புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை வழக்கில் இரண்டு பேர் பிடிபட்டுள்ள நிலையில், கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை கோரி பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
என்ன நடந்தது?
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள் தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 9 வயதான சிறுமி அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். மாயமான சிறுமியை பெற்றோரும் உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு சிறுமியை தேடினர். ஆனால் எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், சிறுமியை விரைந்து மீடகக் கோரி குடும்பத்தினரும் உறவினர்களும் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே கடந்த 4ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். 20-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதனிடையே, நேற்று முன் தினம் (6-3-24) சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி – கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது மாயமான சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டடது பிரேத பரிசோதனை தெரியவந்தது.
இதனையடுத்து, கொலையாளிகளை பிடிக்க போலீஸார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்திய நிலையில் நேற்று முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (வயது 59) ஆகிய 2 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.
“கடந்த 2ஆம் தேதி வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் வீட்டுக்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டியதோடு, உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டுக்கு பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் போட்டு உள்ளே இழுத்துவிட்டு சென்றுள்ளனர்” என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொந்தளித்த மக்கள்
சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பாண்டிச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொலை செய்த கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கைக் கோரி முத்தியால்பேட்டை சின்ன மணிகூண்டு அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பினர் இசிஆர் சிவாஜி சிலை அருகிலிருந்து பேரணியாக புறப்பட்டு முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடற்கரை சாலை நேரு சிலை அருகே உள்ள சிறு வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர். இதுபோல் புதுச்சேரியின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதன்பின்னர், கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியின் உடல் நேற்றைய தினம் சோலை நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவருடைய உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் என அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் அவருடைய உடல் இன்று ஊர்வலமாக வீட்டிலிருந்து வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோயில் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவருடைய உடலை அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. சிறுமியுடன் சேர்த்து அவருக்கு பிடித்தமான பொம்மை, புத்தகங்கள் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.