கிறிஸ்டோபர் பிரான்சிஸ்
திருஅவையின் 266வது திருத்தந்தையான திருத்தந்தை பிரான்சிஸ், அமெரிக்கக் கண்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை. நவீன காலத்தில் ஐரோப்பியரல்லாத முதல் திருத்தந்தை. திருஅவையில் திருத்தந்தையாகிய முதல் இயேசு சபைத் துறவி. திருத்தந்தையர் வரலாற்றில் முதன்முறையாக பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்தவர். பேருந்தில் பயணம் செய்ய விரும்புகிறவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நுரையீரலுடன் வாழ்ந்து வருபவர். நோய் காரணமாக இளவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்டுவிட்டது. 2001ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயாளிகளின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டவர். இத்தாலியம், இஸ்பானியம், ஜெர்மானியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகள் தெரிந்தவர். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சிறிய வீட்டில், தனது உணவைத் தானே சமைத்தவர். மாற்றுத்திறனாளியான ஓர் இயேசு சபை துறவியுடன் அவ்வீட்டில் வாழ்ந்து வந்தவர். திருத்தந்தையான பின்னும், திருத்தந்தையர்க்கான மாளிகையை ஒதுக்கிவிட்டு, சாந்தா மார்த்தா இல்லத்தில் ஏனைய திருஅவை அருள்பணியாளர்களுடன் தங்கி வந்தவர். புவனோஸ் ஐரெஸ் நகரின் சேரிகளை அடிக்கடிச் சந்தித்து வந்தவர். திருஅவைக் கோட்பாடுகளில் பற்றுள்ளவர். ஆயினும், திருமணமாகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் திருமுழுக்குக் கொடுப்பதற்கு மறுத்த குருக்களைக் கடிந்துகொண்டவர். கர்தினாலாக உயர்த்தப்பட்ட பின்னரும் சாதாரண குருக்கள் அணியும் இடுப்புக் கச்சையை அணிந்தவர்.
2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இலத்தீன் அமெரிக்க மக்கள் தொகையுள் 58.7 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். உலக மொத்த கத்தோலிக்கர்களுள் 47.8 விழுக்காட்டினர் இலத்தீன் அமெரிக்காவில் வாழ்கின்றனர். இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள பராகுவாய், பெரு, கொலம்பியா, மற்றும் அர்ஜெண்டினாவில் வாழும் மக்களுள் நான்கில் மூன்று பகுதியினர் கத்தோலிக்கர். கத்தோலிக்கர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட அர்ஜெண்டினாவில் இருந்துதான் 266வது திருத்தந்தை 2013ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி மாலை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 731 முதல் 741ஆம் ஆண்டுவரை திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை மூன்றாம் கிரகரிக்குப்பின் ஐரோப்பாவிற்கு வெளியேயிருந்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். திருத்தந்தை மூன்றாம் கிரகரி சிரியாவில் பிறந்தவர் என்றால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களோ அர்ஜெண்டினாவில் பிறந்தவர்.
இவரின் வரலாற்றைப் பார்த்தோமானால், 1936ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி Argentina நாட்டின் Buenos Aires நகரில் ஐந்து குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை இரயில் துறையில் பணிபுரிந்த ஓர் இத்தாலியர். ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்கள் வேதியியல் துறையில் பட்டம் பெற்றபின், 1958ஆம் ஆண்டு தனது 22வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார்.
தத்துவ இயலிலும், மனநல இயலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்ற இவர், Buenos Airesல் உள்ள Colegio del Salvador என்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1969ஆம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட ஹோர்கே (ஜார்ஜ்), 1973ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு முடிய Argentina இயேசு சபை மாநிலத்தின் தலைவராகப் பணியாற்றினார். 1992ம் ஆண்டு Buenos Aires உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 1998ஆம் ஆண்டு முதல் அந்த உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுபேற்றார். புனித திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் 2001ஆம் ஆண்டு இவரை கர்தினாலாக உயர்த்தினார்.
திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி தன் பதவி விலகலை அறிவித்து அதே மாதம் 28ஆம் தேதி பொறுப்பிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தை பற்றிய செய்திக்காக உலகம் காத்திருந்தது. கத்தோலிக்கர் மட்டுமல்ல, அனைத்து மக்களுமே இச்செய்தியை எதிர்பார்த்திருந்தனர். புதிய திருத்தந்தை பற்றிய செய்திகளை அனைத்து மின்னியல் ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் முண்டியடித்துக் கொண்டு வெளியிட்டு வந்தன. செய்தி வேட்டையில் ஈடுபட்டிருந்த உலகின் அனைத்து ஊடகங்களின் பார்வையும் அப்போது வத்திக்கானை நோக்கியே இருந்தது.
2013, மார்ச் 13 புதன் மாலை 7.05 மணிக்குத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இலத்தீன் அமெரிக்காவில் இருந்து திருத்தந்தை தெரிவு செய்யப்பட்டமையானது கத்தோலிக்க திருஅவையிலும், உலகத்திலும் இந்தப் பகுதியின் வளர்ந்துவரும் தாக்கத்தைக் காட்டுவதாக திருஅவை அதிகாரிகளும் உலகத் தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர். பிரேசில், மெக்சிகோ, கொலம்பியா, அர்ஜெண்டினா, பெரு, வெனிசுவெலா, சிலே, ஈக்குவாடோர், குவாத்தமாலா, கியூபா போன்ற 23 நாடுகளை உள்ளடக்கிய பகுதியே இலத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகின்றது.
மார்ச் 19ஆம் தேதி, புனித யோசேப்பு திருவிழாவன்று காலை 9.30 மணிக்கு திருத்தந்தையின் பணியேற்பு திருப்பலி இடம்பெற்றது. 23ஆம் தேதி சனிக்கிழமையன்றே ஹெலிகாப்டரில் திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தெல் கந்தோல்ஃபோ சென்று அங்கு தங்கியிருந்த முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பின்னணியை நோக்கும்போது இவர் மூன்று வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தந்தையாக தடம் பதித்துள்ளார். ஒன்று அவருடைய தாயகம், மற்றையது அவர் சார்ந்திருக்கும் துறவு சபை, மூன்றாவது அவர் தேர்ந்தெடுத்துள்ள பெயர்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றாகிய அர்ஜென்டினா நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஒருவர் திருத்தந்தை என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.
அடுத்து, கத்தோலிக்க திருஅவையின் மிகப்பெரும் துறவு சபைகளில் ஒன்றாகிய இயேசு சபையில் இருந்து இவரே முதன் முதலாக திருத்தந்தையாக வந்துள்ளார்.
மூன்றாவதாக, திருஅவை வரலாற்றில் பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்து கொண்ட முதல் திருத்தந்தையாகவும் இவர் விளங்குகின்றார். புனித பிரான்சிஸ் அசிசி என்ற புனிதரின் பண்புகள் மிகவும் உயர்ந்தவை. ஏழைகள்பால் இரக்கம், எளிமை, தாழ்மை, கட்டுப்பாடு, திருச்சபையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அவா போன்ற பண்புகளால் அணி செய்யப்பட்டவர் புனித பிரான்சிஸ் அசிசி. இவருடைய பெயரைத் தேர்ந்தெடுத்ததன் வழியாக புதிய திருத்தந்தையும் அப்புனிதரின் அடிச்சுவட்டைப் பின்பற்ற முனைந்து வெற்றியும் கண்டார்.
இன்றைய உலகத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப ஒத்து ஓடுகின்ற ஒருவராக அல்லாமல் திருஅவையின் அடிப்படைக் கொள்கைகளை தக்கவைக்கக்கூடிய, நிலைநாட்டக்கூடிய ஒருவராகவும், உலகத்தின் மனசாட்சியாக இருந்து அநீதிகள், அடக்குமுறைகளுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய ஒருவராகவும் நம் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் நோக்கப்பட்டார்.
நம் திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீவிரத்தன்மை அற்ற ஒரு மிதவாதியாகவே நோக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஒருவரையே பெரும்பான்மையான கத்தோலிக்கர் எதிர்பார்த்தனர். காரணம், இன்றைய உலகின் தீவிரமான புதுமையான மாற்றங்களுக்கு மத்தியில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய ஒரு திருத்தந்தை தேவை என உணரப்பட்டது.