சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்களும் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகிறது. இதைத் தொடர்ந்து 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பரம எதிரிகளாக இந்த அணிகள் கருதப்படுவதால் முதல் போட்டியே பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டிக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சென்னை – மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த்து.
கூட்ட நெரிசல், கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றை தவிர்க்க மைதானத்தில் உள்ள கவுண்ட்டர் மூலம் டிக்கெட் விற்பனை செய்வது கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டு, ஆன்லைனில் மூலம் மட்டுமே விற்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஆண்டும் தொடர்ந்தது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.