தமிழ்நாட்டில் சென்னை, தூத்துக்குடி உட்பட சில கடலோர பகுதிகள் காலநிலை மாற்றம் காரணமாக 2040க்குள் கடலுக்குள் மூழ்கும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது தீவிர பிரச்னையாக இருக்கிறது. இதற்கு காரணம் பூமியன் வெப்பநிலை உயர்வுதான். தொழிற்சாலைகள், வாகன புகை, கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியேற்றும் மின்சாதன பொருட்களின் பயன்பாடு ஆகியவை பூமியின் வெப்பத்தை உயர்த்துகிறது. பூமி சூடாவதால் அண்டார்டிகா, ஆர்டிக் என துருவ பகுதியில் உள்ள பனி வேகமாக கரைகிறது. இதனால் உலகம் முழுவதும் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்கிறது. இது தொடர்பாக உலகளவில் விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பெங்களூரை சேர்ந்த ‘அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம்’ (CSTEP) எனும் ஆராய்ச்சி அமைப்பு சென்னை உட்பட பல கடலோர நகரங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டம் வேகமாக உயர்கிறது என்றும், இதனால் வரும் 2040ம் ஆண்டுக்குள் மும்பை, புதுச்சேரியின் ஏனம் பகுதி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களின் 10% பகுதிகள் கடலுக்குள் மூழ்கிவிடும் என்று எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை 2040க்குள் 5-10% நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கிவிடும். சென்னையை தவிர கொச்சி மங்களூர், விசாகப்பட்டினம், ஹல்டியா, உடுப்பி, பூரி உள்ளிட்ட பகுதிகளும் 2040க்குள் 1-5% நிலப்பரப்பை இழந்துவிடும். இது தென்னிந்தியாவின் சுற்றுலாவை கடுமையாக பாதிக்கும்.
இப்படியே போனால் 2100ஆம் ஆண்டில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு கடுமையாக இருக்கும். இந்த பகுதிகளில் உள்ள பவளப்பாறைகள் அழிந்துவிடும். சதுப்பு நிலங்கள் காணாமல் போய்விடும். இவையெல்லாம் சூழலியலை சமமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2050ஆம் ஆண்டில் கடலோர நகரங்களில் வசிக்கும் 80 கோடிக்கும் அதிகமான, அதாவது உலக மக்கள் தொகையில் 10 சதவிகித மக்கள் பெரும் ஆபத்தை எதிர்கொள்வார்கள் என்று CSTEP எச்சரித்துள்ளது.