கன்வர் யாத்திரை விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கன்வர் யாத்திரை என்றால் என்ன?
தமிழகத்தில் ஆடி மாதத்தைப் போல வட மாநிலங்களில் ஷரவன் மாதம் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை ஷரவன் மாதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அங்குள்ள இந்துக்களின் தவக்காலமாக ஷரவன் மாதம் பார்க்கப்படுகிறது. நம் ஊரில் முருகர் கோயிலுக்கு காவடி எடுத்துச் செல்வதுபோல், இந்த ஷரவன் மாதத்தில் வட மாநிலங்களில் சிவன் கோயிலுக்கு காவடியை எடுத்துச் செல்கிறார்கள். இதை கன்வர் யாத்திரை என்று அழைக்கிறார்கள்.
இப்படி காவடியுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஹரித்வார், கெளமுக் மற்றும் கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களுக்கும் பாத யாத்திரையாக சென்று இவர்கள் கங்கை நீரை சேகரித்து வருவார்கள். பின்னர் அந்த நீரை தோளில் சுமர்ந்து சென்று பல்வேறு சிவாலயங்களிலும் அபிஷேகம் செய்வார்கள். இதற்காக ஒரு மாத காலம் கடுமையான விரதம் இருந்து, இவர்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டின் கன்வர் யாத்திரை ஜூலை 22ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 02 ம் தேதி, அதாவது ஷ்ரவண மாதத்தின் சிவராத்திரி நாளில் நிறைவுபெற உள்ளது. இந்த கன்வர் யாத்திரையை முதலில் ராவணன் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
நம் ஊரில் சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல, வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் கன்வர் யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் உள்ளூர்வாசிகள், பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக உணவு விடுகள், தங்கும் விடுதிகள், மருத்துவ வசதிகள் போன்றவற்றை செய்து வருகின்றனர்.
உணவக விஷயத்தில் எழுந்த சர்ச்சை
இந்த நிலையில் பக்தர்கள் கன்வர் யாத்திரை செல்லும் வழிகளில், அசைவ உணவகங்கள் இருப்பதற்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்த உணவகங்களை நடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள உணவகங்களில் பெயர் பலகைகளில், அதன் உரிமையாளர் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும் என்ற அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும், ஓட்டல்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பெயர்களை எழுதி வைக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. கன்வர் யாத்திரை தொடர்பான இந்த அரசின் உத்தரவால் பெரும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.
வாடிக்கையாளர்கள் தாங்கள் யாருடைய தொழிலை வாங்குகிறோம் என்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அதில் குழப்பம் ஏதும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்திருந்தது. மேலும் கடுமையான உணவு விதிகளைப் பின்பற்றும் சிவ பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவற்றை பாதுகாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும் என்றும் உத்தர பிரதேச அரசு தரப்பில் கூறப்பட்ட்து. ஆனால் பொருளாதார ரீதியாக முஸ்லிம்களை தனிமைப்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறி சிறுபான்மை அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உத்தர பிரதேச அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
மனுவை விசாரித்த நீதிபதிகள், “பக்தர்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சைவ உணவு கிடைப்பதையும் அவற்றின் தரத்தையும் அதிகாரிகள் உறுதி செய்யலாம். ஆனால் அந்த நோக்கத்தை இந்த உத்தரவு மூலம் அடைய முடியாது. இந்த உத்தரவை அனுமதித்தால் அது இந்திய குடியரசின் மதச்சார்பின்மையை பாதிக்கும். இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அதுவரை உ.பி. உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயரை எழுதி வைக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று உத்தரவிட்டனர்.
அமெரிக்காவின் வில்லங்க கருத்து
அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கன்வர் யாத்திரையின் வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர் குறிப்பிடக் கோரியது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “கன்வர் யாத்திரை வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் உரிமையாளர்களின் பெயர்களை வைக்க இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த போதிலும், அந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் அவசியம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.