உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கிறார் லயோனல் மெஸ்ஸி. குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல்கணக்கில் வென்று இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது அர்ஜென்டினா. ஆனால் இந்த வெற்றிக்காக மெஸ்ஸியை கொண்டாடுவதைவிட ஜூலியன் அல்வாரஸை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது அர்ஜென்டினா. நேற்று நடந்த போட்டியில் அவர் 2 கோல்களை அடித்ததுதான் இந்த கொண்டாட்டத்துக்கான காரணம்.
அரையிறுதிப் போட்டியில் அடித்த 2 கோல்களுடன் சேர்த்து இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 4 கோல்களை அடித்துள்ள அல்வாரஸ், தங்கக் காலணிக்கான போட்டியில் 2-வது இடத்தில் இருக்கிறார். சர்வதேச கால்பந்து உலகுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான இளையவர் இவர். கால்பந்து விளையாட்டைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் அல்வாரஸின் ஆட்டம் பிரமிப்பைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அர்ஜென்டினா ரசிகர்களுக்கு இது சர்வ சாதாரணம். கடந்த சில ஆண்டுகளாகவே மெஸ்சிக்கு அடுத்த இடத்தில் அல்வாரஸைத்தான் வைத்துப் பார்க்கிறார்கள் அர்ஜென்டினா ரசிகர்கள்.
அர்ஜென்டினாவில் உள்ள கால்சின் என்ற ஊரில் 2000-மாவது ஆண்டு ஜனவரி 31-ம் தேதி அல்வாரஸ் பிறந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது அப்பா கஸ்டாவோ ஒரு தானியக் கிடங்கில் டிரைவராகவும், , அம்மா மரியானா கிண்டர்கார்டன் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர். அல்வாரஸுக்கு 2 சகோதரர்கள்.
தெருவில் கிரிக்கெட் ஆடுவது எப்படி நம் நாட்டுக் குழந்தைகளின் வழக்கமோ, அதேபோல் தெருவில் கால்பந்து ஆடுவது அர்ஜென்டினா நாட்டு குழந்தைகளின் வழக்கம். சிறுவயதிலேயே தங்கள் தெருவில் அல்வாரஸ் சிறப்பாக கால்பந்து விளையாட, உள்ளூரில் உள்ள பயிற்சியாளரிடம் அவரை சேர்த்து விட்டிருக்கிறார்கள் பெற்றோர். அல்வாரஸின் கால்பந்து பயணம் அங்கிருந்து தொடங்கியுள்ளது.
அட்லடிகோ கால்சின் என்ற கால்பந்து கிளப்பில் சிறுவயதிலேயே இடம்பிடித்த அல்வாரஸ், வெகு சீக்கிரத்தில் அந்த கிளப்பின் நட்சத்திர வீரரானார். அவரது ஆட்டத்தால் அந்த கிளப் பல்வேறு போட்டிகளில் வெற்றியை ருசித்தது.
சிறுவயதில் அல்வாரஸின் செல்லப் பெயர் ‘லிட்டில் ஸ்பைடர்’ (சிறிய சிலந்தி). வெற்றிக் கொண்டாட்டங்களில் ஸ்பைடர்மேன் மாஸ்குகளை அணிந்திருந்ததாலும், கோல் அடித்தால் ஸ்பைடர்மேனைப்போல் கொண்டாடியதாலும் அவருக்கு அந்தப் பெயர் கிடைத்தது.
“அல்வாரஸிடம் பந்து கிடைத்தால், நான்கைந்து வீரர்கள் சேர்ந்து வந்தாலும் அவரை தடுக்க முடியாது. அவர்களின் அரணை உடைத்து கோல் அடித்துவிடுவார் அல்வாரஸ்” என்று அவரது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் அவரது முதல் பயிற்சியாளரான ரபேல் வாரஸ். பகலில் பீட்சாவை டெலிவரி செய்யும் நபராகவும், மாலையில் கால்பந்து பயிற்சியாளராகவும் இருந்த ரபேல் வாரஸ்தான் அல்வாரஸின் முதல் பயிற்சியாளர்.
தனது குருநாதர் மீது அதிக பாசமும் மரியாதையும் வைத்திருக்கும் அல்வாரஸ், கடந்த 2020-ம் ஆண்டில் அவருக்கு ஒரு டெலிவரி வேனை வாங்கி பரிசளித்திருக்கிறார்.
உள்ளூர் போட்டிகள் மட்டுமின்றி ஐரோப்பிய கால்பந்து லீக்கிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்திய அல்வாரஸ், 2021-ம் ஆண்டில் அர்க்ஜென்டினா அணியில் சேர்க்கப்பட்டார். அந்த ஆண்டில் சிலி அணிக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிதான் அல்வாரஸின் முதல் சர்வதேச போட்டி. சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடிக்காவிட்டாலும், ஐரோப்பிய கால்பந்து லீக் தொடர்களில் தான் ஆடிய ரிவர் பிளேட் அணிக்காக பல கோல்களை அடித்துள்ளார் அல்வாரஸ்.