No menu items!

சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து

சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைக் கண்டித்து பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை பாகிஸ்தான் நம்பத்தகுந்த வகையில் கைவிடும்வரை 1960-ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது என்று மிகக் கடுமையான முடிவை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து இந்தியா எடுத்திருக்கும் பல்வேறு நடவடிக்கைகளில், சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதே மிக கடுமையான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 1960 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம், 1965, 1971, கார்கில் போர்களின்போதும், இந்தியாவில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதுகூட, பாகிஸ்தானை பழிவாங்க மிகச் சிறந்த கருவியாக இந்த ஒப்பந்தம் இருந்தும்கூட, மனிதாபிமான அடிப்படையில், நிறுத்திவைக்கப்படாமல் இருந்தது. ஆனால்… இன்று!

இதனால் என்னவாகும்?

இந்தியாவின் மேற்குப் பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகள் மற்றும் அதன் கிளைகள் மீது இந்தியா அமைத்திருக்கும் அணைகள் மற்றும் சிறு அணைக்கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்படும். ஆனால், இயற்கையாக பாய்ந்தோடும் ஆற்று நீர் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஆனால், அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்படுவதால், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களில், இரண்டு மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். வரவிருப்பது கோடைக்காலம், தண்ணீர் அதிகம் தேவைப்படும் நேரத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதால், வேளாண்மை மற்றும் குடிநீர்த் தேவைக்கான தண்ணீர் இரண்டு மாகாணங்களுக்குக் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும், இந்திய அணைகளில் நீர் இருப்பை அதிகரித்து, கிஷண்கங்கா மற்றும் ரேட்டில் ஆகிய நதிநீர் மின்உற்பத்தி திட்டத்தின் கீழ் மின் உற்பத்தியை இந்தியா அதிகரிக்கும். பல ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படுவதால், ஆற்றில் பாய்ந்தோடும் நதிநீரின் முழு உரிமையும் கட்டுப்பாடும் இந்தியாவிடமே வந்துவிடும்.

ஏற்கெனவே, சிந்து நதிநீர் பகிர்வு மற்றும் அணை கட்டுமானங்கள் தொடர்பான விவகாரங்களை, உலக வங்கியால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மூலமாகவே தீர்வு காண வேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டுக்கு, நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சிந்து மற்றும் அதன் கிளைகளின் நதிநீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையே 1960 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கிழக்கில் பாயும் சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளின் நீர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது, அதுபோல, மேற்கில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் பெரும்பகுதி நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், மேற்கில் பாயும் நதிகளின் நீரை, வேளாண்மை உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தவும், மின் உற்பத்தியை மேற்கொள்ளவும் இந்தியாவுக்கு அனுமதி உள்ளது. ஆனால், நீரைத் தேக்கி வைப்பதற்கான கட்டுமானங்கள் இல்லாததால் இதுவரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நீரை இந்தியா பயன்படுத்தாமல் இருந்து வந்தது.

சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, 36 லட்சம் ஏக்கர் பரப்பளவு வரை அணை கட்டி தண்ணீர்த் தேக்கிக் கொள்ள அனுமதி இருந்தாலும், இதுவரை அணை கட்டப்படவில்லை. அதுபோல, மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதி இருந்தாலும் இதுவரை 3,482 மெகாவாட் மின்னுற்பத்தி ஆலை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?

சிந்து நதிநீர் பகிர்வு என்பது, ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளை உள்ளடக்கியது. இதுதான், பாகிஸ்தான் அடிப்படை நீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கானோரின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

தற்போது அந்நாட்டுக்குக் கிடைக்கும் 80 சதவீத நீர் நிறுத்தப்பட்டால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களின் வேளாண்மை பாதிக்கும்.

வேளாண்மை, தொழில், குடிநீர் என அனைத்துக்கும் இதையே நம்பியிருக்கிறது இவ்விரண்டு மாகாணங்களும்.

பாகிஸ்தானின் தேசிய வருவாயில், வேளாண்மை 23 சதவிகித பங்கைக் கொண்டிருக்கிறது, 68 சதவிகித கிராம மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தப்பட்டால், பாகிஸ்தானின் வேளாண் துறை கடுமையாக பாதிக்கப்படும். அதனால், அந்நாட்டின் பொருளாதாரம், கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

வேளாண்மை பாதிக்கப்படுவதன் தொடர்ச்சியாக உணவுப் பற்றாக்குறை, பஞ்சம் ஏற்படும்.

ஏற்கெனவே, மோசமான நிலத்தடி நீர் மேலாண்மை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானில், போதுமான நீர்நிலைகளும் ஏற்படுத்தப்படவில்லை.

அந்நாட்டில் இருக்கும் மங்கலா மற்றும் தல்பேரா அணைகள், ஒட்டுமொத்த தண்ணீர் தேவையில் 10 சதவீதத்தை மட்டுமே பூர்த்திசெய்யும் திறன் பெற்றவை.

எனவே, வழக்கமாக தங்குதடையின்றி கிடைத்துவந்த தண்ணீர் நிறுத்தப்பட்டால், அதுவும் கோடைக் காலத்தில் அந்நாடு மிகப்பெரும் சவாலை சந்திக்க நேரிடும் என்றே கருதப்படுகிறது.

சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் எப்போது?

இந்தியா – பாகிஸ்தான் இடையே பாயும் சிந்து உள்ளிட்ட நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக உருவாக்கப்பட்ட சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம், 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, உலக வங்கி முன்னிலையில், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு – பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

எப்படி செயல்படுகிறது?

இந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்கில் பாயும் சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளின் நீர் எந்தக் கட்டுப்பாடும் இன்றி இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது, அதுபோல, மேற்கில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் பெரும்பகுதி நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த நதிகளிலிருந்து 80 சதவீத நீரை பாகிஸ்தான் பெருகிறது. இதன் மூலம்தான், பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பெருமளவில் வேளாண்மை நடைபெற்று வருகிறது. குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது ஏன்?

1947ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிந்தபோது, திபெத்தில் உருவாகி, இந்தியா – பாகிஸ்தான் வழியாக பாய்ந்தோடிய சிந்து நதி, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா வரை சென்றதால், அண்டை நாடுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கும் கருவியாக மாறியது.

1948ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை இந்தியா நிறுத்தியது. உடனடியாக பாகிஸ்தான் இதனை ஐக்கிய நாடுகள் அவையில் எழுப்பியது. இதையடுத்து, உலக வங்கியால் அமைக்கப்படும் நிபுணர் குழுவைக் கொண்டு, இந்த விவகாரத்தை தீர்க்குமாறு ஐ.நா. பரிந்துரைத்தது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இருதரப்பும் ஒப்புக்கொண்டு சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...