காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘எம்புரான்’ குறித்த சர்ச்சை
மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாறன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எல்2: எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியானது. இந்தப் படம், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதால் வலதுசாரி ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது.
என்றாலும் இந்தப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் முதல்நாள் வசூலில் ரூ.80 கோடியை கடந்த முதல் படம் என்ற சாதனையை ‘எம்புரான்’ படைத்துள்ளது.
இந்தநிலையில் ‘எம்புரான்’ படம் பற்றிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.சி வேணுகோபால், “தற்செயல் பிரதமர் மற்றும் எமர்ஜன்சி குறித்த திரைப்படங்கள், அது தனிநபர்களை அவமதிப்பதாக இருந்தாலும், பாஜக அப்படங்களை வரவேற்றது. நான் எம்புரான் படத்தின் உள்ளடக்கம் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. நான் இன்னும் ‘எம்புரான்’ திரைப்படத்தினை பார்க்கவில்லை.
அந்தப்படம் எங்களின் கட்சியினை விமர்சித்திருந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இவ்வாறு எதிர்வினையைக் காட்டியிருக்க மாட்டோம். இவை எல்லாம் ஜனநாயகத்தில் கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதி. இதுபோன்ற சமயங்களில் நாம் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். எது சரி என்பதை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள். நாம் விமர்சிக்கப்படும் போது இவ்வாறு சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்.
இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த வி.முரளீதரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் “கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை பாஜக மாநிலத் தலைவர் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார். ஒரு சினிமா ரசிகராக, ஆர்வலராக யார் வேண்டுமானாலும் அவரவர் கருத்தினைக்கூறலாம். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை மாநிலத்தலைவர் தெளிவாக சொல்லிவிட்டார். நான் அதைமீறி எதுவும் சொல்ல முடியாது.” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, வியாழக்கிழமை கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில், “மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் குழுவினருக்கு வாழ்த்துகள். வரும் நாட்களில் எல்2:எம்புரானை கண்டு ரசிக்க ஆர்வமாக உள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் மோகன்லாலுடன் இருக்கும் படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.