இந்திய ஜனநாயகத்தை பதம்பார்க்க நினைத்த ‘எமர்ஜென்சி’ அறிவிக்கப்பட்ட நாள் 1975 ஜூன் 25.
“உப்பு, புளி மிளகாய் உடம்பில் சேரச்சேர தனக்கு நடந்த கஷ்டங்களை, துக்கங்களை மனிதன் மறந்துவிடுகிறான்! ஆச்சரியம்தான்! இந்திய மக்களும் எமர்ஜென்சியை மறந்துவிடவே செய்கிறார்கள். வேர்விட்ட இந்திய ஜனாயகத்துடன் மோதி எமர்ஜென்சி தோற்றுப்போனது” என்று சொன்னார் டெல்லி நண்பர். சற்று உணர்ச்சிவசப்பட்டார்.
“ஆனால் ஒவ்வொரு ஆண்டும் எமர்ஜென்சி நினைவுகள் தூசி தட்டி எழுப்பப்படுகிறது. அதுவும் பிஜேபிக்கு காங்கிரஸை சாடுவதற்கு எமர்ஜென்சி காட்சிகள் இப்போது தேவைப்படுகிறது” என்றார்.
நேரு குடும்ப வாரிசு அல்லவா எமர்ஜென்சியை கொண்டு வந்த இந்திரா. நேருவின் பெயரை அழிக்க எமர்ஜென்சியும் கைக்கொடுக்கும் என்ற அவர்களின் கணக்கில் தவறு என்ன இருக்கிறது!
ஆனால், கொண்டு வந்த வேகத்தில் எமர்ஜென்சியை வாபஸ் பெற்றார் இந்திரா. எமர்ஜென்சிக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். காங்கிரஸ் ஆட்சியை மத்தியிலிருந்து முழுவதும் நீக்கி கடும் தண்டனை அளித்த இந்திய மக்கள், இரண்டு வருடத்தில் மீண்டும் இந்திராவை ஏற்றுக் கொண்டார்கள். பெரும் தொல்லைக்கும், சிறை துன்பத்திற்கும் ஆளான திமுக, நேருவின் மகளை நிலையான ஆட்சி தருமாறு வரவேற்றார்கள்! அவருடன் தேர்தல் கூட்டணி வைக்க தவறவில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்ததே!
“உங்களுக்கு ஞாபகம் இருக்காது. எமர்ஜென்சி சில எதிர்பாராத அதிசயங்களையும் நிகழ்த்தியது. விலைவாசி குறைந்தது. நல்லெண்ணெய் கிலோ 5 ரூபாய்! திருமணங்கள் பயத்தினால் சிக்கனமாக நடந்தன. ஏன் ஆட்டோக்காரர்கள் 10 அடி தூரம் போகவும் புன்முறுவலுடன் வரவேற்றார்கள். ரயில்கள் குறித்த நேரத்தில் வந்தன. ஆனால் இவையெல்லாம் கத்திமுனையில் எத்தனை நாள் நடந்திருக்கும்? நாளாக நாளாக ஒரு கட்சி ஆட்சி என்பது தவிர மீதியெல்லாம் படுமோசமாக போயிருக்கும். சர்வாதிகாரத்தில்தான் ஊழல்கள் மக்களுக்கு தெரிய வழியின்றி தாறுமாறாக நடக்கும்” – விமரிசித்தார் வழக்கம்போல் அருகில் இருந்த முதிய அரசியல் தலைவர்.
“உங்களுக்கு தெரியுமா? பயங்கர சர்வாதிகாரியான ஹிட்லர் ஆட்சியில்கூட ஜெர்மனியில் நன்மைகள் நடந்தன. ஒரு நாள் அதிகாரிகள் கூட்டத்தில் ஹிட்லர் தும்மிக் கொண்டே இருந்தார். ஆத்திரமடைந்து காரணம் கேட்டார். தொழிற்சாலை புகை, ‘பொலியூஷன்’ என்றார்கள். உடனடியாக காற்று மாசாவதை பொலியூஷனை தடுக்குமாறு உத்தரவு போட்டார். சர்வாதிகாரியின் உத்தரவு! உடனே தொழிற்சாலைகளில் மாசுக்கட்டுப்பாடுகள் புகுத்தப்பட்டன. உலகமே பின்னர் அந்த வழிகளை பின்பற்றியது.”
“ஓ! அப்படியா?”
“ஜெர்மனியில் சாலை போக்குவரத்து நெரிசல்களை கண்டு ஒருநாள் ஹிட்லர் எரிச்சலடைந்தார். சாலைகளுக்கு அகலம் போதவில்லையா. ரோடு மேல் ரோடு போடுங்கள் என்றார். மேம்பாலங்கள் ஜெர்மனியில்தான் முதலில் உருவாயிற்று.ஏன்? ஹிட்லர் போட்ட உத்தரவால்தான் முதலில் ஜெர்மனியில் சிறு கார்கள் தயாரிக்கப்பட்டது!”
- முதிய அரசியல் தலைவர் கூறினார்.
“ஆனால் ஹிட்லர் 40 லட்சம் அப்பாவி யூதர்களை கொன்று குவித்ததும் நாடு பிடிக்க நடத்திய பெரும் அழிவுகளும் நெஞ்சை பதறவைக்கிறதே! ஆளுவோருக்கு சர்வாதிகார ஆசை வந்துவிட்டால் ஒரு கட்டத்தோடு நிற்காது. இப்போதுகூட வடகொரியாவை எண்ணிப்பாருங்கள்” என்றார் முதிய தலைவர்.
எமர்ஜென்சியின் தோல்வியும், இந்திரா மீண்டும் பிரதமரானதும் காட்டுவது என்ன? உலகின் தலைசிறந்த ஜனநாயகவாதியான நேருவின் காலடியில் அரசியல் கற்ற இந்திரா மனம் மாறியிருப்பார். மேலும் ஜனநாயக ஆட்சியை சீறும் சிறப்புமாக நடத்திக்காட்டுவார் என்ற மக்கள் நம்பிக்கையைத்தானே.
“சொல்லப்போனால் எமர்ஜென்சி பற்றிய நினைவுகளை தூக்கி எறியவேண்டும். மறுபடியும் இந்திராவை ஆட்சியை அமர்த்திய மக்கள் தீர்ப்பில் பல உண்மைகள் ஒளிந்திருக்கிறது.அதை மட்டுமே புரிந்து கொண்டு பாடம் கற்கவேண்டும். இந்திய மக்கள் விரும்புவது ஜனநாயக கோட்பாடுகளைத்தான். ஒவ்வொரு குடிமகனும் துளிகூட அச்சம் இல்லாமல் வாழ்வதையே விரும்புகிறார்கள்.”