செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளி வந்திருக்கும் The Hunt for Veerappan தொடர் மீண்டும் வீரப்பன் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.
வீரப்பன் வாழ்ந்த காலமும் இறந்த காலமும் சமூக ஊடகங்கள் இல்லாத காலம். ஆனால் இன்று கருத்துக்கள் எதிர் கருத்துக்கள் எதிர் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் அந்த கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் என்று சமூக ஊடகங்கள் பொங்கி வழிகின்றன. கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டம் சித்தம் கலங்கிவிடும்.
நெட்ஃப்ளிக்சில் வெளியாகியிருக்கும் வீரப்பன் டாக்குமெண்டரியை புத்திசாலித்தனமாக எடுத்திருக்கிறார்கள். 80கள் 90களில் இந்தியாவை அதிர வைத்த பெயர் வீரப்பன். அந்தக் காலக்கட்டத்தில் வீரப்பனுடன் பயணித்தவர்களை அப்போது நடந்த சம்பவங்களை பேச வைத்திருக்கிறார்கள். பேச்சு, அதன் பின்னால் கொஞ்சம் காடு, மலைப் பகுதிகள், பழைய போட்டோக்கள், மிகச் சில ஒரிஜினல் வீடியோ காட்சிகள்தாம். ஆனால் பேச்சுக்கள் மூலம்தான் காட்சிகள் நகர்கின்றன என்பதை உணராதபடி ஒரு திரைப்படம் பார்ப்பது போல் நகர்த்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு, கர்நாடகவைச் சேர்ந்த 40 வயதைக் கடந்தவர்கள் அனைவருக்கும் வீரப்பன் கதைகள் தெரியும். ஆனால் அதன் ஆழம், அகலம் தெரியாது. இந்தத் தொடரில் ஆழம், அகலம் மட்டுமல்ல அதிர்ச்சி தரும் கோணங்களும் தெரிகிறது.
உதாரணமாய் கர்நாடகாவை சேர்ந்த மாவட்ட வன அதிகாரி சீனிவாசன் கொடூரமாய் கொல்லப்பட்டதும் அதன் பின்னணியில் இருந்த வீரப்பன் தங்கை மாரியின் கதையும்….
‘ராம்போ’ கோபாலகிருஷ்ணன் என்ற காவல்துறை அதிகாரியின் அத்து மீறல்கள். அவர் வந்த வழியில் குண்டு வைத்து 22 பேரைக் கொன்றது. கோபாலகிருஷ்ணன் தப்பி பிழைத்தது. பழி தீர்க்க நல்லூர் கிராமத்தையே அதிகாரிகள் கொளுத்தியது….
சங்கர் மகாதேவ பிடாரி என்ற கொடுங்கோல் அதிகாரியின் ‘Workshop’ என்ற கொடுமைக் கூடம். அதில் பழங்குடி மக்களை கதற வைத்தது..
காவல்துறை வனத் துறை அதிகாரிகளை வீரப்பன் கொடூரரமாய் கொன்றது..அந்தக் கொலைகள் வனத் துறையினரையும் காவல் துறையினரையும் ஆத்திரப்படுத்தியது…
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்…
இப்படி பல சம்பவங்கள்.
வீரப்பன் சார்பாக பேச இருவர். வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் வீரப்பனுடன் பயணித்த அன்புராஜும்.
எதிர்தரப்பில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல் துறையையும் வனத் துறையும் சார்ந்த ஓய்வுப் பெற்ற அதிகாரிகள்.
இவர்கள் தவிர வீரப்பன் காட்டுக்குள் பயணித்து செய்திகளை கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்கள் சிவசுப்ரமணியம், சுனாத் பதிவுகளும் இருக்கின்றன.
வீரப்பன் செய்த கொலைகளை பற்றி கேட்கும்போது பதற்றமாக இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் வீரப்பனின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியிருக்கின்றன. அவன் வெட்டி போட்ட சந்தன மரங்களுக்கு கணக்கே இல்லை. ஒருமுறை வீரப்பனின் கடத்தல் லாரிகள் பிடிபட்ட போது அதில் 65 டன் சந்தனக் கட்டைகள் இருந்திருக்கின்றன.
காவல்துறையினரும் சரி கிராம மக்களும் வீரப்பனின் துணிவை புத்திசாலித்தனத்தை அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் சொல்கிறார்கள்.
இந்தத் தொடர் சமூக ஊடகங்களில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. வீரப்பனை வீரப்பனார் என்று கூறுகிறவர்கள் வீரப்ப்பனார் நல்லவர், வனத் துறை காவல் துறை செய்த அட்டூழியங்களால்தான் அவர் வன்முறை வழிக்கு சென்றார் என்கிறார்கள்.
ஆயிரம் யானைகளையும் நூற்றுக் கணக்கான மனிதர்களையும் லட்சக்கணக்கான சந்தன மரங்களையும் கொன்றவன் எப்படி நல்லவனா இருக்க முடியும்? வீரப்பன் கெட்டவன், சமூகத்துக்கு எதிரானவன் என்று கோபப்படுபவர்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
இப்படி விவாதங்கள் தீவிரமடைந்துக் கொண்டிருக்கின்றன. சாதிய அடையாளங்களும் வீரப்பன் மீது திணிக்கப்பட்டு சாதிய மோதல்களும் நடக்கின்றன.
20 ஆண்டு கால சம்பவங்களை 4 பகுதிகளில் சொல்லி முடித்துவிட முடியாது. ஆனால் முடிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். Hunt for Veerappan என்று தலைப்பு இருப்பதால் வெறும் வீரப்பன் வேட்டையை மட்டும் மையமாக வைத்து படம் பின்னப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் தொடரைப் பார்க்கும்போது வீரப்பனின் சொல்லப்படாத பக்கங்களும் பதில் கிடைக்காத கேள்விகளும் இன்னும் குவிந்து கிடக்கின்றன.
வீரப்பனுக்கு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் போன்ற ஆயுதங்களை தந்தது யார்?
வீரப்பன் வெட்டிய சந்தன மரங்களை யார் வாங்கியது?
வீரப்பனுக்கு கிடைத்த பணம் என்ன ஆனது?
வீரப்பனால் எப்படி காட்டுக்குள் சர்வசாதரணமாய் உலவ முடிந்தது?
வீரப்பனுக்கு உதவியவர்கள் உள்ளூர் பழங்குடி மக்கள் மட்டும்தானா?
வீரப்பனால் பயன்பட்டவர்கள் யாரையாவது பிடித்திருக்கிறார்களா?
வீரப்பனை ஏன் உயிருடன் பிடிக்க முடியவில்லை.?….
கேள்விகள் சரளமாய் வருகின்றன.