இளையராஜாவின் காப்பி ரைட் விவகாரம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. கடந்த சில வாரங்களாக தமிழில் வெளியான திரைப்படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அப்படி வந்த படங்களில் பைட் கிளப் படத்திலும் பயன்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்கும் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுபபப்பட்டது. இதே போல சில மாதங்களுக்கு முன்பு வெளியான மலையாளப் படமான மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது. இந்தப்படத்தில் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதம் பாடல் பயன்படுத்தப்ப்ட்டது. இந்தப்பாடல் தான் படத்தின் பலமே.
படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகரகள் இந்த பாடலை மொத்தமாக ஒரே குரலில் பாடி படத்தைக் கொண்டாடினார்கள். அந்தளவுக்கு பாடல் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நேரத்தில் இளையராஜா தனது இசையில் வெளிவந்த திரைப்படப்பாடல்களை பயன்படுத்தியவர்கள் மீது வழக்கும் தொடுத்துக் கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. 1991ம் ஆண்டில் வெளியான குணா திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த படத்தின் பாடல்கள் உரிமை இளையராஜாவின் சொந்த நிறுவனமான ராஜா ரெக்கார்டிங் என்ற நிறுவனத்திடம் இருந்தது. தற்போது மஞ்சுமேல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.,
திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியிருந்தது. படமும் தியேட்டர்களை விட்டு எடுக்கப்பட்ட பிறகு இவ்வளவு நாள் கழித்து நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறித்து பலத்த சர்ச்சை எழும்பி வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாகவும் அது சுமூகமாக அமையவில்லை என்பதாலும் இந்த கால தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடலுக்கு ராஜ்கமல் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இளையராஜா எடுத்து வரும் இந்த காப்புரிமை நடவடிக்கையால் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பிரமாண்டமான திரையரங்கம் ஒன்றில் வெப்பன் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது அங்கு ஏ.ஆர்.ரகுமான், ஹாரீஷ் ஜெயராஜ், அனிருத், ஆகியோரின் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. உடனே அங்கிருந்த அறிவிப்பாளர் பாடலை நிறுத்தும்படி அறிவித்தார். காப்பி ரைட் பிரச்சனை இருப்பதால் அதிக நேரம் ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்த விழி்ப்புணர்வு ஏற்படுவதற்கு முதல் காரணமாக இருப்பவர் இளையராஜாதான்.
அவர் கேட்கும் இசை உரிமை என்பது அவருக்கு மட்டுமல்லாமல் எல்லா இசையமைப்பாளர்களுக்கும் சேர்த்து சென்றடைந்திருக்கிறது. ஆனால் இணையத்தில் இளையராஜாவை மட்டும் குறிவைத்து ஒரு சிலர் கடுமையாக பேசி வருவது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.