இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்கின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ராகுல் காந்தி அவரது உடலை தோளில் வைத்து சுமந்து சென்றார். அப்போது இறுதிசடங்கில் கலந்து கொண்ட இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்கள் கலங்கி நின்றனர்.
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். பொருளாதார மேதையான இவர் இந்தியாவின் நிதி நிலைமையை சீர்ப்படுத்திய வகையில் முக்கியமானவராக நினைவு கூறப்படுகிறார். கடந்த 1991ஆம் ஆண்டு முதல் அரசியலில் நுழைந்து செயல்பட்டு வந்தார். நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராக இருந்தார். அக்காலகட்டத்தில் சரிவில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டார். அதன்பிறகு 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார்.
மன்மோகன் சிங் நேற்று முன்தினம் காலமானார். தனது 92வது வயதில் மன்மோகன் சிங்வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மன்மோகன் சிங் மறைவையொட்டி ஒன்றிய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு இன்று காலையில் மன்மோகன் சிங் உடல் அவரது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு காங்கிரஸ் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது மன்மோகன் சிங் உடல் வைக்கப்பட்டு இருந்த வாகனத்தில் ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா உள்ளிட்டவர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்தனர்.
நிகம்போத் காட் பகுதிக்கு இறுதி ஊர்வல வாகனம் வந்த பிறகு மன்மோகன் சிங்கின் உடலை உறவினர்கள் தோளில் சுமந்தனர். அப்போது ராகுல் காந்தியும் அவர்களுடன் சேர்ந்து மன்மோகன் சிங்கின் உடலை தோளில் சுமந்து சென்றார். இந்த இறுதி சடங்கில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்பட பலர் சோகமாக நின்றிருந்தனர். அதன்பிறகு முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.