No menu items!

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது எப்படி? – அதிர்ச்சி பின்னணி

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது எப்படி? – அதிர்ச்சி பின்னணி

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டுவில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்து கொடுக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு குற்றச்சாட்டை வைத்துள்ளார். பெருமாளின் பிரசாதமாக கருதப்படும் புனித லட்டுவில் பன்றி, மாட்டு கொழுப்பும் மீன் எண்ணெய்யும் கலந்தது எப்படி? அதிர்ச்சி தரும் பின்னணி இதோ….

சந்திரபாபு என்ன சொன்னார்?

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் உணவு மாதிரிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தர சோதனைக்கு உள்ளாக்கப்படுவது வழக்கம். அதன்படி, குஜராத்தில் அமைந்திருக்கும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் உணவு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த உணவுகளின் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில்தான், திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் என்ற மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் கொழுப்பு இருந்தால் அது வெளிப்புற கொழுப்பு என்று அறிவிக்கப்படும். எஸ்-இன் மதிப்பானது 95.68 முதல் 104.32-க்குள் இருக்க வேண்டும். சோயா, சூரியகாந்தி, ஆலிவ், மீன் எண்ணெய் அல்லது பாமாயில் போன்றவை வெளிப்புற கொழுப்பு என்று கருதப்படுகிறது.

இந்த அறிக்கையை, ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வெளியிட்டார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு. தொடர்ந்து பேசிய அவர், “திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் லட்டுவை தயாரிக்கும்போது முறையான தர நிலைகளை முந்தைய (ஜெகன்மோகன்) அரசு பின்பற்றவில்லை. தரக் குறைவான பொருட்களைக் கொண்டு லட்டுகள் உருவாக்கப்பட்டது. இதை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். அன்னதானத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களும்கூட தரமற்றதாக இருந்தது. கடவுளுக்கு வாங்கும் பிரசாதத்தில் இத்தகைய குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. சில நேரங்களில் இது மிகவும் வருத்தமளிக்கிறது. சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் லட்டுவின் தரத்தை உயர்த்துவோம். வெங்கடேஷ்வரரின் புனிதத்தைக் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது,” என்று கூறியுள்ளார் சந்திரபாபு.

தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 19, 2024), இந்த சர்ச்சை குறித்து மீண்டும் பேசிய சந்திரபாபு, “திருமலை திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகள் கோடிக்கணக்கான மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது. தற்போது அது கலப்படமாக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் சரி செய்து வருகின்றனர். தரமான மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தரமான லட்டுகளை வழங்குவார்கள்” என்றும் தெரிவித்தார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு கடந்த ஜூலை 23ஆம் தேதி அன்று, திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் நெய்யில் கலப்படம் செய்வது குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தாவர எண்ணெய்யை நெய்யோடு கலக்கிறது திருமலா திருப்பதி தேவஸ்தானம் என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். நெய்யை வழங்கும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றுதான் இத்தகைய கலப்படமான நெய்யை வழங்குகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

திருப்பதி தேவஸ்தானம் என்ன சொல்கிறது?

தற்போது திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் உறுப்பினர் ரமணாவும் சந்திரபாபு நாயுடு கூறுவது உண்மைதான் என்று குறிப்பிட்டுள்ளார். “ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் கந்தரபு முரளி, ஆந்திர முதல்வரின் கருத்தை விமர்சனம் செய்துள்ளார். லட்டுவில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவது திருமலை தேவஸ்தான ஊழியர்களை அவமதிக்கும் செயல். தேவஸ்தானத்தில் இருக்கும் ஆய்வகத்தில் அனைத்து விதமான உணவுப் பொருட்களும் முறையாக சோதிக்கப்பட்டே எந்தவிதமான பிரசாதமும் தயாரிக்கப்படுகிறது. பரிசோதனைகள் முடிவுற்ற பிறகே பயன்பாட்டிற்கும் வைக்கப்படுகிறது. மத்திய அரசின் குழுவால் சோதிக்கப்படும் உணவுப் பொருட்கள் முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே பிரசாதத்திற்கு வழங்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பதில் என்ன?

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராகப் பணியாற்றிய ஒய்.வி. சுப்பாரெட்டி, சந்திரபாபுவின் கருத்துகளுக்கு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

“கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் திருமலாவின் புனிதத்தையும் சேதப்படுத்தும் வகையில் பேசி சந்திரபாபு மிகப்பெரிய பாவத்தைச் செய்துவிட்டார்” என்று சுப்பாரெட்டி கூறியுள்ளார். சந்திரபாபுவின் கருத்து மிகவும் மோசமானது என்று தனது எக்ஸ் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

பாஜக நிலைப்பாடு என்ன?

ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வணிகர் சங்கத் தலைவர்களும் லட்டு சர்ச்சை தொடர்பாக தங்களின் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, “தெலுங்கு தேசம் கட்சியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இந்து மக்களின் நம்பிக்கையைக் காயப்படுத்தி அரசியல் செய்து வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து இதை விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். முதல்வராக இருக்கும் சந்திரபாபு, லட்டு பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது எனக் கூறியிருப்பது வருத்தமடைய வைக்கிறது, மேலும் திருப்பதியின் மாண்பு மற்றும் புனிதத்திற்கு கலங்கம் விளைவிப்பதாக அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான தலைவருமான லக்‌ஷமணன், “லட்டுவில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. மொத்த இந்து சமூகமும் இந்தச் செயலை கண்டிக்கிறது. என்.டி.ஏ கூட்டணியில் ஆட்சி அமைத்திருக்கும் சந்திரபாபு, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...