தலைவர்களுக்கு உடல் உறுதியும் வேண்டும்..!
அண்மையில் விஜயகாந்த் தமது பிறந்தநாளில் கட்சித் தொண்டர்களுக்கு காட்சி கொடுத்ததை பார்த்தவர்களின் கண்களில் ஈரம் கசியத்தான் செய்தது.
அவர் உடல்நலம் குன்றியிருப்பது அறிந்ததுதான். ஆனால், அவர் கைகளைக்கூட அருகில் இருந்தவர் சற்று தூக்கி உயர்த்தச் செய்கிறார்.
விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமானது. சட்டமன்றத்தில் அவர் கம்பீரமாகவே பங்கு பெற்றார். மக்களிடையே அவருக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. அவர் ஒருநாள் ஆட்சியை பிடித்திருக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால்…!
ஆட்சிக்கு வந்து சில காலத்திலேயே அறிஞர் அண்ணா நோய்வாய்ப்பட்டதும் மறைந்ததும் தமிழகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அண்ணா மட்டும் ஆரோக்கியத்துடன் ஆட்சி நடத்தியிருந்தால் மாநிலங்கள் அரசியல் சட்டப்படி பூர்ண உரிமைகள் பெற ஒரு உறுதியான மாற்றம் ஏற்பட்டிருக்கும். விதியே! விதியே! இப்படி செய்துவிட்டாயே!
நாட்டில் புதியன செய்ய விரும்பி அரசியலில் குதிக்கும் தலைவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனத்தோடு இருந்தால்தான் லட்சியத்தை எட்டமுடியும்.
அண்ணாவின் உடல்நிலை குன்றியதற்கு புகையிலையின் பங்கு இருந்திருக்கிறது. புகையிலையோடு வெற்றிலை போடுவதுடன், யார் கண்களிலும் படாமல் பொடி போடும் சாமர்த்தியசாலியாக இருந்தார். ஆனாலும் காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சார மேடையில் ராஜாஜி அதைப் பார்த்து புகையிலை பழக்கங்களை விடும்படி அண்ணாவை கேட்டுக்கொண்டார். அது 1962.
லட்சியவாதியான அண்ணா நினைத்தால் முடியாதா? எழுத்திலும் பேச்சிலும் போராட்டத்திலும் இரவு, பகல் பாராமல் அவர் காட்டிய ஈடுபாட்டை அவர் உடல் ஆரோக்கியத்தில் காட்டவில்லை. அவருக்கு தோள் வலி ஏற்பட்டு உடல் எச்சரித்ததும் உண்டு. அமெரிக்காவில் அறுவை சிகிச்சை பெற்று திரும்பிய அவரிடம், ராஜாஜி, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அடிக்கடி தொடர்புகொண்டு அவரது உடல்நிலையில் அக்கறை காட்டி வந்தார்கள். ஆனாலும் என்ன? தமிழ்நாட்டுக்கு அல்லவா பேரிழப்பு.
சிந்தனை எல்லாம் தேசத்துக்கு அர்ப்பணித்தாலும் ராஜாஜி உடல்நிலையில் அக்கறை காட்டாமல் இருந்ததில்லை. அவருக்கு ஆஸ்துமா இருந்தது. விடாமல் பிராணாயாமம் செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். உணவு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருந்தவர்.
அவருக்கு 85 வயதான போதும் பொதுக்கூட்டங்களின் மேடைகளில் நெடுநேரம் அமர்ந்திருப்பார். கனகச்சிதமாக பேசுவார். இடையில் ஒதுங்கும் இடத்தை நாடியதில்லை. உடல் அவரது கட்டுப்பாட்டில்!
அவருக்கு 40 வயதாக இருந்தபோது ஒரு நாள் கடும் வயிற்றுவலி. மகன் அழைத்து வந்த டாக்டர், ‘எல்லோருக்கும் தகவல் சொல்லி விடுங்கள்’ என்றார். ராஜாஜி மகனை அழைத்து, ‘அந்த டாக்டருக்கு பைத்தியம். வேறு டாக்டரை அழைத்து வா’ என்றார். தன் உடம்பு பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார்.
அண்ணாவின் மறைவிற்கு மிக வருந்தியவர் அவர். அண்ணா மறைவுக்குப் பின் புகையிலை பயன்படுத்துவதை மிகக்கடுமையாக எதிர்த்து எழுதி வந்தார். அப்போது காரில் போகும்போது சாலைகளில் சிகரெட் பிடிப்பவர்கள் அதிகம் காணவில்லை என்று ‘சுயராஜ்யா’ இதழில் எழுதினார்.
பெரியாருக்கு இருந்த நெஞ்சுறுதியை சொல்லத் தேவையில்லை. அந்த நெஞ்சுறுதியே அவர் உடம்பை பாதுகாக்கும் அரணாக இருந்தது. ஒருசமயம் அவருக்கு கேன்சர் என்ற சந்தேகம் ஏற்பட்டு அதற்கான ‘ட்ரீட்மென்ட்’ நடந்தது. அவர் முகம் பரங்கிக்காய் போல வீங்கிவிட்டதாக அவரது செயலாளர் சம்பந்தம் எழுதியிருக்கிறார். பெரியார் சற்றும் பயந்துவிடவில்லை. வந்த நோய் சுவடு தெரியாமல் பறந்துவிட்டது.
ராஜாஜி, பிரதமர் நேரு, மேலும் சில தலைவர்களும் எளிய யோகாசனங்களை செய்தார்கள். பிரதமர் நேரு சிரசாசனம் செய்த புகைப்படங்களை பார்த்திருக்கலாம். நேரு தன் வயது பற்றி கவலையின்றி, கிடுகிடுவென்று படியேறுவது, கூட்டங்களில் தாவிக் குதிப்பது போன்ற செயல்களை செய்வது வழக்கம். “வேண்டாம் விஷப்பரிட்சை! வயதுக்கு ஏற்றால்போல் இருங்கள்” என்று ராஜாஜி அவரை எச்சரித்திருக்கிறார்.
எதையும் திட்டமிட்டு செய்பவர் கலைஞர். அவர் சொற்பொழிவுகளை கட்டுக்கோப்போடு நிகழ்த்துவது போல உடல்நிலையையும் கச்சிதமாக வைத்திருந்தார். 80 வயதுக்கு மேல் அவர் மூச்சுப் பயிற்சியும் வயதுக்கு ஏற்ற யோகாசனமும் கற்றுக் கொண்டார்! யாரிடம்? புகழ்பெற்ற யோகா ஆசிரியர் தேசிகாச்சாரியாரிடம்.
“மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது… உங்கள் விருப்பப்படி திருக்குறளை சொல்லிக்கொள்ளலாம். இழுக்கும்போது வேகமாகவும் மூச்சை விடும்போது மெதுவாகவும் குறளை சொல்லிக் கொள்ளுங்கள்” என்று கலைஞருக்கு ஏற்றவாறு தேசிகாச்சாரியார் பாடம் நடத்தினார். கலைஞர் உற்சாகத்துடன் பின்பற்றினார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, ‘கலைஞர் தனது உடம்பை ஒரே மாதிரியான எடையில் வைத்திருந்ததும் – பிரச்சினைகள் வந்தால் தனித்து இருக்காமல் எப்போதும் நண்பர்கள் கூட்டத்துடன் இருந்ததும்’ – பற்றி அடிக்கடி பாராட்டிக் கூறுவார்.
எம்ஜிஆர் பற்றி சொல்லவே வேண்டாம்! விடாமல் உடற்பயிற்சி செய்தவர். இருப்பினும் அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. அவருக்கு ஸ்வீட் விஷயங்களில் விருப்பம் உண்டு.
சிலம்பு செல்வர் ம.பொ.சி.க்கு தாங்கமுடியாமல் வயிற்றுவலி. அல்சர்! அல்சருடன் நீண்டநாள் அவரை வாழ வைத்தவர் டாக்டர் ரங்கபாஷ்யம். டாக்டர் கூறியபடி உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றினார்.
“இவையெல்லாம் பழைய கதைகள்தான். இருப்பினும் இன்றைய தமிழக தலைவர்கள் உடல்நிலையில் அக்கறை காட்டுவது மிக அவசியம். சுதந்திர போராட்ட காலத்தில் மக்களை வழிநடத்திய காந்தியடிகள் உடல்நலனிலும் அக்கறை காட்டும்படி வற்புறுத்தினார். அவர் தங்கியிருந்த ஆசிரமங்களில் அதற்கான வழிமுறைகளை வகுத்தார். காந்தியடிகளின்’ஆரோக்கிய ரகசியம்’ என்ற புத்தகத்தை தமிழக தலைவர்கள் மட்டுமின்றி நாமெல்லாம் நிச்சயம் படிக்க வேண்டும்.”
இலக்கியவாதி பெருமூச்சுவிட்டார்.