No menu items!

மாற்றப்படுகிறாரா அண்ணாமலை? – மிஸ் ரகசியா

மாற்றப்படுகிறாரா அண்ணாமலை? – மிஸ் ரகசியா

“சவுக்கு சங்கர் நிலை சீமானுக்கு வருமான்னு ஒரு பட்டிமன்றமே நடந்துட்டு இருக்கு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“அவர் பேசி சமீபத்தில வைரலான வீடியோவைப் பத்தி சொல்றியா?”

“இந்த வீடியோ வந்ததுக்கு பிறகுன்னு இல்லை, அதுக்கு முன்ன இருந்தே சீமானுக்கு தமிழக அரசு வலை விரிச்சுட்டுதான் இருக்கு. ஆனா சீமானை ஏதோ ஒரு கேஸ்ல உள்ள போட்டுட்டு அப்புறம் உடனே விடற மாதிரி இருக்கக் கூடாது. ஒரே நேரத்துல பல கேஸ்கள்ல போட்டு அமுக்கணும்னு மேல் மட்டத்துல ஆலோசனை நடந்திருக்கு. அதுக்கு தேவையான ஆதாரங்களை திரட்டற வேலையும் அமைதியா நடந்துட்டு இருக்கு.”

“அரெஸ்ட் பண்ணுவாங்களா?”

“முதல்வர்தான் அந்த முடிவை எடுக்கணும். இப்போதைக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். அரெஸ்ட் பண்ணா அவருக்குதான் ப்ளஸ்னு கட்சி முக்கியஸ்தர்கள் சொல்லியிருக்காங்க. அதையேதான் முதல்வரும் நினைக்கிறார். ஆனா கட்சில கீழ் மட்டத்துல இருக்கிறவங்க சீமான் அசிங்கமா பேசுறதை அனுமதிச்சுக்கிட்டே இருந்தா தொண்டர்கள் வருத்தப்படுவாங்கனு சொல்றாங்க. ஆனாலும் இப்போதைக்கு சீமான் அரெஸ்ட் இருக்காது”

“சீமானை உள்ள போட்டா, அவரோட புதுக் கூட்டாளி விஜய் சும்மா இருப்பாரா?”

“சீமான் விஷயத்துல விஜய் ஏற்கெனவே யோசனையில இருக்காராம். மக்கள் முகம் சுளிக்கற மாதிரி பேசற சீமானோட கூட்டணி அமைச்சுதான் சட்டமன்ற தேர்தல்ல போட்டியிடணுமான்னு ஏற்கெனவே தன் சகாக்கள்கிட்ட அவர் விவாதம் பண்ணியிருக்கார். இப்ப இந்த வீடியோக்கள் வைரலான பிறகு அந்த யோசனை அதிகமாகி இருக்கிறதா சொல்றாங்க. இப்போதைக்கு சட்டமன்ற தேர்தல்ல விஜய் தனியாத்தான் நிக்கற மாதிரி இருக்கு.”

“உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி பழுக்கவில்லைன்னு முதல்வர் பேசியிருக்காரே?”

“இப்போதைக்கு உதயநிதி புரொமோஷனுக்கு தடை போட்டது துரைமுருகன்தான்னு கட்சியில பேசிக்கறாங்க. அவர்தான் உதயநிதியை இப்போதைக்கு துணை முதல்வர் ஆக்க வேண்டாம், அப்படி அவரை அவசரப்பட்டு துணை முதல்வர் ஆக்கினா தேவையில்லாத சர்ச்சைகள் எழும். அதனால பொறுமையா முடிவெடுப்போம்னு முதல்வர்கிட்ட பேசியிருக்கார். முதல்வரும் இதை ஏத்துக்கிட்டார். அதோட தன்கிட்ட பேசின அதே விஷயத்தை உதயநிதிகிட்டயும் சொல்லச் சொல்லி இருக்கார்.”

“எப்படியோ இப்போதைக்கு முதல்வர் இந்த பிரச்சினையை முடிச்சு வச்சிட்டாரே.”

“இந்த பிரச்சினை முடிஞ்சா நெல்லை மேயர் தேர்தல்ல புது பிரச்சினை முளைச்சிருக்கு. அங்க திமுக வேட்பாளரை எதிர்த்து சொந்த கட்சி கவுன்சிலர்களே ஓட்டு போட்டது முதல்வருக்கு டென்ஷனை கொடுத்திருக்கு. அவர் அமைச்ச்சர் நேருவை கூப்பிட்டு கேட்டிருக்கார். கட்சிக்கு எதிரா ஓட்டு போட்ட கவுன்சிலர்களை கட்சியை விட்டு நீக்கிடவான்னு கேட்டிருக்கார்”

“அதுக்கு நேரு என்ன சொன்னாராம்?”

“10 நாள் அவகாசம் கொடுங்க. எல்லாரையும் கூப்டு பேசி சரிகட்டிடறேன்னு சொல்லி இருக்கார்.”

“இந்த கோபத்தை தணிக்கத்தான் கோவையில ஒருமனதா மேயரை தேர்ந்தெடுத்து இருக்காங்களா?”
“அங்க நிலைமை வேற. செந்தில்பாலாஜி பேச்சுக்குதான் மரியாதை. கோவையில யார் மேயர் ஆகணும்னு உள்ள இருந்தே உத்தரவு போட்டாராம் செந்தில்பாலாஜி. அதை வெளிய இருக்கறவங்க நிறைவேத்தி இருக்காங்க.”

“அண்ணாமலையை மாத்துருதுக்கு முடிவெடுத்துட்டாங்கனு நியூஸ் வருது, அண்ணாமலை வேற டெல்லியில ரவுண்டு அடிச்சுட்டு வந்திருக்காரே… என்ன விஷயம்?”

“பிரதமர், நட்டா, அமித் ஷான்னு மேலிட தலைவர்களை சந்திக்கறதுக்காக போன வாரம் அண்ணாமலை டெல்லி போயிருக்கார். ஆனா அவங்க யாரும் அண்ணாமலையை சந்திக்க விரும்பலை. அதனால அவங்களை சந்திக்காமலேயே அவர் சென்னை திரும்பி இருக்கார். அதுக்குப் பிறகும் அண்ணாமலை கெத்தை விட்டுக்கொடுக்கல. மீனவ பிரதிநிதிகளை அழைச்சுகிட்டு நேற்று வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திச்சிருக்கார். இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் பாதிக்கபடறதைப் பத்தி பேசியிருக்கார். தன்னோட தலைவர் பதவிக்கு ஆபத்து இருக்கிறது அண்ணாமலைக்கு நல்லா தெரியுது. ஆனாலும் தமிழக பாஜகவில் தன்னோட பவரை காட்ட நினைக்கறார். ‘இங்க பிரதமர், அமித் ஷாவை விட என் முகம்தான் மக்களுக்கு நல்லா தெரியும். மேலிடத் தலைவர்களுக்கு இது தெரியலைன்னா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள்’ன்னு தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட அவர் சொல்லியிருக்கார். தன்னை ஒதுக்கின அதே நேரத்துல டெல்லிக்கு போன நயினார் நாகேந்திரனை பல பாஜக தலைவர்கள் சந்திச்சதா பரவின செய்தியும் அண்ணாமலையை கடுப்பேத்தி இருக்கு.”

“அப்படின்னா அண்ணாமலைக்கு பதிலா நயினாருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ?”

“அப்படியும் சொல்ல முடியாது. தமிழகத்துல இருக்கற காங்கிரஸ் கட்சிக்காரங்களை இழுக்க, ஜி.கே.வாசனை தலைவராக்கினா என்னங்கிற என்ணம் பாஜக தலைமைக்கு இருக்கறதாவும் டெல்லியில பேசிக்கறாங்க. அதுக்காக அவரை கட்சியை கலைச்சுட்டு வந்து பாஜகல இணைக்கச் சொல்றாங்களாம்.”

“சரத்குமார் மாதிரியா? அவரு நடு ராத்திரி எழுந்து ஆலோசனை கேப்பாரா?”

“இந்த கிண்டல்தானே வேண்டாம்கிறது” என்று சிரித்தபடி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...