இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மொஹாலியில் இன்று நடக்கிறது. அடுத்த மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இறுதி ஒத்திகையாக இது பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள வீரர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இப்போட்டியில் இந்தியவுக்காக ஆடுவதே இதற்கு காரணம்.
இந்திய அணியைப் பொறுத்தவரை உலகக் கோப்பை டி20 போட்டிக்கான பேட்டிங் வரிசையை ஆசிய கோப்பை தொடரில் ஏற்கெனவே உறுதி செய்துவிட்டது. ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய முதல் 4 பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் இறங்குவாரா? அல்லது ஆசிய கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக வந்து சதம் விளாசிய விராட் கோலி இறங்குவாரா என்ற கேள்வி இருந்தது. இந்த சூழலில் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல்தான் களம் இறங்குவார் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ரோஹித் சர்மா. தவிர்க்க முடியாத சூழல் வந்தால்தான் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்குவார் என்று அவர் அறிவித்துள்ளார்.
முதல் 4 வீரர்கள் உறுதியான நிலையில் 5-வது பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கப்போவது தினேஷ் கார்த்திக்கா அல்லது ரிஷப் பந்தா என்ற கேள்வி இந்திய அணியின் முன் நிற்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமான ரிஷப் பந்த், டி20 போட்டிகளில் சற்று தடுமாறுகிறார்.
ஆடுகளத்தில் வந்து செட்டில் ஆக அவருக்கு சில பந்துகளாவது தேவைப்படுவதே இதற்கு காரணம். ஆனால் அவருக்கு நேர் எதிராக கடந்த சில மாதங்களாக டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் அசத்தி வருகிறார். அதிலும் கடைசி ஓவர்களில் பினிஷிங்கில் சூப்பர் வேகம் காட்டுவதால் அவரையே இந்திய அணிக்கு தேர்தெடுக்க வேண்டும் என்பது பலரது விருப்பமாக உள்ளது. இந்த இருவரில் யாரை டி20 உலகக் கோப்பை போட்டியில் பயன்படுத்தப் போகிறதோ, அந்த வீரரை இந்த தொடர் முழுக்க ஆடவைக்க வேண்டியது அவசியம்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அடுத்த சவால் ஆல்ரண்டர். ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தோளோடு தோள்நின்று ஆடிய காலகட்டத்தில் இந்தியாவுக்கு இது பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை. ஆனால் இப்போது காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அதனால் ஹர்த்திக் பாண்டியாவுடன் ஆட ஒரு ஆல்ரவுண்டர் தேவை.
இந்த இடத்தில் ஆல்ரவுண்டரான அக்சர் படேலை ஆடவைக்கலாமா, அல்லது ஓரளவு பேட்டிங் செய்யும் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை ஆடவைக்கலாமா என்ற குழப்பத்துடன் இருக்கும் இந்திய அணி, இந்த தொடரில் விடைகாண வேண்டும். அக்சர் படேலை ஆடவைக்க முடிவு செய்திருந்தால், இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்குவது அவசியம்.
ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சு அவ்வளவாக எடுபடாது. எனவே இந்திய அணியில் சாஹல்தான் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார். உலகக் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் நாடியைப் பிடித்துப் பார்க்க அவருக்கு இன்றைய போட்டி நல்வாய்ப்பாக அமையும். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரை பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோரைத்தான் முன்னணி வீரர்களாக இந்தியா பயன்படுத்தப் போகிறது. இதில் புவனேஸ்வர் குமார் இன்று ஆடாத பட்சத்தில் பும்ராவும், ஹர்ஷல் படேலும் தங்கள் திறமைக்கு பட்டை தீட்டிக்கொள்ள இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமையும். அத்துடன் தீபக் சாஹர், உமேஷ் யாதவ் ஆகியோரில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெறல்லாம்.
இன்றைய போட்டியில் 2 விஷயங்களை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
முதல் விஷயம் ரோஹித் சர்மாவின் சிக்சர். டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா இதுவரை 171 சிக்சர்களை அடித்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்தவர் என்ற பெருமையைப் பெற ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 2 சிக்சர்கள் தேவை. (இந்த பட்டியலில் தற்போது 172 சிசர்களுடன் நியூஸிலாந்து வீரர் குப்தில் முதல் இடத்தில் இருக்கிறார்) இந்த சிக்சர்களை ரோஹித் சர்மா இன்று விளாசுவாரா என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
அடுத்த எதிர்பார்ப்பு டிம் டேவிட். ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அளவில் சாதித்த டிம் டேவிட், இன்று முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் ஆட உள்ளார். அதிரடி வீரரான அவர் சர்வதேச போட்டியில் எப்படி ஆடப்போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.