சுமப்பதன் மூலமாக இரண்டு சிறுவர்களுடைய உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது? இதுதான் என் கதையிலும் நான் பதிவு செய்திருக்கிறேன். மாரி செல்வராஜும் அதைத்தான் செய்திருக்கிறார்.

ஒருவேளை அவர் என்னுடைய கதையை படிக்காமல் கூட இருந்திருக்கலாம். அவரே வாழையையும் சுமந்திருக்கலாம். ஆனால், அந்த சிறுவர்கள் படக்கூடிய கஷ்டங்களுக்கு உருவம் கொடுத்தவன் என்ற முறையில் நான்தான் அதற்கு முழு உரிமையானவன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சோ. தர்மனின் கதையை திருடி மாரி செல்வராஜ் படம் எடுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து இதற்கு பதில் சொல்லும்விதமாக, இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ், “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ. தர்மன் ‘வாழையடி’ என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள்” என்று பதிவிட்டதுடன், அந்த கதைக்கான இணைப்பையும் கொடுத்திருந்தார்.

சரி, சோ. தர்மன் கதையை தழுவித்தான் மாரி செல்வராஜின் ‘வாழை’ எடுக்கப்பட்டுள்ளதா?

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் ஜெயதேவன், “வாழையடி’ என்னும் சோ. தர்மன் கதையை இரவு படித்துப் பார்த்தேன். சோ. தர்மன் கதையில் ஒன்றுமே இல்லை. மாரி செல்வராஜ் அந்தக் கதையை தழுவி எடுத்தார் என்று சொல்வதற்கு 10 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.

சோ. தர்மன் அவர்கள் கதையை ஒரு ஆரம்ப காலம் எழுத்தாளர் கூட எளிதாக எழுதி விடலாம். அந்த அளவு மிக மிக சாதாரண கதை.

மாரி செல்வராஜ் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக எழுதி வரும் “சம்படியாட்டம்” தொடரிலே வாழைத்தார் சுமக்கும் சிறார்கள் கதையை சுய வரலாறாக 26 அத்தியாயங்கள் எழுதிவிட்டார். இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பள்ளி இல்லாத சனி ஞாயிறுகளில் வாழைத்தார் சுமக்க வேண்டுமே என்று அவர் படும் துயரங்கள் வாழைத்தாரை சுமக்கின்ற பொழுது அவர் படும் துயரங்கள் ஆகியவற்றை தொடராக எழுதி வருகிறார். அதில் நூற்றில் ஒரு மடங்கு கூட சோ. தர்மன் கதையில் இல்லை.

ஆகவே சோ. தர்மன் அவர்கள் தேவையற்ற குற்றச்சாட்டை சொல்லியுள்ளார் என்று தான் நான் கருதுகிறேன். ஒரு படம் வெற்றிகரமாக ஓடினால் கல் எறிவதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கும். அப்படித்தான் சோ. தர்மனை  அவர்களுடைய நண்பர்கள் தூண்டி விட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இதுபோல் திரைப்பட விமர்சகரான கோகுல் பிரசாத்தும் “வாழை’ படத்தின் கதைக்கு சோ. தர்மன் உரிமை கொண்டாட முடியாது. இரண்டுக்கும் நடுவே முப்பது சதவிகித ஒற்றுமைகூட இல்லை” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...