“அப்பா ஸ்டாலினை மீறி வளர்ந்துட்டார் உதயநிதி” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“சனாதன ஒழிப்பு பேச்சை பற்றி சொல்றியா?”
“ஆமா.. தமிழக அளவில் தன்னோட மகன் வளரணும்ங்கிறது முதல்வர் ஸ்டாலினோட விருப்பம். ஆனால் சனாதன ஒழிப்பு பற்றிய பேச்சால இப்ப இந்திய அளவில் வளர்ந்து நிக்கறாரு உதயநிதி. ஒருபக்கம் உதயநிதியோட தலையை கொண்டுவந்தா 10 கோடி ரூபாய் பரிசுன்னு சாமியார்கள் அறிவிக்க, மறுபக்கம், உதயநிதி அப்படி என்ன தப்பாக பேசிட்டார்னு அவருக்கு ஆதரவா அகில இந்திய அளவில் குரல்கள் ஒலிக்குது.”
“அகில இந்திய அளவில் உதயநிதியின் பெயர் ஒலிக்கறது இருக்கட்டும். இந்தியா கூட்டணி அளவில் உதயநிதி பேச்சுக்கு என்ன ரியாக்ஷன்?”
“தமிழ்நாட்ல இருக்கற அரசியல் சூழல் வேற… வடமாநிலங்கள்ல இருக்கற அரசியல் சூழல் வேற. வட மாநிலங்கள்ல ஜாதியும் மதமும் தேர்தல்ல முக்கிய பங்கு வகிக்குது. ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும்கூட பிரச்சாரத்தப்ப கோயில்களுக்கு போறதை வழக்கமா கொண்டிருக்காங்க. இந்த சூழல்ல உதயநிதியோட பேச்சால தங்கள் வாக்கு வங்கிக்கு ஆபத்து வந்துடுமோன்னு காங்கிரஸ் பயப்படுது. அதனாலதான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘எங்களுக்கு எல்லா மதமும் ஒண்ணு’ன்னு அறிவிச்சார். கூடவே, அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை சொல்றதுக்கு உரிமை இருக்கு. உதயநிதி சொன்னது அவரோட கருத்துன்னும் சொல்லி இருக்கார். உதயநிதி பேசியதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே வரவேற்றிருக்கிறார். ஏற்றத் தாழ்வுகளை சொல்கிற எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும் உதயநிதியோட கருத்தை எதிர்க்கிறார். அரசியல்ல ஜூனியர்கின்றதுனால இப்படி அவர் பேசியிருக்கலாம்னு கருத்து சொல்லி இருக்கார்”
“சிவசேனா இந்து கட்சி ஆச்சே… பாஜகவை விட இந்துக்களுக்கு ஆதரவா பேசற கட்சியாச்சே… அவங்களோட ரியாக்ஷன் என்ன?”
“சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவுக்கு உதயநிதி ஸ்டாலினோட கருத்துல உடன்பாடு இல்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேகிட்ட தன்னோட அதிருப்தியை உத்தவ் தாக்ரே சொல்லியிருக்கிறார். ஆனா வெளிப்படையா எந்தக் கருத்தையும் சொல்லல. அதேநேரத்துல கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் உதயநிதி கருத்தை ஆதரிக்குது.”
“உதயநிதி பேச்சை பாஜக எப்படி பார்க்குது?”
“வட மாநிலங்கள்ல நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு கிடைச்ச ஆயுதமா பாஜக இதை பார்க்குது. உதயநிதி ஸ்டாலின் பேச்சை இந்தியில் மொழி மாற்றம் செஞ்சு வட மாநிலங்கள்ல அந்த கட்சி பரப்பத் தொடங்கி இருக்கு. சமூக வலைதளங்கள்லயும் அதைப் பரப்பிட்டு இருக்காங்க. பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் இந்து ஆதரவு கட்சி. திமுக இருக்கற இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரான கூட்டணிங்கிற பிம்பத்தை இதன் மூலமா உருவாக்க அவங்க முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க.”
“அதைத் தடுக்க திமுக ஏதும் பண்ணலயா?”
“அவங்க பண்ணாம இருப்பாங்களா?.. India stand with udiyanidhi-ங்கிற ஹேஷ்டேக்கை இந்தியா முழுசா ட்ரெண்டிங் ஆக்குறதுல திமுகவோட ஐடி விங் பிஸியா இருக்கு. ட்விட்டர்ல உதயநிதிக்கு ஆதரவா இந்தியிலயும் பதிவுகளை வெளியிட்டு வர்றாங்க. இதை ஒரு வாய்ப்பா வச்சு சனாதன தர்மத்துல சொல்லப்படுற ஏற்றத் தாழ்வுகளை பேச ஆரம்பிச்சிருக்காங்க. வட இந்தியாவுல தலித்துகளுக்கு ஏற்படுகிற கொடுமைகளை வீடியோக்களாக வெளியிட்டு இது சனாதனமானு கேக்குறாங்க”
“நாடாளுமன்றத்தோட சேர்த்து சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பிருக்கு. அதனால கட்சியில இருக்கிற நிர்வாகிங்க அதை மனசுல வச்சு களப்பணி ஆற்றணும்னு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசி இருக்காரே?”
“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்தாலும், மத்திய அரசு அதை எப்படியும் கொண்டு வந்துடும்னு திமுக நினைக்குது. அப்படி தேர்தல் வந்தா அதை சமாளிக்க, அவங்க இப்பவே தயாராகிட்டு வர்றாங்க. மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கறது திமுகவோட நீண்ட நாள் திட்டம். 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்கறது அவங்களோட இப்போதைய திட்டம். புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்கும்போது இளைஞர் அணியைச் சேர்ந்தவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கட்சித் தலைமை திட்டமிட்டிருக்கு. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் 2 தொகுதின்னா, மாவட்ட செயலாளர்களால தேர்தல்ல சிறப்பா செயல்பட முடியும்கிறது திமுக தலைமையோட நம்பிக்கை. அதேமாதிரி நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை 30-ம் தேதிக்குள்ள முடிக்க இந்தியா கூட்டணி முடிவு எடுத்திருக்காம். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியே பிரச்சாரத்தை தொடங்கவும் அவங்க திட்டமிட்டு இருக்காங்க. அதனால முதல்வர் ஸ்டாலின் இப்பவே தொகுதிப் பங்கீடு பத்தின விஷயங்கள்ல தீவிரமா இருக்கார்.”
“அமைச்சர் மஸ்தானோட மகன் மற்றும் மருமகனோட கட்சிப் பதவிகளை பறிச்சிருக்காங்களே?”
“ஒரு சிலரோட நடவடிக்கைகளால கட்சி தன்னோட கட்டுப்பாட்டுல இல்லைங்கிற தோற்றம் உருவாகுதோன்னு முதல்வர் நினைக்கறார். அதனால கட்சித் தலைமைக்கு கட்டுப்படாதவங்க யாரா இருந்தாலும் அவங்க மேல நடவடிக்கை எடுக்கறதுல உறுதியா இருக்கார். அமைச்சர் மஸ்தானோட மகனும், மருமகனும் கட்சி நடவடிக்கைகள்ல அளவுக்கு மீறி தலையிடறதா முதல்வருக்கு செய்திகள் வந்திருக்கு. இதுபத்தி அமைச்சர் மஸ்தான்கிட்ட பலமுறை முதல்வர் எச்சரிச்சும் அவர் தேவையான நடவடிக்கைகளை எடுக்கல. அதனாலதான் அவங்க ரெண்டு பேரோட கட்சிப் பொறுப்பை பறிச்சு தலைமை உத்தரவிட்டு இருக்கு.”
“உதயநிதியின் மகன் இன்பநிதிக்காக போஸ்டர் ஓட்டுன திமுககாரங்க மேலயும் நடவடிக்கை எடுத்திருக்காங்களே?”
“ஆமா. இந்த விஷயத்துல உதயநிதி ரொம்பவே டென்ஷன் ஆகியிருக்கிறார். இன்பநிதி அரசியல்லேயே இல்லை, அப்படியிருக்கும்போது இன்பநிதியை ஆதரிச்சு எதற்கு போஸ்டர் ஓட்டணும்னு காட்டமா கேட்டிருக்கிறார். அது மட்டுமில்லாம இப்படி இன்பநிதிக்கு போஸ்டர் ஓட்டுறது எதிரணிக்கு வாய்ப்பா மாறிடும்னு டோஸ் விட்டதாக அறிவாலயத்துல செய்தி சொல்றாங்க”
”ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்கும்னு ஒரு பேச்சு சுத்திட்டு இருக்கே?”
“நெருப்பில்லாம புகையுமா?… நாடாளுமன்றத் தேர்தல்ல பாரதிய ஜனதாவுக்கு ஆதரவா ரஜினி வாய்ஸ் தரணும். கூடவே திமுகவை கடுமையாக எதிர்த்து பேசணும். அப்படி செஞ்சா தேர்தல் முடிஞ்ச பிறகு ஏதாவது ஒரு பெரிய மாநிலத்துக்கு அவர் ஆளுநராக்கப்படுவார்னு பாஜக தரப்புல ரஜினி அண்ணன்கிட்ட சொல்லி இருக்காங்க. அவர் பாஜகவோட இந்த டீலை ரஜினிகிட்ட எடுத்துட்டு போயிருக்கார். எப்பவும் கட் அண்ட் ரைட்டா முடியும் முடியாதுன்னு சொல்ர ரஜினி, இந்த விஷயத்துல யோசிக்கறதா சொல்லி இருக்கறதா கமலாலயத்துல பேசிக்கறாங்க.”
”கலாநிதி மாறன்கிட்ட செக்கும் காரும் பாஜககிட்ட கவர்னர் பதவியா? நிஜமாவே சூப்பர் ஸ்டார்தான், சரி, அதிமுக பத்தி எந்த செய்தியும் இல்லையா?”
“நாடாளுமன்றத்தோட சேர்த்து சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும்னு எடப்பாடியும் உறுதியா நம்பறார். அதனால கட்சி நிர்வாகிகள்கிட்ட எல்லா தொகுதியிலயும் கூட்டம் போட்டு திமுக அரசோட குறைகளைப் பத்தி பேசச் சொல்லி உத்தரவு போட்டிருக்கார். திமுக மாதிரி கட்சி அளவுல மாவட்டங்களை அதிகரிக்கற திட்டத்தை எடப்பாடியும் வச்சிருக்கார். இதனால பல கட்சிக்காரங்களுக்கு பதவி கிடைக்கும்கிறது அவரோட என்ணம். இதுபத்தின அறிவிப்பை சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.”
”ரொம்ப முக்கியமா ஒண்ணு மறந்துட்டேன். இந்தியா பேரை மாத்தப் போறாங்களாமே. பாரத் சொல்றாங்களே..அப்படியா?”
”உடனடியா நடக்காதுனு டெல்லில பேச்சு. இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர்ல பெயர் மாத்துறதுக்கான மசோதவைக் கொண்டு வரப் போறாங்க. ஜி 20 மாநாட்டுக்கான அழைப்பிதழ்ல நம்ம குடியரசுத் தலைவரை இந்திய குடியரசுத் தலைவர்னு குறிப்பிடாம பாரத் குடியரசுத் தலைவர்னு குறிப்பிட்டிருக்காங்க. அழைப்பிதழ்ல்ல பேரை மாத்தலாம். ஆனால் ரூபாய் நோட்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை….இப்படி எத்தனைல பேரை மாத்துமுடியும்னு இப்பவே கேள்விகள் வருது”
“ஏன் திடீர்னு மாத்துறாங்க?”
“எதிர்க் கட்சிகள் கூட்டணி பேரு இந்தியானு இருக்கு அதனால பாரத்னு மாத்துறாங்கனு எதிர்க் கட்சிகள் கிண்டலடிக்கின்றன. ஆனால் ராகுல் காந்தி நடை பயணத்தோட பேரு பாரத் ஜோடோ யாத்ரானுதான் பேரு. அவரு இந்திய யாத்திரையை பாரத் யாத்திரைனு சொல்லலாமானு பாஜகவினர் கேக்குறாங்க”