No menu items!

ஹேமா கமிட்டி அறிக்கை – மவுனம் கலைத்த மம்முட்டி, மோகன்லால்

ஹேமா கமிட்டி அறிக்கை – மவுனம் கலைத்த மம்முட்டி, மோகன்லால்

ஹேமா கமிட்டியின் அறிக்கை தொடர்பாக மலையாளத்தின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரிக்க கேரள அரசு ஹேமா கமிட்டி என்ற அமைப்பை அமைத்திருந்தது. அந்த அமைப்பின் விசாரணை அறிக்கை சமீபத்தில் தாக்கலானது. இதைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் புயல் வீசியது. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் திரை அமைப்புகளில் தாங்கள் வகித்த பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

மலையாள சினிமாவில் அதிகார மையம் இல்லை – மம்முட்டி

இந்த விவகாரம் தொடர்பாக மலையாள திரையுலகின் மெகா ஸ்டாரான மம்முட்டி தனது மவுனத்தை கலைத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மம்முட்டி வெளியிட்ட பதிவு..
சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. சமூகத்தில் உள்ள நல்லது கெட்டது திரைத்துறையிலும் உள்ளது. நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் முழு வடிவம் நீதிமன்றத்தில் முன் உள்ளது. இதுகுறித்து காவல்துறையின் நேர்மையாக விசாரணைக்குப்பின் நீதிமன்றம் தண்டனைகளை முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகார மையம் [பவர்ஹவுஸ்] என்று எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் முதலில் பதிலளிக்கட்டும் என்றுதான் நான் காத்திருந்தேன்.

ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளையும், தீர்வுகளையும் நான் முழுமனதோடு வரவேற்கிறேன். திரைத்துறையில் உள்ள அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்து இதை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இது. எல்லாவற்றிற்கும் மேலாக சினிமா உயிர்போடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எங்களை அன்னியப்படுத்தாதீர்கள் – மோகன்லால்

ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடிகரும், கேரள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என் மனைவியின் அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் நான் வெளியூரில் இருந்தேன். அதனால்தான் உங்களிடம் பேசுவதற்கு காலதாமதம் ஆகிவிட்டது. சினிமா சமூகத்தின் ஒரு பகுதியாகும். மற்ற இடங்களில் நிகழுவது இங்கும் நடக்கிறது. அம்மா’ அமைப்பு தொழிலாளர் யூனியன் அல்ல… உறுப்பினர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட அமைப்பாகும். மலையாள சினிமாத்துறையில் சுமார் 21 அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளிடம் கேள்வி கேட்காமல் அம்மா’ அமைப்பிடம் மட்டுமே கேள்வி எழுப்புவது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. சினிமாவில் பவர் குரூப் பற்றி எனக்கு தெரியாது. அப்படி ஒன்று இருப்பதை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

மலையாள சினிமாத் துறையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். `அம்மா’ அமைப்பின் நிர்வாகிகள் ராஜினாமா செய்தது தோல்வியோ, இந்த பிரச்சினையில் இருந்து ஒளிந்து ஓடுவதற்கோ அல்ல. எங்களை நோக்கி தேவையில்லாமல் குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஹேமா கமிட்டி அறிக்கையில் நிறைய அறிவுறுத்தல்கள் உள்ளன. இந்த கமிட்டி நல்ல விஷயத்துக்காகத்தான் எனத் தோன்றுகின்றது.

சினிமாத்துறையை நல்ல நிலைக்கு கொண்டுசெல்லும் நல்ல அறிவுறுத்தல்கள் அதில் உள்ளன. அதே நேரத்தில் அந்த அறிக்கையின் முடிவுகளுக்காக ஒரு அமைப்பை மட்டும் சிலுவையில் அறைவது சரியல்ல. பிற மொழி சினிமாக்களிலும் ஹேமா கமிட்டி போன்ற அமைப்பு ஆய்வு செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் உள்ளது. அனைவருக்கும் சமநீதி ஏற்பட வேண்டும்.

நான் ஒருவன் நினைத்தால் சட்டத்தை மாற்ற முடியாது. இந்த பின்னடைவை சரிசெய்து மலையாள சினிமாத் துறையை புதுப்பிக்க வேண்டும். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு தனியாக அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அம்மா’ அமைப்பின் தலைவர் என்ற முறையில் அல்ல அதிக காலம் மலையாள சினிமாவில் இருப்பவன் என்ற நிலையில் நான் பேசுகிறேன். எனக்கு இந்த விஷயத்தில் மிக அதிகமான வருத்தம் உண்டு. இந்தச் செய்தி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சென்று மலையாள சினிமா தகர்ந்துபோக காரணம் ஆகிவிடக்கூடாது. நான் சினிமாவுக்கு வந்தபோது எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. நிறைய நல்ல மனது உள்ளவர்கள் நிறைந்த துறைதான் இது. அரசும், போலீஸும் குற்றம் செய்தவர்களுக்கு எதிராக உள்ளது. என்னிடம் உங்கள் கேள்விகளுக்கு பதில் இல்லை. சினிமாவில் உள்ளவர்களின் பாதுகாப்புக்காகத்தான்அம்மா’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எங்களை அன்னியப்படுத்தாதீர்கள்.

இவ்வாறு மோகன்லால் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...