தமிழகத்தின் முக்கியமான புகைப்பட கலைஞர்களில் ஒருவர் ஏ.வி.பாஸ்கர். திரைப்பட கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரை படம் எடுத்துள்ள அவர் கமல்ஹாசனை படம் எடுத்ததைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.
‘கல்கி’ வார இதழில் ‘நடந்து வந்த பாதை’ எனும் தலைப்பில் ஒரு தொடர் வெளியானது. சலன் என்பவரும் நானும் இணைந்து இந்த பணியை செய்து வந்தோம். ஒவ்வொரு நடிகர் நடிகைகளையும், அவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன்போ அல்லது சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்திலோ வசித்த வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு அங்கு நடந்த அனுபவங்களை கேட்டு அதைக் கட்டுரையாக வெளியிட்டோம். நான் அதற்கான படங்களை எடுத்தேன்.
அதன்படி கமல்ஹாசனை, அவர் சினிமா உலகுக்கு வந்த புதிதில் வசித்த வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். அவர் ஒவ்வொரு அறையாக காட்டி தனது அனுபவங்களை விளக்கிக்கொண்டு வந்தார். பாத்ரூமுக்கு வந்ததும் யாரும் எதிர்பாராத வகையில், தன் உடைகளைக் களைந்து டவலைக் கட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அந்த படம் கல்கியில் வெளியானது.
ஒருமுறை ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சென்றபோது அவரும், ஒய்.ஜி.மகேந்திரனும் அங்கு ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். நான் கேமராவை எடுத்ததும் கமல், ‘என்ன போட்டோ எடுக்கப் போறியா?” என்றார். ஆமாம் என்று சொன்ன நான் கமலிடம் “ஒரு சின்ன பெட் வச்சுக்கலாமா?” என்றேன்.
“என்ன பெட்” என்று கமல் கேட்டார்.
“இந்த கேமரால இருக்கற பிலிம் தீர்ந்து போற வரைக்கும் நான் கண்டின்யூவா க்ளிக் பண்ணிட்டே இருப்பேன். நான் க்ளிக் பண்ற நேரத்துக்கு நீங்க கண்டின்யூவா போஸ் கொடுக்க முடியுமா?” என்றேன்.
சரி பெட்டுக்கு வா என்று கமல் அதற்கு ஒப்புக்கொண்டார். அப்போது கேமராவுக்கு மோட்டார் கிடையாது. வைண்ட் செய்த பிறகுதான் க்ளிக் செய்ய வேண்டும். நான் ஒவ்வொரு படமாக வைண்ட் செய்து க்ளிக் செய்தேன். இப்படியாக அடுத்தடுத்து 29 நொடிகாளில் 29 படங்களை எடுத்தேன் அதற்கு முன்பே வேறு இடத்தில் சில படங்களை எடுத்திருந்த்தால் ரோல் தீர்ந்துபோய் விட்டது.
“என்ன அதுக்குள்ள முடிச்சுட்டியா?” என்று கமல் கேட்க. நான், ‘ரோல் முடிந்துவிட்டது. பெட்டில் என்னை ஜெயித்து விட்டீர்கள். எனக்கும் நல்ல படங்கள் கிடைத்துவிட்டன. நன்றி!” என்று சொன்னேன்.
கமலைத் தவிர வேறு எந்த கலைஞனுக்கும் இது சாத்தியமில்லை. இதை என் அனுபவத்தால் சொல்கிறேன். நான் இதேபோல் சில கலைஞர்களை வைத்து படங்களை எடுக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் பலரும் நான்கைந்து படங்களுக்கு பிறகு என்ன போஸ் கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறுவார்கள். அத்துடன் நிறுத்திக்கொள்ளலாம் என்பார்கள். ஆனால் கமல் அப்படியெல்லாம் சொல்லாமல் க்ளிக் செய்யச் செய்ய போஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார். நான் இன்னும் 50 படங்களை எடுப்பதாக இருந்தாலும், அவர் சளைக்காமல் போஸ் கொடுத்திருப்பார்.