மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக்செல்வன், அபிராமி உட்பட பலர் நடிக்கும் தக்லைப் படம், ஜூன் 5ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது. மே 16ம் தேதி, சென்னையில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் கமல்ஹாசன் பேசியது:
நாயகன் படத்துக்குபின், 35 ஆண்டுகளுக்குபின் இந்த படத்தில் நானும் மணிரத்னமும் இணைந்துள்ளோம். இதற்கு முன்பு பலமுறை பேசினோம். ஆனால், எதுவும் செட்டாகவில்லை. பொன்னியின்செல்வன் படத்துக்கு கூட முதலில் அவர் என்னிடம்தான் வந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது மீண்டும் இணைந்துவிட்டோம். என்னுடைய ராஜ்கமல் நிறுவனத்துக்காக, அவர் படம் பண்ணுவதும் சந்தோஷம். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. நாங்க சினிமா பற்றி மட்டுமே பேசுவோம்.
நான் மட்டுமல்ல, மணிரத்னமும் இந்த படத்தை முதல் படம் மாதிரியே நினைத்துக்கொண்டு, பணியாற்றுகிறார். அவர் உட்காரவே மாட்டார், சுற்றிக்கொண்டே இருப்பார். அவருக்கு நான் அஞ்சரை மணிரத்னம் என்ற பட்டப்பெயர் வைத்து இருக்கிறேன். 6 மணி படப்பிடிப்பு என்றால் அரை மணி நேரம் முன்னதாக படப்பிடிப்புதளம் வந்துவிடுவார். அதற்கு முதல்நாள் இரவு என்ன நடக்கப்போகிறோம், எப்படி எடுக்கப்போகிறோம் என்பதை கேமராமேனுடன் பேசி இருப்பார். இப்போது பாலசந்தர் இடத்தில் வைத்து மணிரத்னத்தை பார்க்கிறேன். எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்து வளர்த்தவர் பாலசந்தர்.
எனக்கும் இந்த சீன் நல்லா வர வேண்டும் என்ற டென்சன் இருக்கும். இதில் சிம்பு நடித்து இருக்கிறார். அவர் அப்பா எனக்கு மிகவும் நெருக்கமானவர். எனக்கு ஏதாவது பிரச்னை என்றால், அவர் நேரில் வந்து அழுது, என் சட்டையை நனைத்துவிட்டுபோவார். அந்த காலத்தில் அவர் வேகமாக வளர்ந்தார். நானும், ரஜினியும் வளர்ந்திருந்தபோது திடீரென பல தியேட்டர்களில் டி.ராஜேந்தர் படம் வெற்றி அடைந்ததால், அவர் கட்அவுட் வைக்கப்பட்டது. அந்த வளர்ச்சி குறித்து, ரஜினியும், நானும் பேசியிருக்கிறோம். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பார்கள். சிம்பு அப்படிதான். இந்த டயலாக் படத்திலேயே இருக்கிறது. பாசத்திலும் அப்பாவை மிஞ்சிவிட்டார் கமல்ஹாசன்.
முந்தைய படங்கள் மாதிரியே வேண்டும் என்று யாரும் கேட்க வேண்டாம். சினிமாவில் புதுசாக ஏதாவது செய்தால்தான் வெற்றி பெற முடியும். மக்களும் அதைதான் விரும்புவார்கள். தக்லைப் படத்தில் அபிராமி, திரிஷா என 2 ஹீரோயின் இருந்தாலும், எனக்கு யாரும் ஐ லவ் யூ சொல்லவில்லை. ஆனால், படத்தில் நடித்த மலையாள நடிகரான ஜோஜூ ஜார்ஜ் எனக்கு தினமும் செட்டில் ஐ லவ் யூ சொல்வார். ’’ என்றார்